Tamilnadu

நீதிபதி கேட்ட கேள்வி.. புகார் கொடுத்த மாவட்ட ஆட்சியர்.. தொக்காக மாட்டிய TVK MLA.. விழிப்பிதுங்கும் விஜய்!

தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு குற்றச்சம்பவங்களில் தவெக-வினர் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை என தவெக-வினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், போலீசாரும் அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ வழிந்து பேசி, ஆபாச மெசேஜ் அனுப்பியதோடு, இரவு நேரத்தில் வீட்டிற்கே சென்று தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அவ்வப்போது மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இது அடுத்தக்கட்டமாக ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதோடு, மதுபோதையில் நள்ளிரவு நேரத்தில் ஆட்சியர் வீட்டிற்ற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் செய்திகள் வெளியானது.

மேலும் இது தொடர்பாக ஆட்சியர் தவெக மேலிடத்துக்கு கூறியதாகவும், அந்த மேலிடம் ஆட்சியரை ஆசுவாசப்படுத்தியதோடு, தவெக எம்.எல்.ஏ-வுக்கு மேலோட்டமாக ஒரு எச்சரிக்கை விடுத்ததாகவும் தகவல் வெளியானது.

இது பெரும் சர்ச்சையாகி பலரும் கண்டனம் தெரிவிக்கவே, "தன் மீதான புகார்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பரப்பப்படும் அவதூறு என்றும் அருள் விக்னேஷ் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் ஆபாச மெசேஜ் குறித்த கேள்விக்கு, தனக்கு DNA டெஸ்ட் வேண்டுமானாலும் எடுத்து பாருங்கள் என்று மோசமாக மழுப்பிய காணொளியும் இணையத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆட்சியரின் கணவரும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருந்தார்.

தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்த சூழலில், ஆளுங்கட்சியை விட, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸும், விசிக-வும் மட்டமாக முட்டு கொடுத்தது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரோ, "அருள் விக்னேஷ் பாவம்; எந்த ஆதாரமும் இல்லாமல் வாட்ஸ்அப் வதந்திகளை வைத்து அவர் மீது விசாரணை நடத்தக் கூடாது" என்று முட்டுக்கொடுத்தார்.

மேலும் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்பட்ட அருள் விக்னேஷ் பாதிக்கப்பட்டவர் போல், அவருக்கு விஜய் ரசிகர்கள் முட்டுக்கொடுப்பதோடு, 'பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் குற்றமா என்ன?' என்று நியாப்படுத்தும் வகையில் முட்டுக்கொடுத்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரே புகார் அளிக்கவில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து நியாயமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று (நவ.23) நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு வந்தது.

அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் (State Public Prosecutor) ஆர். ஜான் சத்யன் ஆஜராகி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமிருந்து காவல்துறைக்கோ அல்லது தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கோ எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி புகார் அளிக்காத நிலையில், வெறும் செய்தித்தாள் தகவல்களின் அடிப்படையில் காவல்துறை எவ்வாறு வழக்குப்பதிவு செய்ய முடியும் என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் நேரடியாகக் கேட்டு விளக்கம் அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவ.24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது காவல்துறையில் முறைப்படி புகார் அளித்துள்ளார். சுமார் 3 மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வில், எம்.எல்.ஏ. தமது உடை குறித்துக் கருத்து தெரிவித்ததாகவும், தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கவில்லை என்று முட்டுக்கொடுத்து வந்த தவெக-வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், இப்போது என்ன செய்யப்போகிறார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் (NCW) தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அதேபோல், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கௌரியும் பணியிடப் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி காவல்துறையின் நடவடிக்கை குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “கள்ளக்குறிச்சி தவெக MLA-வை கைது செய்து விசாரிக்க வேண்டும்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!