Viral

17 மணி நேரம் மகனை மொபைல் கேம் விளையாட வைத்த தந்தை.. ரஜினி பட பாணியில் நூதன தண்டனை.. - காரணம் என்ன ?

சுந்தர் சி இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் அருணாச்சலம். ரஜினி, செளந்தர்யா, ரகுவரன், விசு என பலரும் நடித்துள்ள இந்த படம் பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் தந்தை ரஜினி, மகன் ரஜினியிடம் ஒரு கதை சொல்வார்.

அதாவது "நான் ஒருமுறை என் அப்பாவுக்கு தெரியாமல் பீடி பிடித்தேன். இதனை பார்த்ததும் அவர் என்னை எதுவும் சொல்லவில்லை. மாறாக ஒரு அறை முழுவதும் பீடி வாங்கி வைத்து அதனை முழுவதுமாக தீர்க்க வேண்டும் என்றார். அவ்வளவுதான் நான் அன்றுடன் அது மேல் இருந்த ஆசை போய், இந்த பழக்கத்தையே விட்டுவிட்டேன்." என்பார்.

இந்த பாணியில் சீனாவில் மகன் ஒருவர் திருட்டு தனமாக மொபைல் கேம் விளையாடியாதல், அவரை 17 மணி நேரம் தொடர்ந்து வீடியோ கேம் விளையாட வைத்து தண்டனை வழங்கியுள்ளார். பொதுவாக தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மொபைல் போன்களை உபயோகப்படுத்துகின்றனர்.

குறிப்பாக இன்னும் சிலர் பெற்றோர்களுக்கு தெரியாமல் மொபைல் போன்களில் கேம்கள் விளையாடுகின்றனர். இதனால் வீட்டில் அடிக்கடி பெற்றோர்களுக்கு இடையே சண்டை ஏற்படும் வழக்கமும் உள்ளது. அந்த வகையில் சீனாவின் ஷென்சென் பகுதியை சேர்ந்த ஹுவாங் என்பவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு 11 வயதில் மகன் உள்ளார்.

இந்த நிலையில் மொபைல் கேம் விளையாடி வரும் இந்த சிறுவனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் அந்த சிறுவன் அனைவரும் தூங்கிய பிறகு மொபைல் போனை எடுத்து கேம் விளையாடி வந்துள்ளார். இப்படி ஒரு நாள் அவர் சுமார் நள்ளிரவு 1 மணி அளவில் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய படுக்கையில், மொபைல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதனை கண்ட அவரது தந்தை அவருக்கு தண்டனை கொடுக்க எண்ணியுள்ளார். அதன்படி அவரை அதே மொபைலில் கேம் விளையாடும்படி தொல்லை செய்துள்ளார். மகனும் வேறு வழியின்றி கேம் விளையாடியுள்ளார். இது சிறுவனுக்கு போர் அடிக்கவே தந்தையுடன் கூறியுள்ளார். ஆனால் விடாத தந்தை அவரை தொடர்ந்து கேம் விளையாடும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

இப்படியே அவர் தொடர்ந்து 1 அல்ல 2 அல்ல 17 மணி நேரம் வரை மொபைலில் கேம் விளையாடியுள்ளார். அந்த சிறுவன் தனது தந்தையிடம் மன்னிப்பு கேட்டு கதறியும் விடவில்லை அவரது தந்தை பல மணி நேரம் கழித்து சோர்வாக அந்த சிறுவன் வாந்தி எடுத்த பின்னரே, சிறுவனின் தண்டனையை நிறுத்தியுள்ளார் அவரது தந்தை.

இதையடுத்து சிறுவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இனி தான் இரவு 11 மணிக்கு முன் படுக்கைக்கு செல்வதாகவும், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு மொபைல் கேம் மற்றும் பொம்மைகளுடன் விளையாட மாட்டேன் என்றும் உறுதியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

முன்னதாக இதே போல் சீனாவில் 8 வயது சிறுவன் டிவி பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாதல், அவரை தூங்க விடாமல் இரவு முழுவதும் அவரது தந்தை டிவி பார்க்க வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 45 நாட்களில் 8வது சம்பவம்.. கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த குஜராத் நபர்.. சுருண்டு விழுந்து உயிரிழப்பு !