Tamilnadu

புதிய தலைமைச் செயலகம்.. மீனவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத விஜய் : தமிழ்நாட்டிலும் புல்டோசர் ஆட்சியா?

மக்கள் எதிர்ப்பை மீறி பட்டினப்பாக்கம் கடற்கரை அருகில் தலைமைச் செயலகம் கட்டும் வகையில் அப்பகுதியில் உள்ள பழைய குடியிருப்புகளை இடிக்க த.வெ.க அரசு டெண்டர் விட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று செப்டம்பர் 3 ஆம் தேதி த.வெ.க அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு அப்பகுதி மீனவர்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்பகுதி மக்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மீனவர்களின் பூர்வீக பகுதியில், அதுவும் நெருக்கடியான அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகமா? என்று கண்டனங்கள் எழுந்துள்ளது.

’’மக்கள் உணர்வுகளுக்கு எங்கள் முதல்வர் மதிப்பளிப்பார். பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டமாட்டோம்’’ என்று உறுதி அளித்து, த.வெ.க அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

ஆனால், புதிய தலைமைச் செயலகம் கட்டும் வகையில், இப்போது பட்டினப்பாக்கத்தில் உள்ள பழையக் குடியிருப்புக் கட்டிடங்களை இடிப்பதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், இப்போது டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பொதுமக்களிடைய கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நந்தனம் கோட்டம் வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்பின் படி, மயிலாப்பூர் கிராமம் , பிளாக் எண் 102 பகுதியில் உள்ள பழைய வாடகைக் குடியிருப்புகள் மற்றும் பிற கட்டடங்களை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்கான அடிப்படை மதிப்பீடு ரூ 41.61 லட்சம். இடிபாடுகளை அகற்றி நிலத்தை சமன்படுத்தும் பணியை 75 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப்பணித் துறையிடம் த.வெ.க அரசு கேட்டுள்ளது.

இந்நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணியை உடனே கைவிட வேண்டும் என்று அடுத்த கட்டப் போராட்டத்தை கையில் எடுக்கப்போவதாக பட்டினப்பாக்கம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இடநெருக்கடி, மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனும் சூழலில் சென்னைக்கு அருகில் ஒரு துணை நகரத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கலாமே… அதுதான் வளர்ச்சிக்கான அனைவருக்குமான தீர்வாக அமையும். மக்கள் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் போராட்டம் எனப் பல பிரச்னைகள் இருந்தும், இவ்விடத்தையே த.வெ.க அரசு குறிவைப்பது ஏன்?

Also Read: ‘புதிய தலைமைச் செயலகம்?.. 5 நாள் தான்.. போராட்டம் வெடிக்கும்’ : தவெக அரசுக்கு கெடு விதித்த மீனவர்கள்!