Tamilnadu

மேலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட முக்கியமான வழித்தடங்களில் கூடுதல் ரயில் சேவைகள் தொடர்பாக, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் எம்.பி., ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பலமுறை கடிதம் வாயிலாக வலியுறுத்திருந்த நிலையில் எதிர்வரும் ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை கால விடுமுறைகளுக்காக 5 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரல் - போத்தனூர், தாம்பரம் - செங்கோட்டை, ஈரோடு - திருநெல்வேலி, திருநெல்வேலி - தாம்பரம், சென்னை சென்ட்ரல் - கொல்லம் ஆகிய மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

எனினும் மற்ற பண்டிகை மற்றும் நீண்ட விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் போதிய ரயில்கள் இல்லாதிருக்கும் குறைகளை தீர்க்கும் வண்ணம், கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கழக நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு : -

தமிழ்நாட்டில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்களை இயக்குவதுடன், கூடுதல் ரயில் பெட்டிகளையும் இணைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி நான் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், எதிர்வரும் ஆயுத பூஜை உள்ளிட்ட விழாக்கால விடுமுறைக்காக 5 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

எனினும் வரவிருக்கும் விடுமுறைக் காலங்களுக்கும் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய வழித்தடங்களில் மேலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். அதேசமயம், அனைத்து வழக்கமான ரயில்களிலும் குறைந்தது பத்து கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும். குறிப்பாக, முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏற்படும் கடுமையான நெரிசல், பயணிகள் பாதுகாப்பு, பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் சிரமம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கூடுதல் பெட்டிகள் உடனடியாக இணைக்கப்பட வேண்டும். விடுமுறைக் காலங்களில் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் பயணிகளின் வசதியை உறுதி செய்யும் வகையில் ரயில் சேவைகளை மேம்படுத்த வேண்டும். ரயில்வே அமைச்சகம் தற்போதைய விடுமுறைக்காக சிறப்பு ரயில்களை அறிவித்திருப்பது போதாது. வரவிருக்கும் அனைத்து விடுமுறைக் காலங்களுக்கும் இதேபோன்று கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். மேலும், அனைத்து ரயில்களிலும் குறைந்தது 10 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.

பயணிகளின் பாதுகாப்பும் வசதியுமே மிகவும் அத்தியாவசியம், அவசியம், அவசரம் என்பதால் இதனை உடனடியாக நிறைவேற்ற ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே அமைச்சகம் இந்த கோரிக்கைகளை உடனடியாக கவனத்தில் எடுத்து, தமிழ்நாட்டு பயணிகளுக்கு போதிய ரயில் வசதிகளை உறுதிபடுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!