Viral

ரூபாய் 2.7 கோடி நஷ்டத்திற்குக் காரணமான ‘ஆடு’ : மகாநதி நிலக்கரி சுரங்கத்திற்கு ஏற்பட்ட சோகம்!

ஒடிசாவில் கோல் இந்தியா நிறுவனத்தின் மகாநதி நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு ஊருக்குள் சென்ற லாரி ஒன்று ஒரு ஆட்டின் மீது மோதியது. இதில் அந்த ஆடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள், நிலக்கரி லாரியை முற்றுகையிட்டு 60,000 ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வாகன ஓட்டுநர்கள் மிரட்டியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நிலக்கரி சுரங்கத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் நிலக்கரி ஏற்றிச்செல்லும் ரயில்களும் நகராமல் நிறுத்திவைக்கப்பட்டது.

காலை 11 மணிக்குத் தொடங்கிய மக்களின் போராட்டம் பிற்பகல் 2.30 ஆகியும் முடியாததை அடுத்து நிலக்கரி சுரங்க நிர்வாகிகள் அப்பகுதி போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.

இந்நிலையில், ஒரு ஆடு இறந்ததன் விளைவாக, தங்கள் நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மகாநதி சுரங்க நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நிக்கென் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், மூன்று மணி நேர போராட்டத்தால் நிலக்கரி ஏற்றிச் செல்லும் ரயில் மற்றும் வண்டிகள் தேங்கி நின்றன. அதனால், சுமார் 2.68 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.