Tamilnadu
கானா பாடலின் முகவரி.. பட்டி தொட்டி எங்கும் ஒலித்த தேவா ஹிட்ஸ்.. காற்றில் கலந்தார் ‘தேனிசைத் தென்றல்’!
டபிரபல தமிழ் இசையமைப்பாளர், ‘தேனிசைத் தென்றல்’ தேவா சென்னையில் இன்று (அக்டோபர் 17) உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ்நாட்டில் கானா பாடலின் இசை முகமாகவும், முகவரியாகவும் அறியப்படுபவர் தேவா. இவரை ரசிகர்கள் ’தேனிசைத் தென்றல்’ என அன்போடு அழைப்பதுண்டு.
இசையமைப்பாளர் தேவாவின் இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம் என்பதே. 1950 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி பிறந்த இவர், திரைப்பட இசையமைப்பாளராகத் திகழ வேண்டும் என்ற தனது இளம் வயது ஆர்வத்துடன் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆரம்பகாலத்தில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளுக்கும், வீதிகளில் நடைபெற்ற கச்சேரிகள் என படிப்படியாக இசையமைத்த அவருக்கு, 1989 ஆம் ஆண்டு வெளியான ’மனசுக்கேத்த மகராசா’ திரைப்படம் இவரது முதல் படமாக அமைந்தது.
1990 காலகட்டத்தில் ஒரு புறம் இளையராஜா மறுபுறம் ஏ.ஆர்.ரகுமான் என சினிமாவில் கொடிகட்டிய இசையமைப்பாளர்களாக இருந்த காலத்தில் தனது தனித்துவமான கானா பாடல்கள் மூலமாக மக்களின் மனதில் இன்று வரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றால் அது மிகையாகாது.
தன்னை ஒரு கானா பாடகராக திரையுலகில் அறிமுகம் செய்துகொண்டாலும், அதில் மட்டுமே அவரது கவனம் இருந்துவிடவில்லை, பெரிய பெரிய ஹீரோக்களுக்கு மாஸ் எண்ட்ரி கொடுக்கும் இசைகள், 90-களில் காதலை கண்ணியமாகவும் கவித்துவமாகவும் தனது இசை மூலமாகவும் கொண்டு சேர்த்தவர் தேவா. இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட, “கானா ஒரு கண் என்றால், மெலோடி மற்றொரு கண்” என கூறியிருப்பார்.
தேவாவின் இசைத் திறமையை கவுரவிக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒவ்வொரு திரைப்படங்களிலும் அவரது பெயருடன் வரும் BGM தேவா இசையமைத்ததே. அதுவே இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
தேவாவின் இசைப்பயணத்தில் அவரது தம்பிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். தேவாவின் நிறைய கானா பாடல்களை அவரது தம்பிகளும் பாடியுள்ளனர்.
கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, தேவா அவர்கள் இசையமைத்த ‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து..’ என்ற பாடல் மறைந்த சிங்கப்பூர் அதிபரான தமிழர் எஸ்.ஆர்.நாதன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாகும். தன்னுடைய இறுதிநிகழ்வு நடக்கும்போது இந்தப் பாடலை ஒலிபரப்ப வேண்டும் என்ற அவரது விருப்பத்தை 2016-ஆம் ஆண்டு அவர் மறைந்த பிறகு, சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியது என்பது ’தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களுக்குச் சிறப்புச் சேர்க்கும் வரலாற்று நிகழ்வாக உள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான ‘லப்பர் பந்து’ படத்தி்ல் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். பேருந்தில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்போது முதியவர் ஒருவர் 'ராஜா ராஜாதான்' எனக் குறிப்பிடுகையில் இளைஞர் ஒருவர் குறுக்கிட்டு “ராஜா ராஜாதான் ஆனா இது தேவா பாட்டு” இது தேவா பாடல் எனப் பதிலளிப்பார். ஏனென்றால் அந்தளவுக்கு முழுக்க முழுக்க தேவா கானா பாடல்கள் இசைப்பார் என்றே மக்கள் பழகிப்போயிருக்க பல்வேறு மெலோடி பாடல்களில் ஹிட் கொடுத்துள்ளார்.
ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் தனது மெல்லிசைத் திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளார் தேவா.
ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் போன்ற ஹீரோக்கள் முதல் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் அனிருத், ஹிப்ஹாப் ஆதி வரை அனைவருடனும் பணியாற்றியுள்ளார் தேவா.
தனது இயல்பான பேச்சாலும், பார்க்கும்போதும் பழகும் போதும் எளிமையானவராகவும் மென்மையானவராகவும் இருப்பவர் தேவா என சக திரைக்கலைஞர்களும் பாராட்டி மெச்சியுள்ளனர்.
1990-ஆம் ஆண்டு ’வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்திற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, சிறந்த இசையமைப்பாளர் விருது, 1992-ஆம் ஆண்டு கலைமாமணி விருது, 1995-ஆம் ஆண்டு ’ஆசை’ திரைப்படத்திற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, பாட்ஷா திரைப்படத்திற்காகத் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சார அகாடமி விருது. ’அம்ருத வர்ஷினி’ கன்னடத் திரைப்படத்திற்காக ஃபிலிம்பேர் சிறந்த இசையமைப்பாளர் விருது ஆகிய விருதுகளை தேவா பெற்றுள்ளார்.
1990, 2000 கால கட்டத்தில் ஹிட் பாடல்கள் கொடுத்த தேவாவின் இசையை ஜென்சி தலைமுறையினர் குறைவாகவே கேட்டுள்ளனர். ஆனால், அவரது பாடல்கள் மீம்களாகவும் ரீல்ஸ்களாகவும் வலம் வந்து மீண்டும் மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதுகுறித்து அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய தேவா, “என்னுடைய பாடல்களுக்கு நான் காப்புரிமை எதுவும் கேட்கமாட்டேன். அது அனைத்து இடங்களுக்கும் போய் சேர வேண்டும். காப்புரிமைகளினால் பணம் வேண்டுமானால் வரலாம். ஆனால், இந்தக் காலத்தில் உள்ள ஜென்சி இளைஞர்களிடம் என்னுடைய பாடல்கள் சென்று சேர்ந்தாலே அது போதும்” என தெரிவித்துள்ளார்.
இத்தகைய உயர்ந்த எண்ணம் படைத்த கலைத்திறமையுடைய இசையமைப்பாளர் ’தேனிசைத் தென்றல்’ தேவா நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். உடலால் அவர் பிரிந்தாலும், இசையால் மக்களிடையே வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
Also Read
-
“வெள்ளை மனம் கொண்ட தேவா.. கானா என்றாலே தேவா தான்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்!
-
“யார் திறந்தால் என்ன? - அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்குவதே கழகத்தின் பணி” : அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி பதிவு!
-
“போராட்டத்திற்கு ஆதரவு.. காங்கிரஸ் இரட்டை வேடம்” : திமுக MP-க்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
-
“இவர்களுக்கு எல்லாம் மூளை இருக்கிறதா?” : மாணிக்கம் தாகூர், ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
“TVK Bad Party அல்ல, Breaking Bad Party”: தவெக MLA 135KG மெத்தம்பெட்டமைன் கடத்தல் -மு.க.ஸ்டாலின் கண்டனம்!