Viral
‘காலம் தாழ்த்துதல்.. ஒரே குற்றவாளி நாம்தான்' : பிறப்பை எப்படி நிறைவு செய்யப் போகிறோம்?
காலம் தாழ்த்துவது, தாமதமானால் சிக்கல்கள் வரும் என தெரிந்தும் தாமதப்படுத்துவது, வேலைகளை ஒத்திப் போடுவது எனப் பல அர்த்தங்களை அந்த வார்த்தை கொள்ள முடியும்.
Procrastionation-ல் பல வகைகள் உண்டு. ஒரு வேலையைச் செய்ய தாமதிப்பது, பல வேலைகளை எடுத்துக் கொண்டு எதையும் செய்யாமல் தாமதிப்பது, வேண்டுமென்றே தாமதிப்பது, வேண்டாமென்று தாமதிப்பது, நேரமில்லை என சாக்கு சொல்லி தாமதிப்பது, தாமதிப்பதற்காகவே பிற வேலைகளை ஏற்றுக் கொள்வது எனப் பல வகைகள்.
எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு விஷயம்தான். காலம்!
நிறைய காலம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். காலம் என்னவோ இருக்கதான் செய்கிறது. நாம் இருக்கிறோமா என்பதுதான் கேள்வி. குறிப்பாக நாம் செய்ய வேண்டிய வேலைகள் சரியான சமயத்தில் செய்யப்படாத போது ஏற்படும் விளைவுகள் தனி வாழ்க்கையிலும் சமூகத்திலும் பெரிய அளவிலாக இருந்தால் நமது காலம் தாழ்த்துதல் என்பது குற்றமாக அவதானிக்கப்படும்.
'காலம் தாழ்த்தினாலும் இந்த வேலையில் ஒன்றும் கெடாது' என நம்புவோம். 'பிற வேலைகள் கழுத்தை நெறிப்பதால்தான் இந்த வேலையைச் செய்ய முடியவில்லை' எனக் காரணம் சொல்வோம். வேலையைச் செய்ய முடியாததற்கு பிறர் மீது பழி போடுவோம். 'வேலையை செய்யச் சொல்லி அழுத்தம் தருவதால்தான் வேலையைச் செய்யும் மனம் வர மறுக்கிறது' எனக் கதை சொல்வோம். கிட்டத்தட்ட ஆட்டோ ஓட கண்ணாடி திருப்பும் கதைகளாகச் சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் ஓரளவுக்கு விஷயம் தெரிந்தவருக்குக் கூட தெரிந்துவிடும், ஒரே குற்றவாளி நாம்தான் என.
நாம் செய்ய வேண்டிய வேலைகளை தாமதிப்பது ஒரு குற்றம் என்றால் நாம் மட்டுமே செய்யக் கூடிய வேலையை செய்யாமல் காலம் தாழ்த்துவது பெரும் குற்றம் ஆகும். அது தெரிந்தும் அதற்கான தீர்வை தேட மறுப்பது அளவுக்குட்படாத பெரும் பெரும் குற்றமாகும்.
உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஒரே ஒரு வாய்ப்புதான். அந்த வாய்ப்பு கோரும் வேலையை சிறப்பாக செய்து முடித்து பெயர் பெறலாம். அல்லது வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தி கதைக்குதவாத கதைகளை காரணங்களாகச் சொல்லி அந்த வாய்ப்பையே நாசம் செய்யலாம்.
ஐன்ஸ்டீன் முதற்கொண்டு லெனின் வரை, பேப்பர் போடுபவர் முதல் பேருந்து ஓட்டுபவர் வரை, பகல் தரும் சூரியன் முதல் இருப்பு தரும் பூமி வரை காலம் தாழ்த்தாமல் தங்களால் இயன்ற பணிகளைச் செய்வதால்தான் நம் வாழ்க்கை இன்றும் இப்படி சீரும் சிறப்புமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
அரசியல், கலை, பொருளாதாரம், பண்பாடு என பல சக்கரங்கள் தொடர்ந்து இயங்கி இச்சமூகத்தை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் காலம் கடந்த இப்பெரும் இயக்கத்தை இன்னும் சற்று வேகமாக ஓட வைக்கும் ஆற்றல் பெற்றிருக்கும் நாம் மட்டும் காலம் தாழ்த்தி பொறுப்பற்ற ஜடமாக இருந்து பிறப்பை நிறைவு செய்யப் போகிறோமா?
இல்லையெனில், நீங்கள் காலம் தாழ்த்தும் உண்மையை எந்த காரணமும் சொல்லாமல் அங்கீகரியுங்கள். Acknowledge! உங்களையே நீங்கள் அந்த உண்மை கொண்டு 'அறைந்து' கொள்ளுங்கள். பிறகு அந்த உண்மை உங்களுக்குக் காலத்தை மீட்டுக் கொடுக்கும்.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !