Viral
”இங்கே பிரேத பரிசோதனை நடத்திக்கொள்ளுங்கள்” - மசூதியில் இடம் கொடுத்த முஸ்லிம் மக்கள் : இதுதான் கேரளா !
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பதாகவும், 60க்கும் மேற்பட்டோர்கள் காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மக்கள் படும் வேதனைகளை அறிந்து அம்மக்களுக்கு அண்டை மாநிலத்தில் உள்ள பலர் உதவிகள் செய்து வருகிறார்கள். குறிப்பாக கேரளாவில் பாதிக்கபட்ட மக்களுக்கு அப்பகுதி மக்களே தங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மலப்புரத்தில் நடந்த ஒரு மனித நேய மிக்க செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே ஒரு மசூதி பிரேத பரிசோதனை அறையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த மசூதியில் இஸ்லாமியர்கள் உடல்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழன் அன்று கவளப்பாராவில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவுகளில் சிக்கிய சடலங்களை பாதுகாப்பு படையினரும், தீயனைப்பு வீரர்களும் மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீட்கப்படுபவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மலப்புரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுள்ளது. இந்த நேரத்தில் மீட்பு பணிக்கு உதவி செய்துக்கொண்டிருந்த முஸ்லிம் மக்கள், இறந்தவர்களின் உடல்களை அவர்களது மசூதியில் வைத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு எடுத்து, மசூதிகளின் கதவுகளைத் திறந்து விட்டனர்.
மேலும் மசூதியின் நிர்வாகிகள் பிரார்த்தனை மண்டபத்தின் ஒரு பகுதியையும், பிரேத பரிசோதனை செய்வதற்கான பிற வசதிகளையும் செய்துக்கொடுத்தார்கள். அங்கு நிர்வாகிகள் பயன்படுத்திய மேசைகளை ஒன்றாக இணைத்து பிரேத பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. மேலும் உடல்களை சுத்தம் செய்வதற்கும், சடலங்களில் இருந்து நீக்கபட்ட உறுப்புகளையும் சுத்தம் செய்வதற்கும் அம்மக்கள் முன் வந்தனர்.
இதுகுறித்து மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரியின் உதவியாளர் பரமேஸ்வரன் கூறுகையில், “முகமது, சந்திரன், சரஸ்வதி மற்றும் சாக்கோ என அனைவரின் சடலங்களையும் மத வேறுபாடுகள் இன்றி, இந்த மசூதிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இதைவிட மனிதநேயத்திற்கான சிறந்த உதாரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. இந்த மனித நேயத்தை உலகமே பாராட்ட வேண்டும். மஸ்ஜித் அதிகாரிகளை நான் வணங்குகிறேன்” என பெருமையுடன் தெரிவித்தார்.
மேலும் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் சஞ்சய் கூறுகையில், “ உள்ளூர் மக்கள் காட்டிய மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனேன், மசூதி போன்ற ஒரு புனித இடத்தை பிரேத பரிசோதனை அறையாக அனுமதித்தது இந்த நிலத்தில் உள்ள மதநல்லினக்கத்திற்கான ஒரு அற்புதமான அறிகுறி” என்று அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து உள்ளூர் விவசாயியும் சமூக சேவையாளருமான எஸ்.ஜமாலுதீன் கூறுகையில், மசூதி மேலாளர்களைப் பற்றி பெருமைப்படுவதாகவும் கூறினார். மேலும் “மரணம் ஒரு சமநிலை. அதற்கு எந்த மதமும் சாதியும் தெரியாது. இது வகுப்புவாத குறுகிய மனப்பான்மைக்கு முற்றுபுள்ளி” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தான் இந்தியாவின் பன்முக தன்மை என்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!