Tamilnadu

போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி

முதலமைச்சர் விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:-

என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்,

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் எழுந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும் நம்முடைய உடன்பிறப்புகளுக்கும் மிகுந்த கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் நன்றாக உணர்கிறேன். குறிப்பாக, இந்த சர்ச்சைகளுக்கு நடுவே என்னுடைய சிறைவாசம் குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டதால், அதுபற்றிய உண்மைகளைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தம்பி விஜய், நீங்கள் சொன்னது உண்மைதான், அதில் எந்தப் பொய்யும் இல்லை.அவசரநிலை காலத்தில், 1976 ஜனவரி 30 அன்று அதனை எதிர்த்துத் தலைவர் கலைஞர் அவர்கள் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தைக் கூட்டினார். அங்கு மிசா (MISA) சட்டத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, அப்போதைய ஒன்றிய அரசாங்கம் உடனடியாகத் தி.மு.க. ஆட்சியைத் கலைத்தது. ஆட்சி கலைக்கப்பட்ட அடுத்த நொடியே, மிசா சட்டத்தின் கீழ் என்னை முதன்மையாகக் கைது செய்வதற்காகக் கோபாலபுரம் இல்லத்திற்குப் போலீஸார் வந்தனர். அன்று நான் வீட்டில் இல்லை. இதையறிந்த தலைவர் கலைஞர் அவர்கள், "பையன் பிரச்சாரத்திற்குப் போயிருக்கிறான், நாளைக்கு வந்துவிடுவான். அவன் வந்ததும் நானே போன் செய்கிறேன், வந்து கைது செய்துகொள்ளுங்கள்" என்று போலீஸாரை அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் நான் ஊரிலிருந்து வந்ததும், அவரே போலீஸாரை வரவழைத்து என்னை அவர்களிடம் ஒப்படைத்தார்.சிறையில் எங்களுக்கு நடந்த கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. எங்களைக் கொண்டு போய் அடைத்ததே தொழுநோயாளிகள் இருந்த வார்டில்தான். ஒரு சிறிய அறைக்குள் 10 பேரை அடைத்து வைத்தார்கள். அந்த அறைக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்த ஒரு பானையில்தான் அத்தனை பேரும் சிறுநீர் கழிக்க வேண்டிய அவலம் இருந்தது. அந்த இடமே கடுமையான துர்நாற்ற வீசிய போதிலும், அங்கேயேதான் நாங்கள் தூங்க வேண்டியிருந்தது.

இரவு நேரத்தில் எங்களைத் தூங்க விடாமல் போலீஸார் லத்தியால் அடிப்பார்கள்; பூட்ஸ் கால்களால் மிதிப்பார்கள். இன்னொரு பக்கம், சிறையிலிருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை ஏவி எங்களைக் கொடூரமாகத் தாக்கினார்கள். அப்படி அவர்கள் நடத்திய கொடூரமான தாக்குதலில், என்னைக் காப்பாற்ற முயன்று என் மீது விழுந்து அடிகளைத் தாங்கிய என் அருமை அண்ணன், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு அவர்கள் அந்தச் சிறையிலேயே தன்னுயிரைத் தியாகம் செய்தார்.

அவர்கள் நடத்திய அந்தத் கொடூரமான தாக்குதலில் என்னுடைய தாடை எலும்பெல்லாம் உடைந்தது. நீங்கள் கூட பேரவையில் கையை வைத்துத் தாடையைக் காண்பித்துச் சைகை செய்தீர்களல்லவா? அது உண்மைதான், நான் இல்லை என்று மறுக்கவில்லை. இன்று வரை நான் வாங்கிய அந்த அடிகளின் தழும்புகள் என்னிடம் இருக்கின்றன.பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும், முக்கியமாகத் தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் போராடுகிற பலருக்கும் இந்த மாதிரியான அடக்குமுறைகள் நடக்கத்தான் செய்திருக்கின்றன. போராளிகள் அனைவரும் இதனைத் தாண்டித்தான் வந்திருக்கிறோம். எதிர்த்துப் போராடுவதும், அதன் விளைவுகளைச் சந்திப்பதும் எங்களுக்கு ஒன்றும் புதிய விஷயம் அல்ல.

நீங்கள் உங்களுடைய கொள்கைத் தலைவராகக் குறிப்பிடும் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து தி.மு.க-வின் வரலாறே இதுதான். அந்தத் தியாக வரலாற்றில் நானும் ஒருவனாக இருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையான ஒரு விஷயமே ஆகும்.யார் என்னதான் கொச்சைப்படுத்தினாலும், உண்மையான வரலாற்றை யாராலும் மாற்றிவிட முடியாது. அது காலத்திற்கும் அப்படியேதான் நிலைத்திருக்கும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், நீங்கள் சட்டமன்றத்தில் ஒரு நூலகம் (Library) இருப்பதாகக் குறிப்பிட்டீர்களல்லவா? அங்கு அனைத்து ஆவணங்களும் இருக்கின்றன. தயவுசெய்து அங்குச் சென்று என்னுடைய போராட்ட வரலாற்றைப் படித்துப் பாருங்கள்; அப்பொழுதுதான் உண்மை என்னவென்று உங்களுக்குப் புரியும்.

இரண்டாவதாக, சர்க்காரியா கமிஷன் பற்றியும் எங்கள் தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றியும் தவறான தகவல்களைப் பேசியிருக்கிறீர்கள்; ஊழல் குற்றச்சாட்டுகளையும் சுமத்தியிருக்கிறீர்கள். சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதற்குப் பிறகு ஒன்றிய அரசிலும், மாநில அரசிலும் பலமுறை ஆட்சிகள் மாறிவிட்டன. இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருந்திருந்தால், இந்நேரம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். இத்தனை வருடங்களாகத் தி.மு.க மீதும் கலைஞர் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொல்லி வந்த அதே பொய்க் குற்றச்சாட்டையே இப்பொழுது நீங்களும் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

அதுமட்டுமில்லாமல், அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அதில் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறுகிறீர்கள். அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய வழக்குகளில் 95 சதவீதத்திற்கும் மேலான வழக்குகளில் இதுவரை எந்தக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாமல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுகிறது என்பது இங்குள்ள அனைவருக்கும் நன்றாகத் தெரியும். உங்களுக்கு இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், இப்பொழுது உங்களுடைய கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது கூட இந்த அமலாக்கத்துறை பல வழக்குகளைப் போட்டிருக்கிறது.

இதையெல்லாம் ஒன்றிய அரசை உங்களின் கொள்கை எதிரியாகச் சித்தரிக்கும் உங்களுக்கு எப்படித் தெரியாமல் போனது?

முதலமைச்சர் தம்பி விஜய், நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு என்று ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது. பல பெரும் தலைவர்களும் மாமனிதர்களும் இந்தத் தமிழ்நாட்டைச் செதுக்கிய இடம் அதுவாகும். அந்தப் பொறுப்பும் கண்ணியமும் இப்பொழுது உங்களுக்கும் இருக்கிறது.சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை, மக்கள் நலத் திட்டங்கள், தமிழ்நாட்டை மேலும் மேலும் எப்படி முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வது மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து விவாதம் செய்யுங்கள். அதுதான் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் நல்லது. அதை விடுத்து, தேவையில்லாத சர்ச்சைகளைச் சட்டமன்றத்தில் பேச வேண்டாம் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

நீங்கள் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு என்னைச் சந்திக்க என் வீட்டிற்கு வந்திருந்தீர்கள். அப்போது நான் உங்களின் கரம் பிடித்து வரவேற்றேன். நாம் பேசிக் கொண்டிருந்த போது, "தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை ரொம்பவும் விமர்சித்துப் பேசிவிட்டேன், 'I am sorry' சார்" என்று நீங்கள் என்னிடம் கூறினீர்கள். அதற்கு நான், "பரவாயில்லை பிரதர், அதையெல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. நீங்கள் இப்பொழுது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். இனி யாரைப் பற்றிப் பேசும் போதும் அந்தப் பதவியின் கண்ணியத்தோடு பேசுங்கள்" என்று அறிவுரை கூறினேன். அதையெல்லாம் நீங்கள் அதற்குள் மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறது.

திரும்பவும் சொல்கிறேன், ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்தோடு உங்களுடைய வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும். நாம்தான் மக்களுக்கு முன்உதாரணமாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் வகிக்கின்ற பெரிய பொறுப்பை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும்.

ஆனால், நீங்கள் சட்டமன்றத்தையே ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றியிருக்கிறீர்கள். நாங்கள் கட்டிய பாலத்தின் மேல் நின்று கொண்டு போட்டோ ஷூட் செய்கிறீர்கள். ஆட்சி நிர்வாகத்தையும் ஒரு சினிமா சூட்டிங் போல நடத்துகிறீர்கள். உங்களுடைய திறனற்ற நிர்வாகத்தை மறைப்பதற்காக இப்படி விதவிதமாக ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் யதார்த்தம் என்ன? 'உண்மை ஊரைத் தாண்டுவதற்குள், பொய் உலகத்தையே சுற்றி வந்துவிடும்' என்று ஒரு பழமொழி சொல்வார்களல்லவா, அதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய ஆட்சியில் தினமும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் எனச் சட்டம் ஒழுங்கு படுகுழியில் வீழ்ந்து கிடக்கிறது.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு போயிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள், ஆனால் அதையும் ஒழுங்காகச் செய்யவில்லை. அனைத்துக் குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் தருவோம் என்று கூறிவிட்டு, இப்பொழுது தகுதி உள்ளவர்களுக்கு 3 சிலிண்டர்கள் மட்டும்தான் என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறீர்கள்.

மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள், ஆனால் இன்னும் நாங்கள் கொடுத்த அதே 1000 ரூபாயைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் பல வாக்குறுதிகளைப் பற்றி வாயே திறக்காமல் இருக்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் சொன்னது ஒன்று, இப்பொழுது செய்வது ஒன்று என்று உங்களின் செயல்பாடு இருக்கிறது.மாற்றம் வேண்டும் என்று நினைத்து வாக்களித்த மக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள், இப்பொழுது உண்மையில் என்ன மாற்றம் வந்திருக்கிறது, இது சரியான மாற்றம்தானா என்பதைக் கவனிக்க வேண்டும்.

எது நிர்வாகத் திறன் வாய்ந்த அரசு, எது திறமையில்லாத அரசு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.குறிப்பாக, கழக உடன்பிறப்புகளுக்கு நான் வலியுறுத்த விரும்புவது என்னவென்றால், மக்கள் நமக்கு முழுமையாக வாக்களிக்கவில்லை, நாம் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதற்காக, இந்த ஆட்சியில் நடக்கும் தவறுகளால் மக்கள் பாதிக்கப்படும் போது 'நமக்கென்ன' என்று நாம் ஒதுங்கி இருக்கக் கூடாது. அப்படி ஒரு சுயநல எண்ணம் நம்முடைய சித்தாந்தத்திலேயே கிடையாது. ஆட்சியை இழப்பதைக் கழகம் என்றுமே தோல்வியாக நினைத்தது இல்லை. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, இதனை மக்கள் பணியின் இன்னொரு முகமாகவே நான் பார்க்கிறேன். ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, என்றுமே தமிழ்நாட்டின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் நாம் தொடர்ந்து சண்டை செய்து கொண்டே இருக்க வேண்டும்.அன்று அவர்களின் தாத்தாவுக்காகச் சண்டை செய்தோம், அடுத்து அவர்களின் அப்பாவுக்காகச் சண்டை செய்தோம், இப்பொழுது அவர்களுக்காகவும் சண்டை செய்வோம். இதுதான் நம்ம தி.மு.க-வின் வரலாறு. அந்தப் போராட்ட வரலாறு எப்பொழுதும் மாறாது, மாறவும் கூடாது.

நன்றி, வணக்கம்.

இவ்வாறு இதில் பேசியுள்ளார்.

Also Read: நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!