Tamilnadu

சென்னையில் தொடர் மழை... “மழைநீர் வடிந்ததற்கு திமுக அரசே காரணம்...” - மேயர் பிரியா பேட்டி!

சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுவின் தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்றது.

இதில், சென்னை மாவட்ட வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், மக்கள் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவரும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வீராசாமி, துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், மாநிலங்களவை உறுப்பினர்கள் கிரிராஜன், வில்சன், மாநகராட்சி பணிகள் குழு தலைவரும் மேற்கு மாவட்ட செயலாளருமான சிற்றரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேயர் பிரியா பேசியதாவது :-

அம்ருத் (AMRUT) திட்டம் மூலமாகவும், மெட்ரோ துறை சார்பாகவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2011-ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகளான திருவெற்றியூர், மணலி, அம்பத்தூர் மற்றும் தென்சென்னை பகுதிகளான சோழிங்கநல்லூர், பெருங்குடி போன்ற பகுதிகளில் 2012-ஆம் ஆண்டு இணைக்கப்பட்டபோதும் அப்போதைய ஆட்சிக்காலத்தில் எந்தப் பணியும் எடுக்கப்படவில்லை.

ஆனால் 2021-ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அம்ருத் திட்டத்தின் மூலமாக பல்வேறு மெட்ரோ பணிகள் சோழிங்கநல்லூர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வடசென்னை வளர்ச்சித் திட்டம் மூலமாக வடசென்னை பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெறுகின்றன. போதுமான நிதி இல்லை என்பதற்காக, அம்ருத் மூலமாக ஒன்றிய அரசிடமிருந்து நிதி வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும் அதற்கான கோரிக்கையை ஒன்றிய அரசிடம் வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

திசா (DISHA) கமிட்டி கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்தால், சென்னையுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளன. கடந்த 2 முறை மழை பெய்தபோது 30 செ.மீ பதிவானபொழுதும் எந்தப் பகுதியிலும் பெரிய அளவில் நீர் தேங்கவில்லை.

10 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த நிலைக்கும், தற்போதைய நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இரவு பெய்யும் மழை காலையிலேயே வடிவதற்கான சூழல் இன்றைக்குக் சென்னையில் உருவாகியுள்ளது.

=> திரு.வி.க.நகர் பகுதியில் கடந்த மழையின் போது வார்டு 74-ல் உணவு கொடுக்க விடாமல் தடுத்ததாக வெக எம்.எல்.ஏ. பல்லவி வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு...

உணவு என்பது அனைவருக்கும் வழங்கப்படக் கூடியது. யார் வேண்டுமானாலும் அதை செய்யலாம். எம்.எல்.ஏ பல்லவியை உணவு கொடுக்க கூடாது என்று சொல்லவில்லை. அன்று மழை காரணமாக சென்னையில் பள்ளி விடுமுறை என்பதால், பள்ளி மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்ட 400 காலை உணவு இருந்தது. அது வீணாகி விட கூடாது என்பதற்காக, அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கினோம்.

இந்த நிகழ்வு நடந்து அடுத்த 2 நாள் கழித்து அதே பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மாநகராட்சி சார்பில் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அது என் வீட்டு அருகிலேயே கூட நடைபெற்றது. யாரும் அவர்களை இங்கு வரவிடாமல் தடுக்கவில்லை." என்றார்.

Also Read: தேர்தல் ஆணையம் தனிநபரின் அதிகாரத்திற்கு உட்பட்ட அமைப்பல்ல! - குடியரசுத் தலைவருக்கு தி.மு.க தலைவர் மனு!