Viral
நாய்களின் தன்னலமற்ற அன்பும், மனிதர்களின் குற்ற உணர்ச்சியும்.. அது என்ன?
எப்போதுமே நான் தோற்றுப் போவது நாயிடம்தான். எந்த அளவுக்கு துயரம் என்றால், அளவுக்கதிகமாக எனக்கு பிடிக்கும் என்பதாலேயே வளர்க்க விருப்பம் கொள்ளாத அளவுக்கு.
ஒரு நாயை வளர்ப்பதற்கான விருப்பத்திலிருந்து, என் வாழ்க்கை முழுக்க இம்மி அளவு தூரத்திலேயே இருந்திருக்கிறேன்.
நாய் காட்டும் நன்றி, அன்பு எல்லாவற்றையும் தாண்டி அதன் கண்கள்! அவை உங்களை உலுக்கி விடும். அதன் பரிதாபம் உங்களை இறைஞ்சும்.
சாப்பாடு வைப்பவர்கள் என்பதால் விசுவாசம் காட்டுவதாக மட்டும் புரிந்துகொள்ள முடியாது.
தெருநாய்கள் நடந்து வரும்போதெல்லாம் பயத்தில் முகத்தை திருப்பிக் கொள்வேன். அவற்றின் பரிதாபமும் தன்னலமற்ற அன்பும் நம்மை ஈர்க்கவல்லது.
என் தாய் சிறுவயதில் ஒரு நாயை வளர்த்த கதை சொல்வார். அக்கா, தங்கை என எல்லாருக்கும் அந்த நாய் மேல் அவ்வளவு பிரியம். வேளைக்கு சாப்பாடு, ஷாம்பூ குளியல் என ஆனந்த வாழ்க்கைதான் அவருக்கு. ஒரு கட்டத்தில் என் தாத்தாவுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கிறது. நாயை உடன் அழைத்து செல்ல அம்மா கேட்கிறார். தாத்தா விடவில்லை. பொருட்களை வண்டியில் ஏற்றி கிளம்புகையில் நாயும் கூடவே ஓடி வந்திருக்கிறார். அம்மா அழுதபடி வந்திருக்கிறார். கிலோமீட்டர்கள் ஓடி நுரை தள்ளி ஒரு கட்டத்தில் நின்று விடுகிறார் நாய். அம்மாவுக்கு அதன் பிரிவு தாங்க முடியவில்லை. இன்றுமே நினைவுகூறுவார். சில மாதங்கள் பிறகு, மீண்டும் அந்த ஊருக்கு சென்றபோது சொன்னார்களாம். அம்மா வளர்த்த நாய், அவரிருந்த வீட்டு முன்னாடியே கிடந்து, வீட்டை பார்த்து பார்த்து உயிரை விட்டதென.
இது என்ன அன்பு? இந்த அளவுக்கு குற்றவுணர்ச்சி கொடுக்கக்கூடிய தன்னலமற்ற அன்பு ஏன்?
என்னதான் நம் மூளை, மனிதன் பல நூற்றாண்டுகளாக domesticate பண்ணியதன் விளைவுதான் இந்த அன்பு, நன்றியெல்லாம் என சொன்னாலும், அவற்றை பார்க்கும்போது மீள முடியாமல் போகிறதே!
உண்மையில் என் பயமெல்லாம் ஒரு நாயின் அன்பு பொங்கும் கண்களை எதிர்கொள்ள முடியாதெனதான். நாய்களின் ஆயுட்காலமும் சில வருடங்கள்தான். அவ்வளவு காலமும் அன்பை கொட்டி, அவரும் அன்பு பிழிந்து கொடுத்து வாழ்ந்து, ஒரு நாள் இறந்துபோய் விட்டாரெனில் அந்த வலியை எப்படி தாங்குவது என்கிற சுயநலம்தான் நான் நாயை வளர்க்க தடையாக இருப்பது.
நாயின் கண்கள் வலிமையானவை. அவற்றுக்குள் பிரபஞ்சம் தெரியும். உங்கள் நடிப்பு, பாசாங்கு எல்லாம் அந்த தூய்மையான அன்பின் பார்வையில் தவிடுபொடியாகி விடும். அதிலும் புருவம் மேலேறி ஏக்கப்பார்வை பார்க்கையில், பிரபஞ்சமே உங்களை கேள்வி கேட்கும், "அன்பு செலுத்த உன்னை படைத்தால், என்னடா செய்துகொண்டிருக்கிறாய் சுயநலமாய்?" என.
அதனால்தான் நான் நாய் வளர்க்கவில்லை. என் சுயநலம்தான் அது.
நாய் என் குற்றவுணர்ச்சி. மனிதனின் குற்றவுணர்ச்சி. இயற்கையின் கேள்வி. இயற்கையின் கேள்விகளுக்குத்தான் நாம் பதிலளிப்பதில்லையே!
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!