Viral

LIKES ஆசையில் விபரீதம்.. பாம்பு மீட்பு ஆர்வலர்களுக்கும், பாம்பு நல ஆர்வலர்களுக்கும் இது தெரியுமா ?

குடியிருப்பு பகுதிகளில் நுழையும் விஷப்பாம்புகளை பிடிக்க வனத்துறை கீழ் தகுதிவாய்ந்த நபர்கள் இருக்கும் போது வீர சாகத்திற்காக பலர் பாம்பு பிடிக்கச் சென்று தங்களில் உயிரை பறிக்கொடுத்துள்ளனர். மேலும் ஃபோஸ்புக் லைக்ஸ் மோகத்தால் பாம்பு பிடிக்கச் செல்லும் போது பாம்பு கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதேநேரத்தில் சில சமூக ஆர்வலர்களில் கருணை கருத்து விவகாரத்தால் கிராமப்புற எளிய மக்கள் பாதிக்கும் சம்பவம் நடந்துள்ளது. இதனை விவரிக்கும் வகையில் முகநூலில் RS Prabu என்பவர் வெளியிட்டுள்ள பதிவு வரவேற்பை பெற்றுள்ளது.

இதுதொடர்பாக RS Prabu வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று எழுதிய பதிவு யாரோ சில வனவிலங்கு ஆர்வலர்களால் ரிப்போர்ட் அடிக்கப்பட்டதால், பேஸ்புக் அதை நீக்கிவிட்டது. அதில் சில குறிச் சொற்களை நீக்கிவிட்டு மறுபடியும் பகிர்கிறேன்.

பாம்பு மீட்பு ஆர்வலர்கள் அவ்வப்போது நகரங்களில் வீடு, அலுவலகங்களில் புகுந்த பாம்புகளைப் பிடித்து காட்டுக்குள் கொண்டுபோய் விடுகிறார்கள். ஒருசிலர் அவ்வப்போது பாம்பிடம் கொத்து வாங்குகிறார்கள். சிலர் இறந்தும் உள்ளனர்.

எங்கள் உறவினர் வீட்டில் நேற்று புகுந்த ஆறு அடி நீளமுள்ள சாரைப் பாம்பு ஒன்றைப் பிடித்துச் சென்ற 20 வயது மீட்பரை அது கடித்து விட்டது. "பரவால்ல, பார்த்துக்கறேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். இதுவே கடித்தது விரியனாகவோ, நாகமாகவோ இருந்தால் இன்று அவரைப் பார்க்க பலரும் வந்துபோய் கொண்டிப்பார்கள்; வரும்போது ஹார்லிக்ஸ் டப்பாவா, மாலை வாங்கி வருவதா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கவும் சாத்தியமுண்டு.

கடந்த வருடம் நண்பர் ஒருவரது அம்மா, தோட்டத்தில் மிளகாய் பறித்துக்கொண்டிருந்தபோது கட்டுவிரியன் காலில் கடித்துவிட்டது. உடன் வேலை செய்தவர்கள் எல்லோரும் சேர்ந்து அடுத்த அரை மணி நேரத்தில் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றும் காப்பாற்ற முடியவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் இன்னொரு நண்பரது அம்மாவைப் பாம்பு கடித்துவிட்டது. சிகிச்சை பெற்று பிழைத்துக் கொண்டார் என்றாலும் இரண்டு மணி நேரம் காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்திருந்தால் வீங்கி விடுகிறது என்பதால் நாற்காலிகளில. அமருவதையே விட்டுவிட்டார். எங்கு சென்றாலும் தரையில் கால்களை நீட்டி வைத்து உட்காரும்படியாக ஆகிவிட்டது.

சென்ற ஆண்டு எங்களுடைய வாடிக்கையாளர்களாக இருக்கும் பல விவசாயிகளுக்கு அவர்களது கால் அளவைக் கேட்டு அதற்கேற்ப Gum Boot வாங்கி அன்பளிப்பாக வழங்கியது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

பல விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் பாம்பு கடித்த பின் ஏற்பட்ட பின் விளைவுகள், அதனால் அவர்களது அன்றாட இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள், செலவுக் கணக்கு எல்லாம் கடிபட்ட இடங்களைக் காட்டி சொல்லியிருக்கிறார்கள்.

நம் ஊரில் பல இளைஞர்கள் self declared பாம்பு பிடி வீரர்களாக மாறி நாகம், விரியன் பாம்புகளைக் கையில் பிடித்துத் தூக்கி விளையாட்டுக் காட்டுவது, செல்லமாக அதன் தலையில் தட்டுவது அவ்வப்போது முத்தம் கொடுத்து கொத்து வாங்கி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு பொதுமக்களிடம் நிதி உதவி கோருவது என ஆர்வக்கோளாறுகளாகத் திரிகிறார்கள்.

பாம்பு ஆர்வலர்களோ நம் நாட்டில் 80% பாம்புகள் விஷமில்லாதவை, பொய்க்கடி ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லவே முயலும் எனவே கூடுமானவரை அவற்றைக் கொல்ல வேண்டாம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

கிராமப்புற மக்களுக்கு விஷமில்லாத பாம்புகள் எவை என நன்றாகவே தெரியும். ஆனாலும் சாரைப் பாம்பைக் கூர்ந்து கவனிக்கவில்லை என்றால் நாகம் போலவும் தெரியும் என்பதால் கண்டவுடன் அடித்துக் கொல்லப்படும் பட்டியலில் சாரையும் இருக்கிறது.

மற்றபடி தண்ணீர் பாம்புகள், பச்சைப் பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளிப் பாம்பு போன்றவற்றை யாரும்பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. விஷமுடைய பாம்புகளைப் பொறுத்தமட்டில் அவற்றை மீட்பது, பாதுகாப்பாக கைப்பற்றி வேறிடத்தில் விடுவது போன்ற ஆலோசனைகள், அறிவுரைகள் எல்லாம் மாடி வீடுகளிலும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் உட்கார்ந்திருப்போராலேயே வழங்கப்படுகிறது.

பாம்புக்குப் பால் ஊற்றி பணிவிடை செய்தால் ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் பலத்த சேதம் உண்டு. அதனால் ஏற்படும் அகால மரணங்களைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு "பாதுகாப்பாகக் கைப்பற்றி வேறிடத்தில் விடுவது" போன்ற ஆலோசனைகள் சலிப்பூட்டுவதாகவும் சில நேரத்தில் குரூரமானவையாகவுமே தெரிகின்றன.

தெருநாய்களுக்கு சோறு போட்டு தெருவிலேயே விட்டுவிடச் சொல்லும் மேல்தட்டு கோமான்கள், சீமாட்டிகள் சொல்லும் ஆலோசனையைப் போன்றது அது. முன்னர் நான் பணிபுரிந்த நிறுவனத்தில் ஐதராபாத் பண்ணையில் பாம்பு பிடிக்கும் snake catcher கருவி ஒன்றை சுவரில் மாட்டி வைத்திருப்பார்கள்.

அதில் தெலுங்கு, ஆங்கிலம், இந்தியில் பெயர் எழுதி வைத்திருப்பதோடு அலுவலக மேலாளர் அறையில் தனியாக ஒரு சிறிய குளிர்பதனப் பெட்டியில் விஷமுறிவு மருந்தையும் வைத்திருப்பார்கள். அங்குள்ள மேலாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பாம்புகளை அடையாளங்கண்டு முதலுதவி செய்யும் பயிற்சிகள் மருத்துவர்களால் முறையாக ஆண்டுதோறும் அளிக்கப்படும்.

அதைப் பார்த்துவிட்டு வந்து எங்களுடைய வீட்டிலும், கம்பெனி கொட்டகையிலும் snake catcher கருவி வாங்கி மாட்டி வைத்திருந்தது பலமுறை பயன்பட்டிருக்கிறது.

வெறும் கொக்கி போன்ற வளைந்த கம்பியை வைத்துப் பிடிப்பது விரியன் போன்ற மெதுவாக நகரக்கூடிய பாம்புகளுக்கு ஏற்றதாக இருக்கலாம். சாரை, நாகம் போன்ற வேகமாக நகரக்கூடிய உயிரிகளுக்குக் கவ்விப் பிடிக்கும் கருவிகளே ஏற்றது.

நம் நாட்டைப் பொறுத்தவரை தேவைக்கு அதிகமாகவே விஷப் பாம்புகள் இருக்கின்றன. அதன் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவோ, அழிந்துவரும் உயிரினமாகவோ கருதப்படவில்லை. மக்கள் வசிப்பிடங்களுக்குள் புகுந்த பாம்புகளைக் பாதுகாப்பாகப் பிடித்து வேறிடத்தில் விடுவதெல்லாம் தெருநாய்களைப் பிடித்து ஆண்மை நீக்கம் செய்து தெருவிலேயே விட்டு விடுவதைப் போன்றதே.

பாதுகாப்பான இடம் என்று ஊருக்கு வெளியில் ஏதாவது புதர்களில், கரடு ஓரங்களில் பிடிபட்ட பாம்பை விட்டு விடுகிறார்கள். அங்கிருந்து ஓரிண்டு கிலோமீட்டர் வந்தாலே மக்கள் குடியிருப்புப் பகுதிகள் வந்துவிடுகின்றன.

மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் 'பாம்பு ஆர்வலர்கள்' என்ற பெயரில் வரும் அறியாப்பிள்ளைகளை வைத்து அவற்றைப் பிடித்து ஊரகப் பகுதிகளில் கொண்டுபோய் விடுவிப்பதன் மூலம் 'எவன் எக்கேடு கெட்டால் என்ன, எங்களுக்குப் பிரச்சினை இல்லாம இருந்தா போதும்' என்கிற மனநிலையை வெளிப்படுத்துகிறார்களே ஒழிய பாம்புகள் மீதான அக்கறையெல்லாம் இல்லை.

தெருநாய்களைப் பாதுகாப்பது, பாம்புகளைப் பாதுகாப்பது போன்றவை எல்லாமே பசுக்களைப் பாதுகாப்பதற்காக கிளம்பி வரும் அரியவகை சைவ உணவு விரும்பிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டுப் பிரச்சாரமாக முன்னெடுக்கப்படுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

இந்த உலகில் மனிதர்கள் மட்டுமே வாழத் தகுதியானவர்கள் என்கிற, மற்ற உயிரினங்களுக்கு முன்னுரிமை இல்லாத anthropogenic மனநிலை தவறு என்றும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப வேண்டும் என்றும் சைவ உணவாளர்கள் சொல்கிறார்கள்.

வேட்டையாடி குகைகளில் வாழ்ந்த காலம் தொட்டு நமக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய விலங்குகளை, கிருமிகளை ஏதாவது ஒரு வழியில் அடக்க முடியாவிட்டால் நமது தரப்பில் உயிரிழப்பு நிச்சயம் என்று தெரியும்போது ஒரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரக்கூடியதையே நம் மனம் விரும்பும்.

அதிலும் அந்த ஆபத்தான உயிரினங்களைத் தினமும் எதிர்கொள்ளும் front line population-க்கு பிரச்சினையை முற்றிலுமாக முடிக்க வேண்டும் அல்லது அந்த இடத்தைவிட்டு புலம்பெயர்ந்து சென்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

ஜிம் கார்பெட் கட்டுரைகளில் இத்தகைய சம்பவங்களைக் குறிப்பட்டிருப்பார். கழுகு ஆர்வலர்கள் என்று ஒரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்களால் டைக்ளோஃபீனாக் என்ற மருந்து பெயரைச் சொல்லாமல் அரை மணி நேரம் பேச முடியாது. இதுவரைக்கும் ஊருக்கு வெளியில் செத்து அழுகிக் கிடக்கிற பசு, எருமை, ஆடுகளின் பிணங்களை எந்த ஊரிலுமே நான் பார்த்ததே இல்லை. கிராமம் கிராமமாகப் பயணிக்கும் பலரிடமும், அங்குள்ள விவசாயிகளிடமும் ஏதாவது செத்த மாடுகள் அழுகிக் கிடந்து பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் இதுவரைக்கும் பார்த்ததில்லை என்றே சொல்கிறார்கள்.

ஆனால் கால்நடைகளில் பயன்படுத்தப்பட்ட டைக்ளோஃபீனாக் வலி மருந்துதான் கழுகுகள் அழியக் காரணம் என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். மாடுகளுக்கு உடல் நலமில்லை என்று கூப்பிட்டால் உடனே வருவதற்கு கடந்த பத்து ஆண்டுகளாக ஓரளவுக்குக் கால்நடை மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதற்கு முன் இன்று சொல்லிவிட்டால் மறுநாள் மாலை அலுவலகம் முடிந்தபிறகு கால்நடை மருத்துவரின் உதவியாளர்கள் வந்து சேர்வார்கள்.

பெரும்பாலும் 'ஆள் வரச்சொல்லி கறிக்கு அனுப்பிடுங்க, இது தேராது' என்பதே அவர்களது பதிலாக இருக்கும். இறப்பதற்கு முன்னர் கறிக்கு அனுப்புவது, இறந்துவிட்டால் முறையாகப் புதைத்து விடுவது என்பதே நடைமுறை. தோலை உறித்துக்கொண்டு உடலை வீசி எறிந்துவிட்டுச் செல்வார்கள் அதைக் கழுகுகள் உண்ணும் என்பது 1% அளவில் இருந்தாலே பெரிய விசயம்.

கால்நடை வளர்ப்பு, அதிலுள்ள நடைமுறைப் பிரச்சினைகள் எதுவுமே தெரியாமல் மாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட வலி மருந்துகள்தான் கழுகுகள் அழியக் காரணம் என்று உளறுபவர்கள் ஒரு பக்கம்.

சிட்டுக்குருவி ஆர்வலர்கள், பாம்பு ஆர்வலர்கள், கழுகு ஆர்வலர்கள் என்று பலவகையான இயற்கை ஆர்வலர்கள் சுற்றி வருகிறார்கள். இவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு பக்கத்துத் தோட்டத்தில் இருந்து கத்துவது எருமையா, பசு மாடா என்று கேட்டால் நிச்சயமாக சொல்லத் தெரியாது. ஒரு கேமராவைத் தோளில் மாட்டிக்கொண்டு வந்து நம் உயிரை வாங்குகிறார்கள்.

Also Read: “வழக்கை போட்டால் அடங்கிவிடுவான் என நினைக்கிறார்கள்.. 2G வழக்கை சந்திக்க தயார்” : ஆ.ராசா MP ஆவேச பேச்சு !