Tamilnadu

“வெங்கட்ராமன் அண்ணாச்சி.. அரிசி விலை என்னாச்சு?” : தி.மு.க கடும் விமர்சனம்!

‘வெங்கட்ராமன் அண்ணாச்சி..அரிசி விலை என்னாச்சு’ என்று கேட்கும் மக்களின் குரல்களுக்கு செவியைக் கொடுங்கள் என அரிசி விலை உயர்வு குறித்து தினந்தோறும் வெவ்வேறு கருத்துக்களை கூறிவரும் த.வெ.க அமைச்சர் வெங்கட்ராமனனுக்கு தி.மு.க கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விலைவாசி உயர்வு தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமனின் 'முன்னுக்குப் பின் முரண்' பேச்சுகள் அத்தனையும் மக்களைக் கொந்தளிக்கச் செய்துவிடும். பொறுப்புள்ள அமைச்சர் பேசும் பேச்சுகளா இவை?

▪️ அக்டோபர் 10: "அரிசி, சர்க்கரை விலை ஏறவே இல்லை. நானே சாட்சி!"

▪️ அக்டோபர் 12: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு.

▪️ அக்டோபர் 15: "நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் தங்களின் சமூக அந்தஸ்துக்காக சன்னரக பொன்னி அரிசியைச் சாப்பிடுகிறார்கள். அதன் விலைதான் உயர்ந்துள்ளது என்று சொல்லி கிராமத்தில் பொன்னி அரிசி உண்ணும் அந்தஸ்தில் யாருமில்லை என்கிற அர்த்தத்தில் கிராமப்புற மக்களை அவமானப்படுத்தினார்.

▪️ அக்டோபர் 15: அரிசி வரத்து குறைந்ததே விலை உயர்வுக்குக் காரணம் என்கிறார். அப்படியெனில் ஐந்து கோடிக்கு தடுப்புகள் அமைத்து, ரோடுஷோ காட்டி, மேட்டூர் அணையை முதல்வர் திறந்துவிட்டு பாவ்லா காட்டியது, குறுவை சாகுபடி பறிபோனது, தண்ணீரை நிறுத்தி நெற்பயிரை கருகவிட்டு இப்பொழுது வரத்து குறைந்துவிட்டதாகச் சொல்வது தவெக ஆட்சியின நிர்வாக அலங்கோலம் இல்லையா?

▪️சட்டமன்றத்தில் பேசும் போது "மக்கள் ரேஷன் அரிசியை இட்லி, தோசைக்குத்தான் பயன்படுத்துகிறோம், உணவுக்கு பயன்படுத்த முடியவில்லை’’ என்று இன்னொரு கதை சொல்லியவர் "நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே ரேஷன் கடை அரிசியைச் சாப்பிட்டுத்தான்’’ என்று இப்பொழுது கதையளக்கிறார்.

▪️"சில அரசியல் கட்சியினர் அரிசி ஆலைகளை வைத்துக்கொண்டு அரிசியைப் பதுக்குவதே செயற்கை விலை உயர்வுக்குக் காரணம்’’ என்று புழுத்துப்போன பொய்யைச் சொல்வதற்கு முன்னால் மனசாட்சியிடம் கேட்டுவிட்டுப் பேச வேண்டும்.

அமைச்சர் வெங்கட்ராமனின் முரண்பாடுகளும், செயல்பாடுகளும் உணவுத் துறையையே சந்தி சிரிக்க வைத்திருக்கின்றன. அமைச்சரின் இந்த முன்னுக்குப் பின் முரணான பேச்சுகள், அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் திணறுவதை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தண்ணீரைப் பெற்றுத்தராதது, விவசாயத்தை சீரழித்தது என்று இன்றைய தட்டுப்பாட்டுக்கும், விலை உயர்வுக்கும் அடிப்படைக் காரணமே நிர்வாகத்திறனற்ற ஆட்சிதான்.

விலைவாசி ஏறவில்லை என்றால் அதிகாரிகளை அழைத்து அமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினார்?

"விலைவாசியே உயரவில்லை, எதிர்க்கட்சிகளின் வதந்தி" என்று முதலில் கூறிவிட்டு, சில நாட்களிலேயே "வெங்காயம், சர்க்கரை விலை உயர்ந்துள்ளது" என ஒப்புக்கொண்டார். இப்போது "நகர்ப்புறங்களில் மட்டுமே உயர்வு" என புதிய தர்க்கத்தை வைக்கிறார். ’’ஏய் நான் சரியா பேசுறேனா?’’ என சங்கிலி முருகன் பேசும் டயலாக்கிற்கே அமைச்சர் டஃப் கொடுக்கிறார்.

பல்லிளித்து, பழிபோடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. மக்கள் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்.

‘வெங்கட்ராமன் அண்ணாச்சி..அரிசி விலை என்னாச்சு’ என்று கேட்கும் மக்களின் குரல்களுக்கு செவியைக் கொடுங்கள்" என தெரிவித்துள்ளது.

Also Read: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை ஏற்க Cheap CM-க்கு மனமில்லை! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!