Viral
Virtual Reality.. நம்மை எதிர்காலத்திலிருந்து இயக்கி கொண்டு இருக்கிறார்களா?
Virtual Reality-ஐ நல்ல தமிழில் மெய் நிகர் உண்மை என்பார்கள். மெய்யென்றால் உண்மை. அதாவது உண்மைக்கு நிகரான உண்மை. புரியும் வகையில் சொல்வதானால் மாய உலகம். உங்களுக்கு மட்டும்தான் தெரியும். கனவு போல்.
டாம் க்ரூஸ்ஸின் மிஷன் இம்பாஸிபிள் 2-ல் அவருக்கு மிஷன் அனுப்பப்படுவது ஒரு கண்ணாடியில்தான். அந்த கண்ணாடி அணிந்ததும் கண்ணாடி திரையில் தகவல்கள் தெரியும். விர்ச்சுவல் ரியாலிட்டியும் அதன் சாத்தியங்களும் எப்போதும் பரவசப்படுத்தும் விஷயங்கள்.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் தயவில் மற்றுமோரு நாலுகால் பாய்ச்சல் புரிதல் விர்ச்சுவல் ரியலிட்டியில் நேர்ந்தது. கருந்துளைதான் (Black hole) ஹாக்கிங்கின் களம். அதற்குள் செல்லும் தகவல் எதுவும் வெளியேறாது என்பதுதான் அவரது முதல் கணிப்பு. ஆனால் அந்த கணிப்பு பெளதிக விதிகளோடு ஒத்து போகாது என இன்னொரு அறிவியலாளர் நிரூபித்ததும் அடுத்த நிலைப்பாடாக இரண்டு சாத்தியங்களை சொன்னார் ஹாக்கிங்.
கருந்துளை ஒரு புனல் (funnel) போல செயல்படலாம். கருந்துளைக்குள் செல்பவற்றின் தகவல்கள் மறுமுனை வழியாக வெளியேறி, முதல் பிரபஞ்சத்தின் கண்ணாடி பிம்பமாக மற்றுமோர் பிரபஞ்சத்தை அங்கு உருவாக்கி இருக்கலாம் என முதல் சாத்தியத்தை சொன்னார் ஹாக்கிங். இதுதான் இணை கோள்வெளி என்னும் parallel galaxy.
இரண்டாம் சாத்தியம்தான் நமக்கான விஷயம். ஒளியை போல தகவல்களும் கருந்துளையின் விளிம்பிலேயே தேங்கக்கூடும். அத்தகவல்களை மிகப்பெரிய முப்பரிமாண படமாக, பிரபஞ்ச காலவெளியில் இடைவிடாது கருந்துளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கலாம். Halographic universe என்பார்கள். நம்மூர் பயாஸ்கோப் போல்.
ஆக, மொத்த பிரபஞ்சமுமே virtual realityதான். நீங்களும் நானும் உண்மையில் இல்லை. Interstellar-ன் tesseract போல், நம்மை எதிர்காலத்திலிருந்து இயக்கி கொண்டிருக்கிறோம். எப்படி, பிரமாதமா? மூளைக்குள் கம்பளி பூச்சி ஊர்கிறதா? பொறுங்கள்.
விர்ச்சுவல் பொருளாதாரம் தெரியுமா?
உங்கள் சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாக செல்பேசியில் குறுந்தகவல் வரும். இணையத்தில் உங்கள் வங்கி கணக்கில் login செய்து பார்ப்பீர்கள். அதிகரித்திருக்கும் எண்கள், சம்பளம் வந்து விட்டதை குறிக்கும். வங்கி கடன்களோ கடன் அட்டையோ வைத்திருந்தால், தவணை தொகைக்கான எண்ணை உள்ளிட்டு தவணை செலுத்துவீர்கள்.
அடுத்ததாக பலசரக்குக்கு ரிலையன்ஸ் ஃப்ரஷ்ஷோ அல்லது வேறோரு ஆன்லைன் ஷாப்பிங் தளத்துக்கோ செல்வீர்கள். வாங்க வேண்டிய பொருட்களை எல்லாம் தேர்ந்தெடுத்துவிட்டு, அவற்றுக்கான தொகையை உங்கள் வங்கி அட்டை எண்ணை உள்ளிட்டோ அல்லது ஆன்லைன் பேங்கிங் வழியாகவோ செலுத்துவீர்கள்.
இப்போது சொல்லுங்கள். உண்மையில் உங்கள் பணம் எங்கே இருக்கிறது? பணம் வந்ததற்கு பின்னும் தீர்ந்து போகும் முன்னும் ஒரு தாளையாவது கையில் ஸ்பரிசித்தீர்களா? உங்கள் நிறுவனத்திலிருந்து வங்கிக்கு, எண்களாக சம்பளம் போகிறது. அங்கிருந்து எல்லாமே எண்கள்தான்.
வெறும் எண்கள்தான் பணம் என்றால் ரிசர்வ் பேங்க் கவர்னர் கொடுத்த சத்தியம் எங்கே? இந்த எண்கள் எல்லாம் தொலைந்து போனால், அழிந்து போனால் நாம் எந்த கவர்னரிடம் சென்று உங்கள் சத்தியம் தொலைந்து விட்டது, திரும்ப கொடுங்கள் என கேட்பது?
உலக வரலாற்றிலேயே பணத்தை விர்ச்சுவல் ரியாலிட்டி ஆக்கிய பெருமை நம் காலத்தையே சேரும். நோட்டுகளை எண்ணிய காலம் போய் எண்களை எண்ணும் இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.
வேறு வழியில்லை. ஸ்டீபன் ஹாக்கிங்கையே நம்புவோம். இவையெல்லாம் halographic universe என நம்பினால்தான் அழுத்தம் குறைகிறது. நம்முடைய பண எண்கள் யாவும் பிரபஞ்ச வெளியில் திரும்ப திரும்ப காட்டப்படும் ஒளிப்படம் என நம்பிக்கொள்வோம்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!