Viral

கடுமையான போக்குவரத்து.. சிக்கி தவித்த ஆம்புலன்ஸ்.. கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கிய பெண் காவலர்! | VIDEO

ஆந்திர பிரதேசத்தின் ரங்கம்பேட்டை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் அம்த்லா ஜெயசாந்தி. இவர் கடந்த 17-ம் தேதி, காக்கிநாடாவில் நடைபெற்ற ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிக்காக வந்திருந்தார்.

அப்போது தனது கைக்குழந்தையை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு தனது வேலையை அவர் செய்து முடித்தார். பின்னர் பணி முடிந்து, தனது குழந்தையை தூக்கிக்கொண்டு ஜெயசாந்தி வீட்டிற்கு புறப்பட்டார். அந்த நேரத்தில் காக்கிநாடா - சமர்லகோட்டா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் மட்டுமின்றி, ஆம்புலன்சும் செல்ல முடியாத நிலையில் இருந்தது. இதனை கண்டு களத்தில் இறங்கிய காவலர் ஜெயசாந்தி, தனது குழந்தையை கையில் வைத்துக்கொண்டே சாலை போக்குவரத்தை சரி செய்தார்.

வாகன ஓட்டிகளை சமாதானப்படுத்தி, கை அசைவுகளால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். சில நிமிடங்களில் ஆம்புலன்ஸுக்கு தேவையான வழியை உருவாக்கி, அது விரைவாக செல்ல உதவினார். பெண் காவலர், கையில் குழந்தையோடு, பணி முடிந்த பிறகும் போக்குவரத்தை சரி செய்த நிகழ்வு குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.

அதே நேரத்தில் அந்த பகுதியில் டிராபிக் போலீஸ் இல்லாதது ஏன் என்றும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிகழ்வு ஆந்திராவில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: “நான் ஏ.ஆர்.ரகுமானுடன் நிற்கிறேன்” : கனிமொழி எம்.பி ஆதரவு!