Tamilnadu

“நாளிதழ்களில் கொலைப்பட்டியல் என்று தனி Column போடும் அளவுக்கு கொலைகள்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தினமும் கொலைகள் அரங்கேறி வருகின்றன. நாளிதழ்களைப் புரட்டினால் ஒரு நாளைக்கு 10 கொலைகளுக்கும் மேல் செய்திகளாக இடம் பெறுகின்றன.

த.வெ.க ஆட்சியில் சாதனைகளைக் காட்டும் கொலைகள்தான் நாளிதழ்களின் முதற்பக்கத்தில் வருகின்றன. அதோடு, த.வெ.க நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளில் கைதாவது இன்னும் மக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இதைவிடக் கொடூரம் என்னவென்றால், த.வெ.க நிர்வாகிகளே உயர் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியிருப்பதும், அது குறித்து முதலமைச்சர் விஜய் மௌனமாக இருப்பதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், ஒரே மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மாயமாகியிருக்கிறார்கள்.இதையெல்லாம் பார்க்கும்போது நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்ற ஐயம் பொதுமக்களுக்கே ஏற்படுகிறது.

இந்நிலையில், Dummy முதலமைச்சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா? என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து, உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் "அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப்பிறகு சட்டம் ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக்கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை.

நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனி Column போடும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன. சமீபத்தில் மதுரை மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன், உடலில் காயங்களோடு சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறான்.

சேலத்தில் ரவுடி டேவிட் என்பவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டிக்கொலைச் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்லூரி மாணவனை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

த.வெ.க.வினரும் தங்களது Crime Quota-வை விட்டுக்கொடுப்பதில்லை என்பதற்கு சாட்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகி ஒருவர், கணவனையே கொலைச் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் Tractor ஓட்டி, Tea குடித்து, முருங்கைப் பறித்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக்கூட்டத்தையாவது நடத்துவாரா?

ஒருவேளை அத்தகைய கூட்டங்களை நடத்தி இருந்தால் இன்னும் கொலைகள் தொடர்வது ஏன்? Dummy முதலமைச்சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?” கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: “அடுத்தடுத்து மாயமாகும் குழந்தைகள்.. எங்கே போனார் விஜய் மாமா?” : கனிமொழி எம்.பி சுளீர் கேள்வி!