Viral
தாத்தா நீதிமன்ற காவலாளி ; தந்தை கார் ஓட்டுநர் : வறுமையைப் பின் தள்ளி நீதிபதியான 27 வயது இளைஞர் !
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேத்தன் பஜத். இவர் இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தின் இரண்டாம் வகுப்பு சிவில் நீதிபதிகளுக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மிகக் குறைந்த வயதில் நீதிபதி ஆகி இருக்கும் பஜத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் சேத்தன் பஜத். இவரது தாத்தா இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். அவரது தந்தை வாகன ஓட்டுநராக உள்ளார். இவ்வாறான குடும்ப பின்னணியில் இருந்து வந்த சேத்தன் பஜத் நீதிபதியாக பதவியேற்க இருப்பது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஜபல்பூரில் உள்ள மத்திய பிரதேச நீதிமன்ற தேர்வு மையம், இரண்டாம் வகுப்பு உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் சேத்தன் பஜத் எழுத்து தேர்வில் 450 மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் 257.5 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 13வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுகுறித்து சேத்தன் பஜத் கூறுகையில், “எனது தந்தை நீதிமன்றத்தில் ஓட்டுநராகவும், தாத்தா வாட்ச்மேனாகவும் பணியாற்றுகிறார்கள். என்னுடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். எனது அப்பா எங்கள் மூன்று பேரில் யாராவது ஒருவர் இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக வேண்டும் என அடிக்கடி சொல்வார். அது எனது தந்தையின் கனவு.
என் தந்தையின் கனவை நிறைவேற்ற முடிவு செய்தேன். தொடர்ந்து மூன்று முறை தேர்வில் தோல்வியடைந்தேன், பின்னர் கடின முயற்சியால், நான்காவது முறை நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று என் தந்தையின் கனவை நிறைவேற்றியுள்ளேன்.
நீதிபதியின் இருக்கையில் அமர்ந்து சிறந்த தீர்ப்புகளை வழங்க ஆவலாக உள்ளேன். எனது தந்தைதான் எனக்கு வழிகாட்டி. அவரது கனவை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி” எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார். அவரது இந்த விடாமுயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!