உலகம்

இதற்கு மேல் இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை - இம்ரான்கான் வருத்தம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு சட்டப்பிரிவுகளை ரத்து செய்தும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

மோடி அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காஷ்மீர் பிரச்னையை சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

காஷ்மீர் பிரச்சனையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்க வேண்டும் என உலகநாடுகள் கோரிக்கை வைத்தன. இந்நிலையில், இந்தியாவுடன் பேசுவதற்கு இனி ஒன்றும் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நியுயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில், ''பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது. ஆனால், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நம்பத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா கூறிவருகிறது.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். இனிமேல் செய்வதற்கு ஏதும் இல்லை. இந்தியா தொடர்ந்து குறை கூறி வருகிறது. இந்தியாவில் உள்ளவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே இந்தியா இவ்வாறு செய்கிறது. இதற்குமேல் இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை'' என அவர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானியருக்கு இம்ரான்கான் அறிவுறுத்தி உள்ளார்.