Viral

NEET: அவங்க இடத்திலிருந்து பார்த்தாதான் தெரியும்; ஆனால் நான் மாணவர்கள் பக்கம்தான் -சாய் பல்லவி ஓபன் டாக்!

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயப்படுத்தியுள்ள ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு உட்பட நாட்டில் பல்வேறு மாநிலங்களில் போர்க்குரல்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

முழுமையான சட்டப்போராட்டம் நடத்தி இந்த நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு திண்ணமாக உள்ளது. இதனிடையே இருந்த அதிமுக அரசின் மெத்தனத்தால் தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளின் எதிரொலியாக இனி நீட் எழுதப்போகும் மாணவர்களையும் அச்சம் பீடித்துள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்வது வேதனை அளிக்கிறது என நடிகையும் மருத்துவருமான சாய்பல்லவி கூறியிருக்கிறார்.

அண்மையில் ஆங்கில இணையதள செய்தி ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள சாய் பல்லவி நீட் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளதுதான்ன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: ஒரு மரணம் உறவுகளை என்னவாக்கும்? - காணேக்காணே என்கிற மலையாளப் படம் இயங்கும் களம் இதுதான்!

அதில், கடல் போன்றது மருத்துவப் படிப்பு. தேர்வில் எங்கே இருந்து கேள்விகள் வரும் என்றெல்லாம் யூகிக்கவே முடியாது. அதன் காரணமாக நிச்சயம் மனதளவிலான பாதிப்பு ஏற்படக்கூடும். அவர்களுக்கு பெற்றோர்களும், நண்பர்களுமே உறுதுணையாக இருக்க வேண்டும்.

என் குடும்பத்தில் கூட குறைவாக மார்க் எடுத்ததன் காரணமாக ஒருவர் தற்கொலை செய்திருக்கிறார். ஆகவே தற்கொலை செய்துக்கொள்வது அவரவர் குடும்பத்தையே ஏமாற்றும் செயலாகும். தற்கொலையில் ஈடுபட வேண்டாம் என்று என்னால் சொல்லிவிட முடியும்.

ஆனால் அந்த இடத்தில் இருப்பவர்களுக்குதான் அந்த வலியும் மனநிலையும் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் எந்த சூழலில் தேர்வை எழுதினார்கள் என்று அணுக வேண்டும். 18 வயது கூட ஆகாத மாணவர்கள் சிறு வயதில் தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிக்கிறது. இந்த எண்ணத்தில் இருந்து மாணவர்கள் வெளியேற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

அழுத்தங்களால் படிக்கும் பாடங்கள் எதும் மனதில் நிற்காது. உற்சாகத்துடன் படிக்க வேண்டும். எப்போதும் நான் மாணவர்கள் பக்கம்தான் இருப்பேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

Also Read: மிஸ் பண்ணிடாதீங்க..! : ஆண்-பெண் உறவின் சூட்சுமம் சொல்லும் ‘சந்தோஷத்திண்டே ஒண்ணாம் ரகசியம்’!