Viral
'அழகாக இருக்கிறாய்' .. நூற்றாண்டுகளாக பெண்ணை Belittling செய்து வரும் சமூகம்!
Belittling என ஒரு வார்த்தை இருக்கிறது. சிறுமைப்படுத்துதல் என அர்த்தம்.
சிறுமைப்படுத்துதல் என்பது பொதுவாக தகுதிக்குறைவை சுட்டிக்காட்ட செய்யப்படும் விஷயம். இதில் தகுதி என்பது எது, அதை யார் முடிவு செய்வது என்பதெல்லாம் மிகப்பெரிய அரசியல்.
தகுதிகள் என பார்க்கப்படுபவற்றின் பெரும்பான்மை சாதி, மதம், பாலினம், பணம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கப்படுவதே. சிறுமைப்படுத்துதலிலும் அவ்வாறே.
சிறுமைப்படுத்துதல் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகைகளில் நிகழ்ந்திருக்கின்றன.
கறுப்பின அடிமைமுறை, free thinking பெண்களை வாடிகன் கொன்றது, விதவைகள், பெண் தெய்வங்கள், இரட்டை குவளை முறை எனத் தொடங்கி, பின் வளர்ந்து, இட ஒதுக்கீட்டில் படிப்பவன் திறமையற்றவன், வெளிநாட்டவன் குளிக்க மாட்டான், கறுப்பினத்தவன் முரடன், மாட்டுக்கறி தின்றால் உடல் நாறும், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, மாதவிடாய் ரத்தம் மிருகங்களை வரவழைக்கும் என்பது வரை belittling பல வழிகளில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அவற்றில் ஒன்றுதான் பெண்ணை 'அழகாக இருக்கிறாய்' என்பதும்.
பெண் அழகு இல்லையா...? நிச்சயமாய் அழகுதான்.
பெரும்பாலான ஜீவராசிகளில் ஆண் ஜீவன்கள்தான் அழகு சூடியிருக்கும். தோகை, தந்தம், பிடரிமயிர் போல். மனித ஜீவராசியில் மட்டும் பெண்தான் அழகு. ஆண் ஜீவராசி அழகு கிடையாது. அதிகபட்சம் போனால், பெண் ஜீவராசியை பார்த்து, வியர்த்து விறுவிறுத்து, உடல் நடுங்கி, நாக்குழறி, தப்பு தப்பாக கவிதை பாடி, காதல் சொல்லும். அவ்வளவுதான் ஆண் ஜீவராசிக்கு சாத்தியம். இது உயிரியல் ரீதியானது. ஆகவே பெண்ணை அழகு என வர்ணிப்பதில் தவறே இல்லை. மனித ஆண், தோகை விரிக்கும் பாணி, அது மட்டும்தான்.
ஆனால் பெண்ணை அழகு என எங்கு சொல்வது என்பது ரொம்பவே முக்கியம்.
ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசுகையில், அறிவுப்பூர்வமான விவாத தளத்தில், பொதுவெளியில் கேள்வி கேட்கையில் எல்லாம் பெண்ணை அழகு என சொல்வது மடைமாற்றும் வேலை மாத்திரமே. அப்பெண் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்றாலோ அவர் சொல்லும் கருத்தை ஏற்க விரும்பாவிட்டாலோ அவரின் பெண் தன்மைக்கான ‘அழகு பாராட்டலை’க் கொடுப்பது என்பது அவரது பேச்சை நிறுத்த வைக்கும் உத்திதான். ஒரு தீவிரமான விவாதத்தில் விவாதத்தைக் கவனிக்காமல் பேசும் பெண்ணின் அழகை கவனித்துக் கொண்டிருப்பது யாரை அவமதிக்கும் செயல்?
இந்தியா இந்த வகை belittling-ஐ பெண்களை பொறுத்தவரை பல நூற்றாண்டுகளாகவே செய்து வருகிறது. ஒரு பெண்ணை அவளின் வெளித்தோற்றமாக மட்டுமே எல்லா நேரங்களிலும் பார்ப்பது sick mindset-க்கான அடையாளம். பெண்ணை வெளியே செல்லக்கூட அனுமதிக்காத நிலப்பிரபுத்துவத்திலிருந்து அவளை முழு போகமாக மட்டுமே காட்ட விழையும் கார்ப்பரெட்டுகளின் காலம் வரை பெண் எப்போதுமே belittling செய்யப்பட்டுதான் வருகிறார்கள்.
பெண் கடவுளும் தேவையில்லை. பெண் அடிமையும் தேவையில்லை. நமக்கு தேவை நம் சகாவாக, பெண். அதற்கான காலமும் சமூகமும் உருவாகும்போது மட்டும்தான் பெண் விடுதலை ஆவாள். அங்கு மட்டும்தான் அவள் சக உயிராக மதிக்கப்படுவாள், அழகாக!
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!