Tamilnadu
“இதுக்கெல்லாம் விஜய் என்ன சொல்ல போறாரு?..” - பெருந்துறை, செஞ்சி சம்பவத்தை குறிப்பிட்டு கனிமொழி MP கேள்வி!
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாள்தோறும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் என குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதோடு சிறார்களிடையே போதை பழக்கமும் அதிகரித்து வருகிறது.
இவை எவற்றுக்கும் பொறுப்பேற்காத தவெக அரசு, தாங்கள் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்பதை கூட உணராமல் திமுக மீதே பழியை சுமத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவங்கள் குறித்து கேள்விகள் எழுப்பினாலும், அதனை வேண்டுமென்றே விஜய், அவரது அமைச்சர்கள் என அனைத்து தவெக-வினரும் சம்பந்தமில்லாத விஷயங்களை பேசி மடைமாற்றம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த அக்.14- ம் தேதி ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் திருப்பூரை சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனினும் இதில் போலீசார் கவனக்குறைவாக இருந்ததோடு, அலட்சியமாகவும் செயல்பட்டுள்ளனர். இதன் விளைவாக 5 நாட்களுக்கு பிறகு அந்த பெண் அழுகிய நிலையில், உடலில் ஆடைகளின்றி மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பியது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வு ஒரு புறம் என்றால், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் 7 வயது சிறுமி, கடந்த அக்டோபர் 11-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அக்டோபர் 12-ம் தேதி அதிகாலை முதல் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். இதுகுறித்து பெற்றோர் புகார் அளித்த நிலையில், முதலில் போலீசார் அலட்சியமாக செயல்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் தவெக அரசுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து சிறப்பு படை அமைக்கப்பட்டு சிறுமி தேடப்பட்டு வருகிறார். வீட்டில் இருந்த சிறுமி காணாமல் போய் 9 நாட்கள் ஆகியும் போலீசார் இன்னமும் கண்டுபிடிக்காத நிலையில், ஆளும் தவெக அரசின் மெத்தனப்போக்கிற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் இதுகுறித்து கனிமொழி எம்.பி. கண்டனங்களோடு தவெக அரசுக்கும், விஜய்க்கும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
பெருந்துறையில் காணாமல் போன செவிலியர், 5 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரைக் காணவில்லை என்று புகாரளிக்கச் சென்றபோது, அந்தப் பெண்ணையே இழிவுபடுத்திப் பேசி, நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலட்சியமாகச் செயல்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மறுபுறம், செஞ்சியில் 7 வயதுச் சிறுமி காணாமல் போய் ஒன்பது நாட்களாகியும், குழந்தை குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் பெற்றோர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒன்பது நாட்களாகியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என்று வசனம் பேசிய முதலமைச்சர் விஜய் அவர்கள், இந்த குற்றச்சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
பெருந்துறை வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளை விசாரணையிலிருந்து நீக்கி, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். செஞ்சிச் சிறுமியை மீட்பதற்கான தேடுதலைத் தீவிரப்படுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக விளக்க வேண்டும்.
Also Read
-
போ*ப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவே இந்த கைது! : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“சமூகப் பிணி களையப் பெரியாரியத்தைத் தொடர்ந்து பரப்புவோம்!” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“அநீதியின் உச்சம்” : பிரதமர் இல்லம் அருகிலுள்ள பள்ளிவாசலை அகற்றும் முயற்சிக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
நா.த.க. வேட்பாளர் கார்த்திகா கைது.. த.வெ.க. அரசின் சர்வாதிகாரம், கொடுங்கோன்மை! : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
தேவா குடும்பத்தில் தொடரும் பெருந்துயரம் : நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்!