Viral

ஹெல்மெட் அணியாமல் சென்ற நபருக்கு அபராதம் விதிக்காமல் விடுவித்த காவலர்கள் : காரணம் என்ன?

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கவும், சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து புதிய அபராத முறைகளை அமல்படுத்தியது.

இந்த புதிய அபராதம் விதிக்கும் முறை நாடெங்கும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்கள் குறிப்பிட்ட சில விதிமீறல்களுக்கு வசூலிக்கப்படும் அபராதத் தொகையைக் குறைத்துள்ளன. மேலும், சில மாநிலங்கள் இதை அமல்படுத்தப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஒரு நபரைப் பிடித்த காவல்துறையினர் அவர் கூறிய காரணத்தைக் கேட்டு அவருக்கு அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் பணியில் இருந்த காவல்துறையினர் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஜாகிர் மாமோன் என்ற நபரை நிறுத்தி அபராதம் விதிக்க முயன்றனர்.

அப்போது காவல்துறையினரிடம் ஜாகிர், “நான் சட்டத்தை சரியாக மதிப்பவன். கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் எனும் எண்ணம் கொண்டவன். இருப்பினும், இங்குள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று பார்த்துவிட்டேன். என் தலையின் அளவுக்கேற்ற ஹெல்மெட் கிடைக்கவில்லை. வாகனம் குறித்த அனைத்து ஆவணங்களும் என்னிடம் தெளிவாக உள்ளன. ஆனால் ஹெல்மெட் விஷயத்தில் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை” என ஆதங்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரிடம் அபராதம் வசூலிக்காமல் போலிஸார் விடுவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய காவல்துறையினர், “இது கொஞ்சம் வித்தியாசமான பிரச்னை. அவரின் பிரச்னையை நாங்கள் புரிந்து கொண்டோம். அதனால் அவருக்கு அபராதம் விதிக்கவில்லை. மேலும், அவர் சட்டத்தை மதிக்கும் நபராகத் தெரிந்தார்'' எனத் தெரிவித்துள்ளனர்.