Tamilnadu

ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. மின்வெட்டுப் பிரச்சினையால் மக்கள் தூக்கத்தைத் தொலைத்து, இரவில் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விலைவாசி உயர்வு எனத் த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளைத் தினந்தோறும் மக்கள் சந்தித்து வருகிறார்கள்.

இப்பிரச்சினைகளிலிருந்து மக்களுக்கு ஒரு நல்ல விடியலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, கடந்த ஆட்சியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு.

முதலில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தினார்கள்; பிறகு கே.என்.நேரு. தற்போது முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டிலும் சோதனையை ஏவிவிட்டுள்ளது த.வெ.க அரசு.

இந்நிலையில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு; மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள், பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம், நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு,

இராமநாதபுரம் இரட்டைக் கொலை, சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை, அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல்என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் இலாயக்கற்ற த.வெ.க.அரசு” என தெரிவித்துள்ளார்.

Also Read: 3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!