உலகம்

சிஷ்யைகளிடம் பாலியல் சீண்டல் : வழக்கில் சிக்கிய புத்த மதச் சாமியார் - திடீர் மரணம்

தாய்லாந்தில் வசித்து வந்தவர் பிரபல புத்ததுறவி சோங்யால் லேக்கல். வயது 72. இவர் சோங்கல் ரிம்போசே என்றும் அழைக்கப்பட்டு வந்தார். 1947ல் திபெத்தில் பிறந்த இவர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு மதம் குறித்த ஆய்வு படிப்பை முடித்தவர்.

திபெத்திய வாழ்க்கை மற்றும் இறப்பு என்ற புத்தகத்தை இவர் எழுதினார். இந்தப் புத்தகம் 30 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இந்த நூலின் ஒலிப்பேழையும் விற்பனையில் சாதனைப் படைத்தது.

இதனைத் தொடர்ந்து இவரை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர ஆரம்பித்தனர். முகநூல், காணொளிகளில் இவரது சொற்பொழிவுகள் பிரபலமாயின. உலகெங்கும் 23 நாடுகளில் இவருக்கு ஆதரவாளர்கள் பெருகினர்.

இவருடைய சீடர்கள், சோங்யாலை 13வது தலாய் லாமா குருவின் மறுபிறவி என்று நம்பி வந்தனர். இவருடைய புகழும் பரவியது. இந்நிலையில், கடந்த 1994ம் ஆண்டு பெண் சீடர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். நீதிமன்றத்திற்கு வெளியே இந்த வழக்கினை சோங்யால் தீர்த்துக் கொண்டார்.

இதன்தொடர்ச்சியாக பல இளம்பெண்கள் சோங்யால் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். ஆதாரம் இல்லாததால் சோங்யாலுக்கு எந்தவித தண்டனையும் கிடைக்கவில்லை.

ஆனால், புத்த விசாரணை ஆணையம் சோங்யாலுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியது. பல்வேறு புகார்கள் உண்மை என்ற போதும், குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இது ஒருபக்கம் இருக்க, சோங்யாலுக்கு ஆதரவாளர்கள் பெருகி அவர் பிரபலமான புத்ததுறவியாக அடையாளம் காணப்பட்டார்.

தலாய் லாமாவுடன் சோங்யால்

எழுத்தாளர் மேரி ஃபின்னிகன் என்பவர், திபெத்திய பௌத்த மதத்தில் பாலியல் மற்றும் வன்முறை என்ற ஆய்வு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், புத்ததுறவி சோங்யாலை ஒரு கவர்ச்சியான, இரக்கமற்ற தலைவர் என்று எழுதினார். இதனடிப்படையிலும் சோங்யால் பரபரப்பாக பேசப்பட்டவர்.

இவ்வாறாக சர்ச்சையின் நெருங்கிய நண்பராக இருந்த சோங்யால் தாய்லாந்தில் நேற்று காலமானார். அவருக்கு புற்றுநோய் இருந்ததாகவும் அதன்காரணமாக அவர் இறந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.