உலகம்

தூத்துக்குடியில் 13; உலகம் முழுவதும் 164 - படுகொலை செய்யப்படும் சூழலியல் போராளிகள்!

இந்தியாவில் சூழலியாளர்கள் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாப்போர், அதனைப் பாதுகாக்க வலியுறுத்திப் போராடுபவர்கள் மீது நடக்கும் கொடூரமான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அண்மையில் கூட கரூர் மாவட்டத்தில் ஏரியைப் பாதுகாக்க நினைத்த சமூக செயற்பாட்டாளர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனைத் தடுக்கவேண்டிய அரசுகள் அமைதியாக இருப்பது நில ஆக்கிரமிப்பாளர்கள், வளங்களைச் சுரண்ட நினைப்பவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது.

இந்தியாவில் தான் இந்த பிரச்சனை நீடிக்கிறது என்றால் உலகம் முழுவதும் வளங்களைப் பாதுகாக்க நினைப்பவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக குளோபல் விட்னஸ் (Global Witness) என்ற சர்வதேச அமைப்பு சமீபத்தில் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அமைப்பு கடந்த 2004ம் ஆண்டு முதல் சுற்றுச் சூழலை காக்க, உலகம் முழுதும் நடைபெறும் போராட்டம் மற்றும் போராட்டத்தை முன் நின்று நடத்தும் சூழலியலாளர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற விவரங்களை வெளியிட்டு வருகிறது.

தற்போது அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “உலகின் பல்வேறு பகுதியில், சுரங்கப் பணிகள், விலங்கு வேட்டைத் தடுப்பு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை, காடுகளை அழிக்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களை எதிர்த்து நேரடியாகக் களத்தில் போராடியவர்கள், மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியவர்கள், அரசாங்கத்தாலோ, தனியார் பெரு முதலாளிகளோ கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலைகள் கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது” என்று அதிர வைக்கிறது.

அதில் உள்ள தகவலின் படி, உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலவுரிமை பாதுகாப்பு என தொடர்ந்து வளங்களைப் பாதுகாக்கப் போராடிய 19 நாடுகளைச் சேர்ந்த 164 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் எடுத்த புள்ளி விவரமாகும். இதில் வாரத்திற்கு மூன்று பேர் கொல்லப்பட்டார்கள் என்றும் தெரிகிறது.

இந்த 19 நாடுகளில் அதிகபட்சமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதனையடுத்து கொலம்பியாவில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் 23 பேரும், பிரேசிலில் 20 பேரும், கவுதமாலாவில் 16 பேரும், மெக்சிகோவில் 14 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 40 பேரை அரசாங்கமே கொன்றதாகும் கூறுகிறது.

அரசாங்கம் கொன்ற பட்டியலில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தமிழக அரசு, காவல் துறையை ஏவி 13 பேரைச் சுட்டுக் கொன்ற சம்பவமும் இடம் பெற்றுள்ளது. இந்த 13 பேர் பெயர் பட்டியலுடன், சட்டவிரோதமாகத் தாதுமணலைக் கொள்ளை அடிப்பதனைத் தடுக்க முயன்ற நெல்லை காவலர் ஜெகதீசன் அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

”அரசாங்கம் இந்த கொலை சம்பவங்களைத் தடுக்க எந்த முனைப்பையும் காட்டவில்லை. மேலும் ஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்களுக்கும், அரசுகளுக்கும் மிகப்பெரிய அளவில் நிதியுதவி அளிக்கும் சர்வதேச வங்கிகள் கூட இந்த கொலை விவகாரத்தில் தலையிட மறுக்கின்றன. இது மிகவும் ஆபத்தான போக்கு இதற்கு குளோபல் விட்னஸ் அமைப்பு வருத்தம் தெரிவிக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

குளோபல் விட்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை படிக்க..

https://www.globalwitness.org/en/campaigns/environmental-activists/enemies-state/