Viral

“எங்க தமிழ் வேணாமா.. அப்போ உங்க சகவாசமே வேணாம்” - கோபத்தில் அஞ்சலக சேமிப்பு கணக்கை மூட சொன்ன வழக்கறிஞர்

தமிழகம் உள்ளிட்ட இந்தி மொழி பேசாத மாநிலங்களில் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதன் மூலம் இந்தியை கட்டாயமாக்க மோடி அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு பெருமளவு எதிர்ப்பு கிளம்பியதால் வரைவை மட்டும் திருத்தி வெளியிட்டது.

தற்போது, தபால்துறைக்கான அஞ்சலகர் உள்ளிட்ட 4 பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை நீக்கி வெறும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் கேள்விகள் கேட்கப்படுகிறது. எனவே வேறு மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட தேர்வர்கள் தேர்வெழுதுவதில் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

இதற்கிடையில், தபால் தேர்வுகளில் தமிழ் மொழியை சேர்க்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டதில் தேர்வு முடிவுகளை மட்டும் வெளியிட தடை விதிக்கப்பட்டது. தமிழை சேர்ப்பது தொடர்பாக எந்த உத்தரவும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்று தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய மையங்களில் 1200 தேர்வர்கள் தபால் துறை பணிகளுக்கான தேர்வுகளை எழுதியுள்ளனர். இதில் தமிழ் மொழியில் கேள்விகள் இடம்பெறாததால் கடுமையான அதிருப்தியில் ஆழ்ந்தனர்.

தபால் துறை தேர்வில் மத்திய அரசு காட்டும் பாரபட்சத்தை கண்டு, திருவிடைமருதூர் குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற வழக்கறிஞர் ஒருவர் கொதிப்படைந்துள்ளார். அஞ்சலகத் துறைக்கான பணியாளர்கள் தேர்வில் தமிழ் மொழியை புறக்கணித்த காரணத்தால் தனது அஞ்சலக வங்கிக் கணக்கை முடித்து தருமாறு குறிச்சி கிளை அஞ்சல் நிலையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், “நான் தமிழ்நாட்டில் தமிழ் பேசும் பகுதியில் உள்ளேன். தபால் தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்ற புது விதி வந்துள்ளதை அறிந்தேன். எனது தமிழை புறக்கணிக்கும் அஞ்சல் துறையில் வங்கிக் கணக்கு இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே தங்களுடைய அஞ்சலகத்தில் (குறிச்சி கிளை) உள்ள எனது சேமிப்பு கணக்கு மற்றும் ஐ.பி.பி.பி. (India Post Payments Bank) கணக்கை முடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என எழுதியிருக்கிறார்.

இறுதியில் தமிழ் வாழ்க! திராவிடம் வாழ்க! என்று குறிப்பிட்டு முடித்திருக்கிறார்.

தமிழ் மொழியை அரசு துறை சார்ந்த தேர்வில் புறக்கணித்ததற்காக அதிருப்தியிலும், மன வருத்தத்திலும் செய்த ராஜசேகரின் இந்த முடிவு, சமூக வலைதளத்தில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.