Tamilnadu

“கேலிச்சித்திரத்தை உடனே நீக்க வேண்டும்” : ஜூனியர் விகடனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், உண்மைக்குப் புறம்பாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரை மற்றும் கேலிச்சித்திரத்தை இணையதளத்திலிருந்தும் இதழிலிருந்தும் உடனடியாக அகற்ற வேண்டும் என ஜூனியர் விகடன் இதழுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, சாலைப் பழுதுபார்ப்புப் பணிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும், தற்போதைய அரசு அவரைச் சிறைக்கு அனுப்பத் தயாராகி வருவதாகவும் கேலிச்சித்திரத்துடன் கூடிய கட்டுரை ஒன்று விகடன் குழுமத்தின் 'ஜூனியர் விகடன்' இதழிலும் இணையதளத்திலும் வெளியிடப்பட்டிருந்தது.

உண்மைக்குப் புறம்பான தகவல்களுடன், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கட்டுரையை விகடன் இணையதளம் மற்றும் ஜூனியர் விகடன் இதழிலிருந்து நீக்கக் கோரி எ.வ. வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஆனந்த விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், பதிப்பாளர் அப்பாஸ் அலி, ஆசிரியர் வெங்கடேஷ், அச்சு ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் அசோக்குமார் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர், விகடன் குழும வெளியீடுகளில் எ.வ. வேலு குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை மற்றும் கேலிச்சித்திரம் நீடிப்பது அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார். எனவே, அவற்றை இதழ் மற்றும் இணையதளத்திலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இந்த மனு குறித்து விகடன் குழுமத்தினர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 26-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Also Read: இதற்கும் DGP-ஐ விட்டுச் சமாளிக்கப் போகிறாரா Dummy CM? : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!