Viral

”நாயை அடிப்பது போல அடித்து கொன்றேன்” - 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை உளறி மாட்டிக்கொண்ட டி.சி.பி

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு போலிஸ் காவலில் இருந்த கைதி காரணம் தெரியாமல் இறந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரை அடித்துக் கொன்றதையும், அதனை மூடி மறைக்கதான் எடுத்த முயற்சி பற்றியும் மும்பை காவல்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி பெருமையாக பேசிய வீடியோ வெளியாகி பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சம்பவ இடத்தில் நடந்த உண்மையை ஓய்வுபெற்ற டி.சி.பி பீம்ராவ் சோனவனே கூறியதை அவரின் உறவினரான தொழிலதிபர் ராஜேந்திர தாக்கர் என்பவர் வீடியோ எடுத்து மும்பை போலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அந்த வீடியோ காட்சி ஆதாரங்கள் மூலம் டி.சி.பி பீம்ராவ் சோனவனே மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டி.சி.பி பீம்ராவ் சோனவனேவுக்கும், தொழிலதிபர் ராஜேந்திர தாக்கருக்கும் முன்பு இருந்த பணப்பிரச்சனையின் காரணமாக அவரை போலீசாரிடம் சிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் மும்பை போலிஸார் அடுத்தக்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து மும்பைக் காவல்துறை மண்டல அதிகாரி டி.சி.பி அபிநாஷ்குமார் கூறுகையில், “தற்போது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இதுதொடர்பாக மேலும் யாராவது புகார் அளித்தால் மட்டுமே தொடர்ந்து விசாரணையை மேற்கொள்ளமுடியும்.

தற்போது உள்ள ஆதாரங்களை வைத்துக்கொண்டு மட்டும் விசாரணையைத் தொடர முடியாது. இந்த விஷயத்தில் எங்களுக்கு சரியான நம்பகமான சான்றுகள் தேவை” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அந்த அதிகாரி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கோரி தாக்கர் மும்பை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து சோனவனே கூறுகையில், இந்த வீடியோவில் உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. மேலும் இந்த வீடியோ 2018ம் ஆண்டில் தாக்கர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், வொர்லி காவல் நிலையத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சோனவனே பேசியதாவது, “ ராட்டு கோசவி என்பவர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவரின் மீது 27க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. நீண்ட நாட்களாக நாங்கள் அவனைத் தேடி வந்தோம்.

அன்று கையில் கிடைத்ததும் ஆத்திரத்தில் நாயை அடிப்பது போல அடித்தேன், உடலில் சில பாகங்களில் அடிபட்டதால் சிறையிலேயே அவன் இறந்துவிட்டான். பின் அவனின் கண்ணை சோதித்துப் பார்த்தேன். அவர் இறந்துவிட்டான் என உறுதியாக தெரிந்ததும், காவல்நிலையத்தில் உள்ள மற்ற அதிகாரிக்கு தகவல் தெரிவித்தேன்.

அதன் பின்பு அவனின் உடலை வெளியில் எடுத்துச் செல்ல நாடகம் ஒன்றை அரங்கேற்றினோம். அப்போது சுமார் 400 பேர் கொண்ட ஒரு கும்பல் காவல் நிலையத்திற்கு வெளியே இருந்தது. அங்கிருந்து சடலத்தை எடுத்துச் செல்வதற்கு தயாராக வாகனத்தை காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தினோம்.

இரண்டு காவலர்களை அழைத்து சடலத்தை அவர்கள் இருவர்களையும் தாங்கிப் பிடிக்கச் செய்து, கைகளுக்கு விலங்கு மாட்டி வெளியே அழைத்துச் சென்றோம். அப்போது காவல் நிலையத்தில் இருந்தவர்கள் என்ன ஆனது என கேள்வி எழுப்பினார்கள்.

அவருக்கு அடிபட்டுள்ளது என கூடியிருந்தவர்களிடம் சமாளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். கே.இ.எம் மருத்துவமனை இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது. பின்னர் ஜே.ஜே மருத்துவமனையில் கொண்டு சென்றோம்.

அங்கு தப்பிக்க முயன்று மாடியில் இருந்து கீழே விழுந்து தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டது போல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதிகாரிகளும் அதற்கு ஒப்புதல் அளித்து எதிர்பாராத விபத்தில் இறந்துவிட்டார் என கையெழுத்திட்டார்கள்” என அதனை ஒரு சாகச நிகழ்வு போல அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். இப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.