Viral

பனிப்பாறை ஏரி உடைந்தால் என்னவாகும்.. மனித இனம் அழியக்கூடுமா? - Glacial Lake பற்றி தெரியுமா ?

Glacial Lake தெரியுமா?

க்ளாசியல் லேக் என்பதை பனிப்பாறை ஏரி என சொல்லலாம். பனிப்பாறையில் எப்படி ஏரி உருவாகும்? அதிக பனியால் பனிப் படிமங்கள் படிந்து பாறைகளாகி விடுகின்றன. வெப்பம் அதிகமாகும் நேரங்களில் அந்த பாறைகள் உருகி ஏற்கனவே பனிப்பாறை இருந்த இடத்தில் வெற்றிடத்தை உருவாக்கும்.

அந்த வெற்றிடத்தில் பனிப்பாறைகள் உருகி ஓடி வரும் நீர் தேங்கி ஓர் ஏரியை உருவாக்கி விடுகிறது. பெரும்பாலான இத்தகைய பனிப்பாறை ஏரிகளுக்கு கரையாகவே பனிப்பாறைகள்தாம் இருக்கும். இயற்கையான அணை போல் பனிப்பாறைகள் தேக்கி வைக்கும் நீரைத்தான் Glacial Lake என்கிறோம்.

உலகளவில் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பதை கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். வெப்பம் உயர்வதற்கான முக்கியக் காரணங்கள் காடழிப்பு, நீர்நிலை அழிப்பு போன்றவற்றை சொன்னாலும் இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருக்கும் ஒற்றைக் காரணமாக சொல்லப்படுவது புதைபடிம எரிபொருள்.

அதாவது பெட்ரோல், டீசல் முதலியவற்றை பயன்படுத்திதான் நம் உற்பத்தி, வாழ்க்கை, அலுவலகம், போக்குவரத்து எல்லாமும் இருப்பதால் பெரும் அளவுக்கான புதைபடிம எரிபொருட்கள் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. விளைவாக அவை வெளியேற்றும் கரியமில வாயு வளிமண்டலத்தில் தேங்குகிறது.

பூமிக்குள் வரும் சூரிய வெளிச்சம் மீண்டும் வெளியேற முடியாமல் இந்த கரியமில வாயு வளிமண்டலத்தில் தேங்கி திரை கட்டுகிறது. அந்த திரையில் பிரதிபலித்து சூரிய வெளிச்சம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறது. அதாவது ஒரு முறை பூமிக்குள் வரும் சூரிய வெப்பம் இரட்டிப்பாக்கப்பட்டு பூமிக்கே திருப்பி அனுப்பப்படுகிறது.

இரட்டிப்பு சூரிய வெப்பம் பூமியின் வெப்பத்தை அதிகரிக்கிறது. விளைவாக, பனிப்பாறைகளை உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது. கடலோட்டம் மாறுகிறது. கடலை சார்ந்து உருவாகும் காலநிலையும் மாறுகிறது. கடந்த 25 வருடங்களாகவே இமயமலையில் அதீத மழையும் வழக்கத்தை மீறிய வெப்பமும் நிலவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றுக்கு நடுவேதான் ஒன்றிய அரசு அந்த இடங்களை மொட்டையாக சுரண்ட தனியாருக்கு தாரை வார்த்தது.

பனிப்பாறைகள் மிகவும் இலகுவானவை. சிறிய சரிவும் கூட திரண்டு avalanche எனப்படும் பேரழிவை உருவாக்க முடியும். பனிப்பாறைகள் அதிகரித்தால், அடிப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வெடித்து நகரும். லேசான ஆட்டம் கூட பனிப்பாறையை அசைத்து ஏரியை உடைத்துவிடக் கூடும். இத்தகைய இலகுத்தன்மை கொண்ட பனியை ஏற்கனவே காலநிலை மாற்றம் கரைத்து ஆபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் சூழலில், அங்கு பல தனியார் கட்டுமானங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. தொடர்ந்து கட்டப்பட்டும் வருகின்றன.

இனியும் பேரிடர்கள் வரத்தான் போகின்றன. மனித இனம் அழிந்து போகக் கூடச் செய்யலாம். ஆனால் அழிவுக்கு காரணமாக இருப்பது என்ன என்கிற உண்மையை அழியும்போதேனும் தெரிந்திருப்போமா என்பதே கேள்வி.

Also Read: பெண்ணின் திமிர் உண்மையில் ஆணின் திமிரா ? முதலாளித்துவத்தின் லாப சிந்தனைக்கு பெண் பலியாவது எப்படி ?