Viral

நடுஆற்றில் இறங்கி ‘TikTok’ வீடியோ... வெள்ளத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு : டிக்டாக் மோகத்தால் விபரீதம்!

உலகம் முழுவதும் ‘டிக்-டாக்’ மிகவும் பிரபலமான செயலியாக உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக இளம் வயதினர் டிக்-டாக் செயலியை பயன்படுத்தி நடனமாடுவதுடன், வசனங்கள் பேசி நடித்து வீடியோ பதிவிட்டு வருகிறார்கள்.

ஆனால், ஒருசிலரோ டிக்-டாக் வீடியோவிற்காக விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், அதிகமாக தண்ணீர் ஓடிய ஆற்றில் இறங்கி டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் பிரேம்கல் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது நண்பர்களுடன் அருகிலுள்ள கப்பலால் தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளார். தடுப்பணையில் இருந்து பாய்ந்து வரும் நீரில் நின்று நண்பர்கள் அனைவரும் டிக் டாக் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மூன்று பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள், தினேஷின் நண்பர்கள் கங்காசலம், மனோஜ் ஆகியோரை மீட்டனர். ஆனால், தினேஷ் மட்டும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இரவு முழுவதும் தேடியும் தினேஷ் கிடைக்கவில்லை.

இதனால், தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி நேற்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார். டிக்டாக் மோகத்தால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.