Viral

‘யானையுடன் எஸ்கேப் ஆன பாகன்!’ - ‘பிடி வாரண்ட்’டுடன் தேடும் போலிஸ்; பாகனின் பாசப் போராட்டம்

நாட்டின் தலைநகரான டெல்லி வனவிலங்குகளை வளர்ப்பதற்கு ஏற்ற நகரம் அல்ல என்பதால் டெல்லியில் வளர்க்கப்படும் யானைகளை பறிமுதல் செய்து, அவற்றை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்புமாறு கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டது டெல்லி ஐகோர்ட்.

இதன் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு முன்பு வரை, டெல்லியில் ஏழு யானைகள் இருந்தன,அவற்றில் ஐந்து யானைகளை பறிமுதல் செய்து குஜராத் மற்றும் ஹரியானாவுக்கு வன அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். மற்றொரு யானைகள் ஒரு தொழிலதிபரால் வளர்க்கப்பட்டு வந்தது. அவர் டெல்லி ஐகோர்ட்டில் உத்தரவு பெற்று தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.

ஏழாவது யானைதான் லட்சுமி. வயது 59. வயது முதிர்ந்த அந்த யானையை யூசுப் அலி என்பவர் வளர்த்து வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் யானையை அழைத்துச் செல்வது வழக்கம். இந்த யானையை பறிமுதல் செய்ய வனத்துறையினர் வந்தபோது, யூசுப் அலி வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்தார்.

ஒரு கட்டத்தில், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, யானை லட்சுமியை பரிசோதித்த வனத்துறையினர் அது, ஹெர்பெஸ் என்ற ஜூனோடிக் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதன்காரணமாக ஹரியானாவின் பான் சாண்டூரில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்திற்கு லட்சுமியை மாற்ற இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை 6 ம் தேதி லட்சுமியை பறிமுதல் செய்ய வந்த வனத்துறையினருக்கும், பாகன் யூசுப் அலி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல லட்சுமியை பார்த்துக் கொள்கிறோம். உங்களுடன் அனுப்ப மாட்டோம் என்று யூசுப் அலி அடம்பிடித்து இருக்கிறார். ஒரு பாசப்போராட்டமே அங்கு நடந்திருக்கிறது.

வாக்குவாதம் நடந்துகொண்டிக்கும் போதே, யூசுப் அலி, தனது யானை மீது ஏறி மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடைசியாக அவரையும், யானை லட்சுமியையும் கிழக்கு டெல்லியின் ஷகார்பூர் அருகே யமுனாவின் கரை வரை வனத்துறையினர் துரத்திச் சென்றுள்ளனர்.

அதன்பின்பு யானை லட்சுமியும், யூசுப் அலியும் எங்கு சென்றார்கள் என்று தெரியாததால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் தலைமை வனவிலங்கு வார்டன்களுக்கும் கடந்த மாதம் டெல்லி வனத்துறை சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டு யானையையும், பாகனையும் தேடும்பணி நடந்து வருகிறது.

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “யானை பாகனும், பராமரிப்பாளருமாகிய யூசுப் அலி, அனுமதி இன்றி யானையை வைத்திருந்ததிற்காக இதற்கு முன்பு சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார், நீதிமன்ற உத்தரவுகளை மீறி யானையை அவர் வைத்திருக்கிறார்.

வன அதிகாரிகள், மூன்று மணி நேரம் அவரை துரத்திச் சென்றனர். யமுனையின் ஆழமற்ற நீரைக் கடந்து ஒரு வனப்பகுதிக்கு யானையுடன் சென்று விட்டார். இதுதொடர்பாக போலிசில் புகார் கொடுத்துள்ளோம்” என்றார்.

இதனிடையே, இந்த வழக்கு குறித்து விசாரிக்க ஒரு மூத்த விசாரணை அதிகாரியை டெல்லி போலிஸ் நியமித்துள்ளது. யூசுப் அலிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யானையுடன், பாகன் ‘எஸ்கேப்’ ஆன வழக்கில் இதுவரை துப்பு கிடைக்காததால் தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.