Tamilnadu

தொலைநோக்குப் பார்வையில் மு.க.ஸ்டாலின் : தொகுதி மறுவரையறையில் சரியான நேரத்தில் சரியான முடிவு!

‘‘நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ உரிமையைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தி.மு.க. எடுத்துள்ள பயணம் சாதாரணமானதல்ல. தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம், அமைச்சரவைக் கூட்டம், அனைத்துக் கட்சிக் கூட்டம், ஏழு மாநில முதல்வர்கள் பங்கேற்ற ‘நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம்’ எனப் பல கட்டங்களைக் கடந்து தற்போது நாடாளுமன்றத்தில் முக்கிய முடிவெடுக்கும் நிலையை எட்டியுள்ளது.

தொகுதி மறுவரையறை என்பது வெறும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை மட்டுமல்ல; மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கக்கூடிய விவகாரம் என்பதே தி.மு.க.-வின் முக்கிய வாதமாக இருந்தது.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், நாடாளுமன்றத்தில் தங்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது என்று தி.மு.க. வலியுறுத்தியது.

இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தொகுதி மறுவரையறைக்கு எதிராகவும் மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் தீர்மானம் (14.02.2024) நிறைவேற்றப்பட்டது.

‘‘1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ள தற்போதைய விகிதாச்சாரமே தொடர வேண்டும்’’ என அதில் உறுதியாக வலியுறுத்தப்பட்டது.

இந்தப் பிரச்சினையைத் தி.மு.க. தனது கட்சியின் அரசியல் பிரச்சினையாக மட்டும் அணுகாமல், தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சினையாக முன்னெடுத்தது.

தி.மு.க. ஆட்சியில் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, மார்ச் 5-ஆம் தேதி அன்று, அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

‘‘7.18 சதவீதப் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே தற்போது இருக்கும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதம் மேலும் 25 ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, 2025 மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்ற ‘நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம்’ நடைபெற்றது. அதிலும் இந்தத் தீர்மானங்களே ஒருமனதாக வலியுறுத்தப்பட்டன.

இந்நிலையில் இன்று நவம்பர் 28-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.

‘‘நம்மைப் பொறுத்தவரை, நாம் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளிலும் நாம் தற்போது வரை உறுதியாக உள்ளோம். தமிழ்நாட்டின் நலன் பறிபோகக் கூடாது; அதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதில், நம் முயற்சியில் வெற்றி அடைந்துள்ளோம்’’ என்றார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தீர்மானம் முதல் ஏழு மாநில முதலமைச்சர்கள் கூட்டம் வரை தி.மு.க. முன்னெடுத்த போராட்டத்தின் நோக்கம், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதுதான். அதில், வெற்றி பெற்றிருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல், அந்த உரிமையை உறுதிப்படுத்தக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதுதான் மக்களுக்கான அரசியல்.

Also Read: “தொகுதி மறுவரையறை மசோதாவில் தி.மு.க முன்வைத்த 2 கோரிக்கைகள்” : MP-க்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!