Viral

CSK 5வது முறை சாம்பியன்.. சென்னையில் ஒருநாள் முழுவதும் இலவசமாக ஆட்டோ ஓட்டும் தோனி ரசிகர்!

16வது IPL தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இறுதிப்போட்டி கடந்த 28ஆம் தேதி விளையாடுவதாக இருந்த நிலையில், அகமதாபாத் மைதானத்தில் அன்றைய தினம் முழுவதும் மழை பெய்ததால் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் அணி களமிறங்கியது. சாஹா மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரின் அதிரடியால் குஜராத் அணி 20 ஓவர்களுக்கு 214 ரன்களை குவித்தது. பின்னர் சென்னை அணி 215 ரன் என்ற இலக்குடன் களம் இறங்கியது.

ஆனால் முதல் ஓவர் வீசிக் கொண்டிருக்கும்போதே மழை குறுக்கிட்டது. பின்னர் மழை நின்று ஒரு மணி நேரம் கழித்து டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் என்ற இலக்குடன் வெற்றியை நோக்கி களமிறங்கியது சென்னை அணி.

இந்த பரபரப்பான ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் களத்திலிருந்த ரவீந்திர ஜடேஜா`சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த வெற்றி மூலம் சென்னை அணி ஐ.பில் தொடரில் 5 வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது. இந்த வெற்றியைச் சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தோனியின் தீவிர ரசிகரான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சென்னை அணியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒரு நாள் முழுவதும் தனது ஆட்டோவில் இலவச பயணம் என அறிவித்து இயக்கி வருகிறார்.

பூந்தமல்லியில் ஆட்டோ ஓட்டி வரும் முருகேசன் என்பவர்தான் சென்னை அணியின் வெற்றியை அடுத்து ஒருநாள் முழுவதும் இலவசமாக ஆட்டோவை இயக்கி வருகிறார். இவரது ஆட்டோவில் சென்னை அணி ரசிகர்கள் மகிழ்ச்சியாக ஏறி சவாரி செய்து வருகின்றனர்.

Also Read: "அடுத்த ஆண்டு மட்டும் அல்ல, இந்த விதியால் தோனி அதிக ஆண்டுகள் ஆடுவார்" -பிராவோ ஆருடம் !