Tamilnadu

ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!

முரசொலி தலையங்கம் (12.09.2026)

விஜய்யிடம் நீதியை ஏதிர்பார்க்கலாமா?

தன்மீது புகார் சொன்ன மனைவியை, ‘வொர்த் இல்லை’ என்று சொன்னவர்தான் விஜய். அவரிடம் நீதி, நேர்மை, உண்மை, பண்பு, நல்லொழுக்கம், மனசாட்சி ஆகியவற்றை எதிர்பார்க்க முடியுமா? முடியாது. விஜய்க்கும் மனசாட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதற்கு உதாரணம் ஸ்ரீவைகுண்டம் சம்பவம்.

இதில் ஏமாற்றப்பட்டவர் பல்லாண்டு காலமாக விஜய் ரசிகை. அவரை ஏமாற்றியவர்கள் விஜய் கட்சியைச் சேர்ந்த இருவர். யாரைச் சொல்லி அந்தப்பெண்ணை ஏமாற்றினார்கள் என்றால் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் பெயரைச் சொல்லி ஏமாற்றி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அந்தப் பெண் இந்தப் பிரச்சினையை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜெகதீஸ்வரி ஆகிய மூவரிடமும் சொல்கிறார். அதன் பிறகு அந்தப் பெண், த.வெ.க.வில் இருந்தே நீக்கப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணனுக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. தொடர்ச்சியாக அந்தப் பெண், த.வெ.க. ஆட்களால் மிரட்டப்பட்டார். இறுதியாக வேறு வழியில்லாமல் அவர் கொடுத்த புகாரை அவரை வைத்தே வாபஸ் வாங்க வைத்து விட்டார்கள்.

விஜய்யிடம் நீதி கிடைக்கும் என்று ரசிகை எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை. உயிர் பயத்தில் வாழ்வதைவிட, வழக்கை வாபஸ் வாங்குவதுதான் த.வெ.க. ஆட்சியில் நிம்மதியாக வாழ்வதற்கு வழி என்று நினைத்தார் அந்தப் பெண்.

புகார் அளித்த பெண்ணும், கைதான இருவரும் சமரசமாகச் செல்வதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்கள். இதைத் தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். எஃப்.ஐ.ஆரையும் ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம்.

‘எனக்கு ஸாரி வேண்டாம் சார்... நீதி வேண்டும் சார்’ என்று டயலாக் விட்டவர் விஜய். அவரது ஆட்சியின் லட்சணம் இதுதான்.

ஸ்ரீவைகுண்டம் த.வெ.க.வைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தார்கள் விஜய் கட்சியைச் சேர்ந்த இருவர். பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்ததும் த.வெ.க. தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், ராமநாதபுரம் மாவட்ட த.வெ.க. நிர்வாகி ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இதில் மிக முக்கியமானவர் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன். இவரது பெயரைச் சொல்லித்தான் அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார்.

‘’விஜய்யின் தீவிர ரசிகையான என்னை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க. எம்.எல்.ஏ.வின் பெயரைச் சொல்லி அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தார்கள்” என்று கதறுகிறார் அந்தப் பெண்.

‘’நான் 1997 ஆம் ஆண்டு முதல் விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகர் மன்றத்திலும் தொடர்ந்து செயல்பட்டு வந்தேன். இப்போது ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஆகி இருக்கும் அன்னை விஜி சரவணனுடன் இணைந்து கடந்த இரண்டு வருடமாக கட்சிப் பணியாற்றி வந்தேன். அப்போது பாலசுப்பிரமணியம் அறிமுகம் ஆனார். அவர் எனக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார். அதற்காக ராமநாதபுரம் அழைத்துச் சென்றார். சரவணன் பெயரைச் சொன்னதால்தான் நானும் சென்றேன். காரில் செல்லும் போது கலர் பாட்டிலில் ஏதோ கலந்து கொடுத்தார்கள். அதனால் மயக்கம் அடைந்தேன். அவரும் இன்னொருவரும் சேர்ந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். ‘சரவணன்தான் கூட்டி வரச் சொன்னார்’ என்று அவர்கள் சொன்னார்கள். இதை வெளியில் சொன்னால், ‘உனது குழந்தையை கொலை செய்துவிடுவோம்’ என்றார்கள். மே மாதம் 3ஆம் தேதி இது நடந்தது.

இது பற்றி சரவணனிடம் கேட்டேன். ‘புஸ்ஸி ஆனந்திடம் சொல்லி உனக்கு வேலை வாங்கித் தருகிறோம், இதைப் பெரிது படுத்தாதே’ என்று எம்.எல்.ஏ. சரவணன் சொன்னார். என்னோடு சேர்ந்து இன்னொரு பெண்ணும் பாதிக்கப் பட்டுள்ளார். அவர் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று என் காலில் விழுந்து அழுதுள்ளார். இது பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் சொன்னேன். அமைச்சர் ஜெகதீஸ்வரியிடமும் சொன்னேன். யாரும் சரவணன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்கிறார் அந்தப் பெண்.

1997 ஆம் ஆண்டு முதல் விஜய் ரசிகையாக இருந்தவருக்கு நடந்திருக்கும் அவலம் இது. விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அதில் செயல்பட்டவருக்கு நடந்த கொடுமை இது. ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.வான அன்னை விஜி சரவணனிடம் பணியாற்றி உள்ளார். கேரளாவில் லாட்டரி தொழில் பார்த்து வந்த அவருக்கு கணக்கு வழக்குகள் பார்த்து வந்துள்ளார் இந்தப் பெண். இத்தகைய பெண்ணுக்கு விஜய் கொடுத்த நீதி என்ன? த.வெ.க. கட்சியில் இருந்து அவரை நீக்கியதுதான் நீதி. இதைவிடக் கேவலமான, படுமோசமான முதலமைச்சர் இருக்க முடியுமா? கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வைக்கும் அளவுக்கு இப்போது மிரட்டி இருக்கிறார்கள். இதுதான் விஜய் ஆட்சியின் லட்சணம் ஆகும்.

பாலியல் வன்கொடுமை செய்த பாலசுப்பிரமணியம், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் உடன் இருக்கும் படம் வெளியாகி இருக்கிறது. கட்சித் துண்டுடன் இருக்கிறார் சரவணன். எனவே இது சமீபத்தில் எடுத்த படம் தான்.

சரவணன் மீது விஜய்யால் நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனென்றால் அவரது ஆதரவில்தான் விஜய் ஆட்சி நடக்கிறது. சரவணன் மீது நடவடிக்கை எடுத்தால் விஜய் நாற்காலி கவிழ்ந்துவிடும்.

இனி யாராவது புகார் கொடுக்க வருவார்களா விஜய் ஆட்சியில்..?

Also Read: மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!