Viral

ஊத்துக்குளி வெண்ணெய் என ஆஞ்சநேயரையே ஏமாற்றிய கும்பல்; 300 கிலோ போலி வெண்ணெய் பறிமுதல் - அதிர்ச்சித் தகவல்

வெண்ணெய் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஊத்துகுளி தான். தரமும் சுவையும் அதன் அடையாளம். ஆனால், அதே ஊத்துக்குளி என்ற பெயரை வைத்துக் கொண்டு போலியான கலப்பட வெண்ணெய் சந்தையில் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில், போலியாக வெண்ணெய் தயாரித்து வந்தவர்களை கையும் களவுமாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிடித்துள்ளனர். அதிகாரிகளின் ஆய்வில் ஊத்துக்குளி என்ற பெயரில் போலி வெண்ணெய் தயாரித்தது அம்பலமானது. இதனையோட்டி இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து சோதனை செய்த உயர் அதிகாரி ராமகிருஷ்ணன் கூறுகையில், “எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனை மேற்கொண்டோம். அந்த சோதனையில் இந்த வெண்ணெய்கள் ஊத்துக்குளியில் தயாரிப்பதாக ஸ்டிக்கர் ஒட்டி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது அனைத்தும் கலப்பட வெண்ணெய் என்று தெரிய வந்தது.

அசல் வெண்ணெய்யில் பால் சேர்க்கப்படிருக்கும். ஆனால் ஒரு சொட்டு பால் கூட சேர்க்காமல் இந்த வெண்ணெய் என்று கூறப்படும் இதை தயாரித்துள்ளனர். மேலும் அந்த ஸ்டிக்கரில் சிறிதளவில் சுத்தமான நெய் உள்ளது என விளம்பரப்படுத்தி உள்ளார்கள். இதனை மக்கள் வாங்கி பயன்படுத்தி வந்திருந்தால் எளிதில் மரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது”. என அவர் எச்சரிக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “இவர்கள் இந்த கலப்பட போலி வெண்ணெய்களை கோவில்களுக்கும் விநியோகித்து வந்துள்ளனர். இந்த வெண்ணெய்கள் தீபம் ஏற்வதற்கும் மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோயில் வெண்ணெய் அபிசேகத்திற்கும் தான் விநியோகிப்பதாகவும், அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள பல கோவில்களில் இந்த போலி வெண்ணெய்களை தான் விநியோகித்ததாகவும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் ஒப்புக் கொண்டனர்”. என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனையில் 300 கிலோ போலி கலப்பட வெண்ணெய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வெண்ணெய்களை ஆய்வுக்கு அனுப்படவுள்ளது. ஆய்வில் முழுவதும் போலி என்றால், உணவு கலப்பட தடுப்புச்சட்டம் 59 வது சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆறு ஆண்டுகள் சிறைதண்டனையும் 10 லட்சம் அபராதமாகவும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.