Viral

’உதவி தேவைப்படுவர்களின் வீட்டுக்கே சென்று உதவும் இஸ்லாமிய சகோதரர்கள்’ : ஈரோட்டில் கை கொடுக்கும் கை !

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், ‘மஸ்ஜித்’ என்னும் தன்னார்வ சேவைக்குழு ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்தக் குழுவில் உள்ள இளைஞர்கள் ஈரோடு பகுதியில் உள்ள, அனைத்து சமுதாயத்திலும் உள்ள ஏழை குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு பல்வேறு சேவைகளைச் சத்தமில்லாமல் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக முதுமையில் உள்ளவர்கள் மற்றும் வறுமை, தனிமையில் தவிப்பவர்களுக்கு அவர்களின் வீடு தேடிச் சென்று, உணவு வழங்கி வருகின்றனர். கடந்த 5 மாதத்திற்கு முன்பு 5 பேருக்கு உணவு வழங்கத் தொடங்கிய இவர்கள், தற்போது 200 பேருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, வறுமையில் உள்ள 25 குடும்பங்களுக்கு காய்கறிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பழங்களை வழங்கி வருகின்றனர். மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கும் மருத்துவ உதவி செய்து வருகிறார்கள்.

இந்த சேவைக் குழு மூலமாக இதுவரை 2,500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக ஆபரேஷன் செய்ய உதவி செய்துள்ளனர். ஈரோட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்களை ஒன்றிணைத்து அவர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று சேவைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் தங்களின் பங்களிப்பைச் செலுத்த விரும்புபவர்கள் உழைப்பாகவும், பணமாகவும் செலுத்துவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், மக்களிடையே யாருக்காவது உதவ வேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்துள்ளதால், இதில் பலர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also Read: “ராகிங் கொடுமை; வாழ்வதற்கே விருப்பமில்லை”: மனம் வெதும்பி தாயிடம் அழும் சிறுவன் - நெஞ்சை உலுக்கும் வீடியோ!