Viral
நகைச்சுவை உணர்வு ஒரு பிரச்சினையின் தீவிரத்தை நீர்த்துப் போக செய்துவிடுமா?
அங்கதத்தின் பயன் என்ன?
அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது அரசியல், சமூகம் அவற்றின் சிக்கல்கள் என எல்லாம். அதையும் மீறி அவற்றின் மீதான விமர்சனத்தை எப்படி வெளிப்படுத்துவது? கோபமாக வெளிப்படுத்தலாம் என்றாலும் எத்தனை நாளுக்கு? சுரணையே இல்லாமல் அவையும் அப்படியே இருக்கின்றன எருமைமாடுகள் போல். நம் கோபம் அதிகரித்துதான் கொண்டிருக்கிறது. விமர்சிக்காமலும் இருக்க முடியாது.
என்னதான் செய்யமுடியும்?
அவற்றை கொச்சைப்படுத்தலாம். கீழ்நிலைக்கு இறக்கி கிண்டலடிக்கலாம். இல்லை அவற்றின் இழிவை கொஞ்சம் கற்பனையின் துணை கொண்டு இதே கொச்சை, கிண்டல் ஆகியவற்றையும் கலந்து விமர்சிக்கலாம். இதுதான் அங்கதம் ஆகிறது.
அங்கதம் அதன் அளவில் முன் நின்று , பயன்படுத்தப்பட்ட காரணத்தை அழித்து விடுவதில்லை. சொல்லப் போனால், அந்த காரணத்தை இன்னும் பலர் ரசிக்கும் வகையில் அழகாக்கி மிளிரவே செய்யும்.
அங்கதம் ஒருவகையில் கயமைகள்மீது கொண்ட வெறுப்பு எனலாம். சிறுமைகள் கண்டு கொள்ளும் அலுப்பும்கூட.
இந்த சூழலில் நம் முன் இருப்பது இரண்டு கேள்விகள்.
எதிரிகளுக்கு வலிக்க வேண்டும். ஆனால் அடிக்கக்கூடாது. எப்படி செய்யலாம்? ஏனெனில் அடித்துவிட்டால் அவர்கள் வென்று விடுவார்கள். அவர்கள் விரும்பும் வெறுப்பு இந்த மண்ணில் விதைக்கப்பட்டு விடும். அப்படி நடக்க அனுமதித்துவிடக் கூடாது.
அடுத்தது, இன்னும் அவர்களை நம்பிக் கொண்டிருக்கும் பலருக்கு அவர்களின் சில்லறை புத்தியை எப்படி கொண்டு சேர்ப்பது? கவனிக்கவும். இந்த பலரில் பெரும்பாலும் அவர்களின் முகாமை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களையும் வென்றெடுக்க வேண்டியது அவசியம். கோபத்தால் இது கண்டிப்பாக சாத்தியம் இல்லை. கோபம் அந்த பலரை இன்னும் விலக்கி அவர்கள் பக்கமே அடரச் செய்து கொண்டிருக்கும்.
என்ன செய்யலாம்?
அங்கதம். Satire. Sarcasm. மெல்லிய நகைச்சுவை!
எத்தனை பெரிய நாஜியாக இருந்தாலும் Great Dictator படம் ஒரு இடத்திலாவது புன்னகையை வர வைத்துவிடும், இல்லையா? அப்படி வராதவர்களை விட்டு, புன்னகை வந்தவர்கள் மெல்ல விலக தொடங்குவார்கள் இல்லையா? நம் இலக்கு புன்னகை வராத hardcore நாஜிகள் அல்ல. புன்னகை வந்த softcore-களே!
அங்கதம் பிரச்சினையின் தீவிரத்தை நீர்த்துப் போக செய்துவிடாதா?
தமிழ்நாட்டில் இந்த அங்கதத்தை டீக்கடைகளில் நின்று பேசும் தமிழனிடம் நீங்கள் பார்க்கலாம். அவன் கொண்டாடும் தலைவனை, நடிகனை, கடவுளை என எதையும் அவனின் அங்கதம் விட்டுவைக்காது. அப்படித்தான் அவன் விருப்பையும் வெறுப்பையும் வெளிப்படுத்த பழகி இருக்கிறான். அப்படித்தான் அவனை எளிமையாக நாமும் சென்றடைய முடியும்.
ஆதலால், இந்துத்துவாவை வீழ்த்த இது சரியல்ல, அது சரியல்ல என்றெல்லாம் நமக்குள் விவாதம் வேண்டியதில்லை. அவர்களை வீழ்த்தும் எதுவும், எல்லாமும் நமக்கு ஆயுதமே!
Also Read
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி?
-
3 நாட்களுக்கு AI & Digital Marketing பயிற்சி... தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!