Tamilnadu

ஓடிப்போய்விட்டார் : பேரவையில் த.வெ.க அரசின் முகத்திரையை கிழித்த எதிர்க்கட்சி தலைவைர் உதயநிதி ஸ்டாலின்!

சட்டப் பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-

“பேரவைத் தலைவர் அவர்களே,

பெருமைக்குரிய இந்த சட்டமன்றத்தில் காவல்துறை மானியத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு எனது மகிழ்ச்சியை, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை முதலில் நான் வணங்குகின்றேன். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த எங்களுடைய கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறீர்கள். மக்கள் பிரச்சினைகள் சார்ந்து நான் எழுப்புகின்ற கேள்விகளுக்குக் கவனத் திருப்பலோ (Diversion), பழி போடுகின்ற தந்திரங்களோ (Tactics) இல்லாமல் முதலமைச்சர் அவர்கள் உரிய பதிலைக் கொடுப்பார் என்கின்ற நம்பிக்கையில் என்னுடைய பேச்சை தொடங்குகிறேன்.

ஏனென்றால் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எழுப்புவதற்காகவே சட்டமன்றத்திற்கு எதிர்க்கட்சியாக எங்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

முதலில் இந்த அரசு கொடுத்திருக்கக்கூடிய `கொள்கை விளக்கக் குறிப்பு’ நேற்று இரவு 12 மணியளவில் என் கைக்கு வந்து சேர்ந்தது. நான் படித்துப் பார்த்தேன்.

திராவிட மாடல் ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன என்று அந்த கொள்கை விளக்கக் குறிப்புப் புத்தகத்தில், பக்கம் 293, 295, 296-ஆம் பக்கங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

குறிப்பாக வழிப்பறி, திருட்டு ஆகிய குற்றங்கள் 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025-ஆம் ஆண்டில் பெருமளவு குறைந்திருக்கிறது என்று தரவுகளுடன் (Data), புள்ளிவிவரங்களுடன் (Statistics) அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

கொலை, கொலை முயற்சி, கலவரங்கள், பாலியல் குற்றங்கள் அனைத்தும் குறைந்திருக்கின்றன என்று அந்தப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சாதிய பாகுபாட்டுக் கொலைகள் பெருமளவில் குறைந்திருக்கின்றன என்று உங்களுடைய கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனவே, எங்களுடைய திராவிட மாடல் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நன்றாக இருந்தது என்று காவல்துறை, கொள்கை விளக்கக் குறிப்பில் நேர்மையாக ஒப்புக் கொண்டதற்கு முதலில் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெயர் மாற்ற அறிவிப்பு - திட்டங்கள் ரத்து

பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு அமைந்து சரியாக, 116 நாட்கள் ஆகின்றன. இந்த 116 நாட்களில் இந்த அரசு புதிதாகத் திட்டங்களைக் கொண்டு வந்ததை விட, ஏற்கனவே இருந்த எங்களுடைய அரசு கொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்திருக்கிறார்கள். இந்த அரசிடமிருந்து, ஒன்று பெயர் மாற்ற அறிவிப்பு வருகிறது. அப்படி இல்லை என்றால் திட்டமே ரத்து என்கின்ற அறிவிப்பு வருகிறது. உதாரணத்திற்கு `பரந்தூர் விமான நிலையம்’, `காஞ்சிபுரம் புதுநகர் திட்டம்’, `குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம்’, `நாமக்கல் சிப்காட்’, `பரந்தூர் மெட்ரோ’, `ஈ.சி.ஆர் மேம்பாலம், `ஓசூர் டைடல் பார்க்’, `ஓசூர் நாலேட்ஜ் பார்க்’, இப்போது சமீபத்தில் `மாமல்லன் நீர்தேக்கம் திட்டமும்’ ரத்து என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

ரிவர்ஸ் கியரில் செல்லும் தமிழ்நாடு

எங்களுடைய கழக அரசு நடந்தபோது, தமிழ்நாடு டாப் கியரில் சென்று கொண்டிருந்தது. ஆனால், இந்த 116 நாட்களில் இன்றைக்கு தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. நான் முதலமைச்சரிடம் கேட்க விரும்புவது, எங்களுடைய கழக அரசு, தமிழ்நாட்டினுடைய நலனுக்காகக் கொண்டு வந்த திட்டங்களை எதற்காக ரத்து செய்திருக்கிறீர்கள்?

பேரவைத் தலைவர் அவர்களே,

தேர்தல் வாக்குறுதியில் ஏராளமான திட்டங்களைச் சொல்லியிருந்தீர்கள். `ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே நிறைவேற்றுவோம்’ என்று சொல்லியிருந்தீர்கள். `விவசாயக் கடன் முழுவதும் தள்ளுபடி’ என்று சொன்னீர்கள். `வருடத்திற்கு 6 சிலிண்டர்’, `எல்லா பேருந்துகளிலும் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம்’ என்று வாக்குறுதி கொடுத்திருந்தீர்கள். ஆனால், இவர்களுடைய அறிவிப்பெல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்கள் என்றால், விவசாயக் கடன் தள்ளுபடிக்குப் பல்வேறு அடுக்குமுறைகளை (Slabs) வைத்திருக்கிறீர்கள்.

பாதி பாதியாக நிறைவேற்றம்

இப்போது, `3 சிலிண்டர் மட்டும்தான் தருவோம், அதையும் அடுத்த வருடம்தான் தருவோம்’ என்று சொல்லிவிட்டீர்கள். கொடுத்த வாக்குறுதியை முழுமையாகச் செயல்படுத்தாமல், இப்படி பாதி பாதியாக நிறைவேற்றப் போவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிட்டு இருக்கிறீர்கள்.

`தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ என்று சொன்னீர்கள். ஆனால், இந்த அரசின் அறிவிப்புகள் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், எல்லா திட்டத்திற்கும் மொத்தமாகச் சேர்த்து `தாய்மாமன் காதுகுத்தும் திட்டம்’ என்று நீங்கள் பெயர் வைத்துவிடலாம்.

இந்த அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை விட, இவர்கள் போடுகின்ற ரீல்ஸ் எல்லாம் மக்களை அதிகமாகச் சென்றடைந்தால் போதும் என்றுதான், இந்த அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. எனவே இந்த நிலை எப்போது மாறும் என்று முதலமைச்சர் அவர்கள் அவருடைய பதிலுரையில் சொல்ல வேண்டும்.

காவல்துறையைப் பொறுத்தவரை, அந்தத் துறையின் மேம்பாட்டிற்காக எங்களுடைய கழக ஆட்சிக் காலத்தில்தான் எங்களுடைய தலைவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டில் காவல்துறை சீர்திருத்தத்திற்காக இதுவரை அமைக்கப்பட்ட 5 காவல் ஆணையங்களில் 4 காவல் ஆணையங்கள் கழக ஆட்சியில், எங்களுடைய ஆட்சிக் காலங்களில் அமைக்கப்பட்டன.

கடைசியாக, 2023-ஆம் ஆண்டு எங்கள் தலைவர் தலைமையிலான ஆட்சியில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.சி.டி.செல்வம் அவர்கள் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையம் (Police Commission) அமைக்கப்பட்டது.

அந்த ஆணையத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.அலாவுதீன் அவர்கள், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி திரு.கே.ராதாகிருஷ்ணன், இன்னும் பிற காவல்துறை அதிகாரிகள், மனநல மருத்துவர்கள் (Psychiatrists), கல்வியாளர்கள் (Academicians) இவர்கள் எல்லோரும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

2023-இல் அந்த ஆணையம் அவர்கள் கொடுத்த இடைக்கால அறிக்கையில் இன்னொன்று சொல்லியிருந்தார்கள். அதற்குச் செயல்வடிவம் கொடுக்கின்ற வகையில், அன்றைய முதலமைச்சரான எங்களுடைய தலைவர் அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியிட்டுச் செய்து காட்டினார்.

கிட்டத்தட்ட 800 பரிந்துரைகள்

ஐந்தாவது காவல் ஆணையம் (Fifth Police Commission) அதனுடைய முழுப் பரிந்துரைகளில் கிட்டத்தட்ட 800 பரிந்துரைகளைக் கொடுத்திருந்தார்கள். அதில் 86 பரிந்துரைகளை, எங்களுடைய ஆட்சியில் படிப்படியாக நாங்கள் நிறைவேற்றிக் காட்டினோம்.

இந்த அரசை நான் கேட்டுக் கொள்வது, மீதமிருக்கக்கூடிய நீண்டகாலப் பரிந்துரைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்று என்னுடைய கோரிக்கையை நான் வைக்கிறேன்.

முக்கியமாக, இஸ்லாமிய சமுதாயத் தலைவர்களுடைய கோரிக்கையை ஏற்று, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடிய இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு எங்கள் ஆட்சியில் பரோலும், நீண்டகால விடுப்பும் கொடுத்திருந்தோம்.

எங்களுடைய அரசு செய்தது போல இந்த அரசும் நீண்ட நாட்களாகச் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்டகால விடுப்பு கொடுக்க வேண்டும் என்று அவர்களுடைய குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த கோரிக்கையை இந்த அரசு ஏற்று உடனே நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று உங்களுடைய பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு நிச்சயம் சிறப்பாகச் செயல்பட்டது. இதுவரை இல்லாத வகையில், அதிக அளவிலான போதைப்பொருட்களை எங்களுடைய ஆட்சியில் நாங்கள் பறிமுதல் செய்திருக்கிறோம்.

சட்டம் இருக்கிறது, ஒழுங்கு இல்லை

முதன்முறையாகக் குற்றவாளிகளுடைய வங்கிக் கணக்குகள், சொத்துகள் முடக்கப்பட்டன. அதிகப்படியான தண்டனைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டன. குறிப்பாக, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் உடனுக்குடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை எங்களுடைய அரசு பெற்றுத் தந்தது. உதாரணத்திற்கு, வேலூரில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில், 32 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை? சட்டம் இருக்கிறது, ஆனால், ஒழுங்கு இல்லை.

இது வெறும் குற்றச்சாட்டு மட்டும் இல்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிலைமைதான் இது.

இவர்களுடைய 116 நாள் ஆட்சியில் மக்களுக்கு, குறிப்பாக, பெண்களுக்கு இது ஒரு மிகப்பெரிய துயரமாக மாறிவிட்டது. தினமும் செய்தித்தாள்களைத் திறந்து பார்த்தால், எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என்று தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கறிக்கடையில்கூட இந்த அளவுக்கு வெட்ட மாட்டார்கள். அந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் தினசரி வெட்டுக்குத்துகள் நடந்துகொண்டிருக்கின்றன.

116 நாட்களில், 10 ஆணவக் கொலைகள்

பேரவைத் தலைவர் அவர்களே, நகைக்காகக் கொலை, போதைப்பொருள் விற்பனையை அம்பலப்படுத்தினால் கொலை, மது போதையில் கொலை என்று கொலை நடக்காத நாளே இன்றைக்குத் தமிழ்நாட்டில் இல்லை.

சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், கோவை மாவட்டத்தில் மட்டும் 9 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி அமைந்த 116 நாட்களில், 10 ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்றிற்குக்கூட முதலமைச்சர் அவர்கள் வாய் திறக்கவில்லை. முன்பெல்லாம் `ஆணவக் கொலைகள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள், இந்த ஆட்சி அமைந்த உடனே அதை, `கெளரவக் கொலை’களாக மாற்றினார்கள். இப்போது சமீபத்தில், அவற்றையெல்லாம் `காதல் மரணங்கள்’ என்று பத்திரிகையாளர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

எந்த நடவடிக்கையும் இல்லை

பேரவைத் தலைவர் அவர்களே கடந்த 2 வருடங்களாக சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு அரசை குறை சொன்ன கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு, இப்போது என்ன சொல்கிறார்கள்? `தனி நபர் ஒழுக்கம்’தான் காரணம் என்று மக்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால், ஆளுங்கட்சியினர் தினந்தோறும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது, இன்று தொடர்கதை ஆகிக்கொண்டிருக்கிறது.

உதாரணத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரு எம்.எல்.ஏ. பெயரைச் சொல்லி ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஏற்கனவே, இந்த அவையில் பதிய வைத்துள்ளேன். அந்தப் பெண் புகார் கொடுத்தும், சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மீது, இந்த அரசு இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பேரவைத் தலைவர் அவர்களே, நான் பேசும்போது குறுக்கீடு இருக்கக்கூடாது என்று நீங்கள் விரும்புவதாகச் சொல்கிறீர்கள். ஆனால் இவர்கள் குறுக்கீடு செய்கிறார்கள். உணர்ச்சி என்பது எல்லோருக்கும் இருக்கிறது. உணர்ச்சி என்பது எல்லோருக்கும் பொதுவான விஷயம்தான்.

பெரிய பட்டியலே இருக்கிறது

பேரவைத் தலைவர் அவர்களே, நான் இன்று உரையாற்றுவது, காவல்துறை மீதான விவாதத்தில். நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை விவாதத்தில் பங்கேற்கவில்லை. பேரவைத் தலைவர் அவர்களே, நான் பேச்சை ஆரம்பிக்கும்போதே சொன்னேன். முதலமைச்சர் அவர்கள் பேச்சைக் கேட்டுவிட்டு திங்கட்கிழமை அவர் பதிலுரை சொல்லும்போது சொல்லட்டும் என்றுதான் சொன்னேன். இப்போதுதான் பட்டியலையே (லிஸ்ட்) ஆரம்பிக்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த இன்னொரு பெண் உறுப்பினர், ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் பிரைட்டர், ரூஸ்வெல்டு என இரண்டு பேர் மீது பாலியல் வன்கொடுமைப் புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கிலும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்னையில், ஆளுங்கட்சியின் ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர், அவர் பெயர் வேம்புலி. ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரை கட்சியைவிட்டு நீக்குவதாக செய்திகள் வந்தன. ஆனால், கைதான சில நாட்களிலேயே வெளியே வந்து, ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற ஒரு அரசு நிகழ்ச்சியிலேயே அவரும் பங்கேற்றுள்ளார்.

ஆளுங்கட்சியின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் விஜய் மோகன். ஒரு பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார்கள். நான்கு பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தும், இதுவரை விஜய் மோகன் அவர்களைக் கைது செய்யவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்னை காசிமேட்டில், ஆளுங்கட்சியின் ஆர்.கே நகர், 43-வது வார்டு பொறுப்பாளராக இருந்த `பாம்பு’ தினேஷ் 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலத்தில், பொள்ளாச்சி சம்பவத்துக்கு இணையாக 50-க்கும் அதிகமான பெண்களை ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டியதாக ஆளுங்கட்சிப் பிரமுகர் மணிகண்டன் மேல் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் என்கிற `குட்டி’ ஆளுங்கட்சியின் ஒரு பெண் நிர்வாகிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரும் செய்திகளில் வந்திருக்கின்றன.

சிவகங்கையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆளுங்கட்சி நிர்வாகி மகாராஜா, ராபின், ஹரீஷ். கரூர், குளித்தலையில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆளுங்கட்சியின் ஒன்றியச் செயலாளர் பெயர் ரமேஷ்.

மதுரை கீழமாத்தூர் பகுதியில் 10 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஆளுங்கட்சி நிர்வாகி கண்ணன்.

இப்படி இந்த 116 நாட்களில் ஆளுங்கட்சியினர் பெண்களுக்குச் செய்த அட்ராசிட்டுகளுக்கு ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது.

பேரவைத் தலைவர் அவர்களே, ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் இந்தக் காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய தற்போதைய முதலமைச்சர் அவர்கள், ``ஸாரி வேண்டாம், எங்களுக்கு நீதிதான் வேண்டும்’’ என்று பேசினார். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்து 116 நாட்களில் இதுவரைக்கும் எட்டு காவல் மற்றும் சிறை மரணங்கள் நடந்திருக்கின்றன. இதற்கெல்லாம் இதுவரைக்கும் நீதியும் கிடைக்கவில்லை; முதலமைச்சரிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு ஸாரியும் அவர் சொல்லவில்லை.

எம்.ஜி.ஆர் நகர் வெங்கடேசன், தென்காசி மாவட்டத்தில் கதிரேசன், தூத்துக்குடி அருணாச்சலம், மதுரையில் பூசாரி பரமசிவம் ஆகியோர் காவல் நிலையங்களில் காவலர்களால் தாக்கப்பட்டு இன்றைக்கு உயிரிழந்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வேல்முருகன் என்கிற மாரியப்பன், காவல்துறை தாக்கிய அவமானத்தில் தீக்குளித்து இறந்துபோய்விட்டார். அதேபோல காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய பிறகு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட கன்னியாகுமரி சபரிவர்மன், சேலையூர் பாலாஜி, மதுரை சிறையில் அன்வர்தீன் உள்ளிட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள்.

இந்தச் சம்பவங்களில் இதுவரைக்கும் இந்த அரசு, முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று கேட்க விரும்புகிறோம். அதை இந்த அவையின் வாயிலாக நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமான ஒரு நிலையை அடைந்திருக்கிறது. முதலமைச்சருடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய உள்துறையும், உளவுத்துறையும் மொத்தமாகச் செயலிழந்து போய்விட்டதா என்று எங்களுக்குச் சந்தேகம் வந்திருக்கிறது. ஏன் கேட்கிறேன் என்றால், குற்றச் சம்பவங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையினர், அரசை விமர்சனம் செய்கின்ற எதிர்க்கட்சியினர், குறிப்பாக Gen-Z இளைஞர்கள், அவர்களோடு கூட்டணி வைத்திருக்கக்கூடிய கூட்டணிக் கட்சியினர், பத்திரிகையாளர்கள் எல்லோரையும் கைது செய்வதில் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சரை வெளிப்படையாக விமர்சித்துப் பேசுகின்ற பா.ஜ.க. தலைவர்கள் மீது இதுவரைக்கும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவர் மீது ஏன் ஒரு புகாரைக் கூட இதுவரைக்கும் கொடுக்கவில்லை? ``எங்களுக்கு வந்தால் இரத்தம், அவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?’’ என்று கேட்கிறோம். இப்படி பா.ஜ.க. அடித்தாலும், வலித்தாலும் வெளியே சொல்லக் கூடாது என்கின்ற ஆளுங்கட்சியின் இந்த அரசியல் வியூகத்தை இதுவரைக்கும் நாங்கள் யாரும் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை.

ஜனநாயக ரீதியான போராட்டங்கள்

பேரவைத் தலைவர் அவர்களே, ஜனநாயக ரீதியான போராட்டங்களை முடக்குவதிலும் இந்த அரசு மிகவும் தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்கள் போராடினார்கள். சென்னை மெரினாவில், அந்தப் போராட்டத்தை நடத்த இந்த அரசு அனுமதி கொடுக்கவில்லை. மாணவர்களுக்குப் பயந்து உலகத்திலேயே கடற்கரைக்குப் பூட்டு போட்ட ஒரே அரசு இந்த அரசுதான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பெசன்ட் நகர் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கும் இந்த அரசு அனுமதி தரவில்லை. அவர்கள் அனுமதியில்லாமல்தான் அந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

சென்னை, மதுரையில் நீட்டுக்கு எதிராகப் போராடிய மாணவர்களைக் காவல்துறையினர் பெயர் அட்டை (Name badge) இல்லாமலேயே போய்த் தாக்கியிருக்கிறார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குப் போய் நீட்டுக்கு எதிராகப் போராடிய மாணவர்களைக் கைது செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள்.

உயர்கல்வித் துறை சார்பாக அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள். அதில், ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி, இடதுசாரி அமைப்புகள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு மாணவர்களை அனுப்பக் கூடாது. அப்படி அனுப்பினால், கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தச் சுற்றறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். இந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிற இடதுசாரித் தோழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, அந்தச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள்.

கூட்டணிக் கட்சியினரே சொல்கிறார்கள்

தலைமைச் செயலாளரும் டி.ஜி.பியும்தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியினரே வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அப்படியானால், இதெல்லாம் முதலமைச்சருக்குத் தெரிந்து நடக்கிறதா, தெரியாமல் நடக்கிறதா என்கின்ற கேள்வியை இந்த அரசுக்கு நாங்கள் வைக்க விரும்புகிறோம். முதலமைச்சருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய காவல்துறை, இப்படிக் கட்டுப்பாடே இல்லாமல் செயல்பட என்ன காரணம் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

ஜனநாயக ரீதியாகக் கருத்துச் சொல்கிறவர்கள், போராடுகிறவர்களைப் பார்த்து இந்த அரசும் காவல்துறையும் பயப்படுவது ஏன்?

தந்தை பெரியாரை இந்த ஆளுங்கட்சி கொள்கைத் தலைவர் என்று சொல்கிறார்கள். பெரியார் திடலுக்கே போய் முதலமைச்சர் மரியாதை எல்லாம் செய்தார். ஆனால், `நீட்’ தேர்வு, இ.டபிள்யூ.எஸ். (EWS) பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு எதிராக திராவிடர் கழகம் சார்பில், சமீபத்தில் ஒரு இருசக்கர வாகனப் பேரணியை நடத்த ஏற்பாடு செய்தார்கள். அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று காவல்துறையினரை இந்த அரசு பெரியார் திடலுக்குள் குவித்தது.

அதன் பிறகு, திராவிடர் கழகம் நீதிமன்றத்திற்கு சென்று, நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த இருசக்கர வாகனப் பேரணியை, இன்றைக்கு நடத்தி முடித்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகளையெல்லாம் பார்த்தால், தமிழ்நாடு இதுவரைக்கும் எதிர்கொள்ளாத ஓர் அசாதாரண சூழ்நிலையை இந்த ஆட்சியில் எதிர்கொண்டிருப்பது உறுதியாகிறது.

முதலமைச்சர் பதில் சொல்லவே இல்லை

பேரவைத் தலைவர் அவர்களே, சட்டம் ஒழுங்கு தொடர்பாகக் காவல்துறை சம்பந்தமாக இந்தச் கூட்டத்தொடரில் கடந்த 15 நாட்களில், நான் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறோம். ஆனால், இதுவரைக்கும் எந்தக் கேள்விக்கும் முதலமைச்சர் அவர்கள் எழுந்திருந்து பதில் சொல்லவே இல்லை.

வழக்கமாகத் தொலைக்காட்சித் தொடரில் நடித்துக்கொண்டிருக்கிற ஓர் கலைஞரின் காலம் முடிந்துவிட்டால், அல்லது வேறு தொடருக்குப் போய்விட்டால், தலைப்புச் செய்தியாக மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக `இவருக்குப் பதிலாக இவர் வருவார்’ என்று போட்டுவிடுவார்கள். அதுபோல, இந்த அரசில் எந்தக் கேள்வி கேட்டாலும் ,வேளாண் துறை அமைச்சருக்குப் பதிலாக விளையாட்டுத் துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்குப் பதிலாக மின்சாரத் துறை அமைச்சர் பதில் சொல்கிறார்கள்.

இன்னும் நம்புகிறோம்!

முதலமைச்சர் பொறுப்பு வகிக்கின்ற பல துறைகளுக்கும், இங்கு அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எழுந்திருந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எல்லாம் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம், காவல்துறை இன்னும் முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றுதான் நான் நம்பி இன்னும் பேசிக் கொண்டிருக்கிறேன்.

கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன. ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் கூட ஆகவில்லை என்று ஆளுங்கட்சியினர் சொல்கிறார்கள். அப்படி அவர்கள் சொல்வது தேர்தல் வாக்குறுதிகளுக்குப் பொருந்தும், அதை நான் மறுக்கவில்லை. ஆனால், சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரைக்கும் அதைச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது.

ஒரு புதிய ஆட்சி வந்ததுமே குற்றவாளிகளுக்கு ஒரு வலுவான செய்தியை (Strong message) இந்த அரசு கொடுக்க வேண்டும். முதலமைச்சரும் ஆட்சிக்கு வந்த புதிதில் `திறமையான அதிகாரிகளை நான் நியமித்துவிட்டேன்’ என்று சொன்னார். அரசினுடைய கொள்கை விளக்கக் குறிப்பிலும் பொது அமைதியை நிலைநிறுத்துவதை இந்த அரசு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்று எழுதியிருக்கிறது. ஆனால், எதனால் இத்தனை குற்றங்கள் நடந்தன என்று நீங்கள் நேர்மையாக ஆராய வேண்டும்.

முதலமைச்சருடைய பதிலுரைக்கு இன்னும் மூன்று நாட்கள், காலம் இருக்கிறது. நன்றாகத் தயார் செய்துகொண்டு வாருங்கள்.

விளக்கத்தைக் கொடுங்கள்

பேரவைத் தலைவர் அவர்களே ஏற்கனவே தயாராக இருந்தால், இப்போதே பதில் சொல்லட்டும். நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு ஏதும் ஆட்சேபணை கிடையாது. அதிகாரிகளிடம் அனைத்துத் தகவல்களையும் கேட்டுவிட்டு வாருங்கள். ஏற்கனவே நாங்கள் சொன்னது போல மீண்டும் எங்கள் மீது பழி போடாமல், இன்னும் தி.மு.க.தான் ஆட்சி செய்கிறது என்பதை உங்கள் மனதிலிருந்து எடுத்துவிடுங்கள். எங்களை நோக்கியே எதிர்கேள்வி கேட்காமல், கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கத்தைக் கொடுங்கள்.

எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் அன்றைய முதலமைச்சர் எங்களுடைய தலைவர் அவர்கள் அவையில் பொறுமையாகவும், பொறுப்பாகவும் தரவுகளோடு, புள்ளிவிவரங்களோடு பதில் கொடுத்திருக்கிறார். எனவே, இப்போது நீங்கள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். உங்களிடம் கேள்வி கேட்கவேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களிடம் சரியான கேள்வியைக் கேட்டுப் பதில் வாங்கும் கடமை எங்களுடையது. அந்தப் பொறுப்பைத்தான் மக்கள் எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆகவே, வெறும் ‘ரீல்ஸ்’ கருத்தாக இல்லாமல், ‘ரீல்ஸ்’ உள்ளடக்கத்திற்காக இல்லாமல், `ரோல் கேமரா ஆக்ஷன்’ நிலைக்கு வராமல், திசைதிருப்பாமல், சம்பந்தமே இல்லாமல் லாஜிக்கே இல்லாத குட்டிக் கதைகள் சொல்லாமல், மக்களுடைய கேள்விகளுக்கு, எங்களுடைய கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாகப் பதில் சொல்ல வேண்டும் என்று பேரவைத் தலைவர் வாயிலாகக் கேட்டு கொள்கின்றேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, காவல்துறை சம்பந்தப்பட்ட மானியம், நான் ஏற்கனவே சொன்னதுபோல, யார் பொறுப்பெடுத்துப் பதில் சொல்ல வேண்டுமோ அவர்கள் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். மற்ற அமைச்சர்கள் எல்லாம் பதில் சொல்கிறார்கள். அதை நான் மீண்டும் பதிவு செய்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, முதலமைச்சர் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறார் என்று நீங்கள்தான் சொன்னீர்கள். அவர் தயாராக இருந்தால், அவர் பதில் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் நான் சொல்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்கள் பேசும்போது, எங்களுடைய ஆட்சியில் சில குற்றங்கள் நடந்தன, குறைபாடுகள் இருந்தன என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு நான் இந்த நேரத்தில் பதில் சொல்லவேண்டும்.

குறிப்பாக, டி.ஜி.பி நியமனத்தில் எதற்காகத் தாமதம் ஏற்பட்டது, ஏன் பொறுப்பு டி.ஜி.பி. போட்டிருந்தீர்கள்? என்று கேட்டிருக்கிறார். எங்கள் ஆட்சியில் டி.ஜி.பி.யாக இருந்த திரு.சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, டி.ஜி.பி நியமனத்திற்காக எங்களுடைய கழக அரசு சார்பாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) ஒரு பட்டியலைத் தேர்வு செய்து அனுப்பியிருந்தோம். அப்போது மாநில அரசுக்கும், யூ.பி.எஸ்.சி.க்கும், டி.ஜி.பி தேர்வுக் குழுவில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருந்தது. தமிழ்நாட்டிற்கான டி.ஜி.பி-யை நியமிப்பதில் யூ.பி.எஸ்.சி.யினுடைய பங்கு, அதாவது ஒன்றிய அரசினுடைய தலையீடு அதிகமாக இருக்கிறது என்று எங்களுடைய அரசு அன்று கருதியது.

உரிமைகளுக்கு எதிரானது

இது மாநில உரிமைகளுக்கு எதிரானது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாநில அரசுக்கு ஏற்ற அதிகாரியை டி.ஜி.பி.யாக பணியமர்த்தினால்தான் அரசோடு சேர்ந்து ஒன்றிணைந்து செயல்பட முடியும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியும் என்று எங்களுடைய முதலமைச்சர் அன்று அந்த முடிவை எடுத்தார்கள். எங்களுடைய கழக அரசு அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கும் சென்று வழக்கு போட்டது.

இதற்கிடையே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக் கூடாது என்பதால், பொறுப்பு டி.ஜி.பி.-யை அன்று எங்களுடைய முதலமைச்சர் நியமனம் செய்தார்கள். அவர் உடல்நிலை சரியில்லை என்று விடுப்பில் சென்றதால், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான திரு.அபய்குமார் சிங் ஐ.பி.எஸ்-ஐ, டி.ஜி.பியாக நியமித்தோம். இதற்குச் சட்டத்தில் இடம் இருக்கிறது. சட்டத்திற்கு உட்பட்டுத்தான் எங்களுடைய தலைவர் அவர்கள், இதைச் செய்திருக்கிறார்கள். இதில் எந்தச் சட்ட விரோதமும் கிடையாது.

போக்சோ வழக்குகள் எங்களுடைய ஆட்சியில் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்று இங்கே ஒரு குற்றச்சாட்டை அமைச்சர் அவர்கள் வைத்திருக்கிறார்கள். போக்சோ குற்றங்களைத் தடுக்க, எங்களுடைய தலைவர் தலைமையிலான அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் நம்பிக்கையை நாங்கள் ஏற்படுத்தினோம். அதனால் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணத்தால்தான் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றிப் புகாரளிக்க முன்வந்தார்கள். அதனால் வழக்குகள் பதிவு அதிகமாகியது. அப்படிப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உடனுக்குடன் புலன் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு உடனடியாகத் தண்டனையும் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்

குறிப்பாக போக்சோ வழக்குகளைக் கையாள்வது தொடர்பாக, அப்போது சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மூலமாக, அதற்கு அமைச்சராக இருந்த என்னுடைய தலைமையில் மூன்று சிறப்பு ஆய்வுக் கூட்டங்களை நான் நடத்தியிருக்கிறேன்.

செப்டம்பர் 2023-இல் காவல்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித் துறை, சமூகநலத்துறை, சட்டத்துறை இப்படி பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன்.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பாதிக்கப்பட்டவர்களுடைய உரிமையை எப்படிப் பாதுகாக்க வேண்டும், அவர்களை எப்படிக் கண்ணியமாக நாம் நடத்த வேண்டும், பள்ளிகளில் என்ன மாதிரி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உடனே போய் சேர்வதை உறுதி செய்ய வேண்டும், சட்ட உதவிகளை வழங்குவது எப்படி என்று வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன. ஆகவே எங்கள் ஆட்சியில் அதிகமான போக்சோ குற்றங்கள் நடந்தன என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது.

இன்னொரு குற்றச்சாட்டும் தொடர்ந்து வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதை ஏற்கனவே அவையில் பதிவு செய்துள்ளேன். போதைப்பொருட்கள் ஒழிப்பில் எங்களுடைய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறீர்கள். நாங்கள் போதைப்பொருள் ஒழிப்பைச் சரியாகச் செய்யவில்லை என்றால், மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் அதிகாரிகளாக அன்று செயல்பட்ட திரு. மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ். அவர்களை நீங்கள் ஏன் இன்றைக்குப் பதவி உயர்வு செய்து தமிழ்நாட்டினுடைய டி.ஜி.பி.யாகப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை வைக்கிறேன்.

எங்களுடைய ஆட்சிக் காலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட திரு. அமல்ராஜ் ஐ.பி.எஸ். அவர்களை இன்றைக்கு ஏன் பதவி உயர்வு செய்து, சென்னை மாநகர காவல் ஆணையராக வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியையும் இந்த அரசிடம் நான் வைக்கிறேன். கடைசியாக யார் ஓடிப்போனார்கள் என்று எல்லாருமே பார்த்திருப்பார்கள். இதை டி.வியில் காட்டினீர்களா என்று தெரியவில்லை.

பேரவைத் தலைவர் அவர்களே, முதலமைச்சர் இந்த பதிலை ஒரு மணி நேரத்திற்கு முன்பே சொல்லியிருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. ’எல்லாரும் அமைதியாக இருங்கள், நான் இப்போது செல்கிறேன். நான் 3 நாள் தயாராகி வருகிறேன்’ என்று சொல்லியிருக்கலாம். இதைதான் நான் சொன்னேன்; தயாராகி வாருங்கள் என்றுதான் சொன்னேன்.

சிங்கப்பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை

பேரவைத் தலைவர் அவர்களே, சிங்கப்பெண் படை அமைத்துவிட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த ஒரு பெண் காவலருக்கே இந்த ஆட்சியில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. அந்த நிலைமையில்தான் இந்த ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது.

அதேபோல், நான் துணை முதலமைச்சராக இருக்கும்போது, நான் அவைக்கே வரவில்லை என்ற குற்றச்சாட்டை அமைச்சர் அவர்கள் இங்கு வைத்துள்ளார். தினமும் அவைக்கு நான் வந்துள்ளேன். வருகைப் பதிவேட்டை எடுத்துப் பாருங்கள்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பட்டிமன்றத்தில் இருந்து வந்திருக்கிறார். அதனால் அவர் பேசும்போது பட்டிமன்றத்தில் பேசுவதைப்போல பேசுகிறார். நிறைய கருத்துகள், வரலாறு பற்றியெல்லாம் பேசுகிறார். அவர் வரலாறு எல்லாம் எங்களுக்கு தெரியும்.

ஒரு வருடத்துக்கு முன்பு எங்கள் கட்சி மேடைகளில், அரசு நிகழ்ச்சிகளில் எங்கள் அரசை அதிகமாக பாராட்டியது, இப்போது இருக்கின்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள்தான். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் எங்களிடம் இருக்கின்றன. இப்போது அவர் இடம் மாறி போனதால், மாற்றி மாற்றிப் பேசுகிறார்.

அவர் ஓடிபோய்விட்டார்

நாங்கள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்வார் என்று நாங்கள் எல்லாம் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தோம். முதலமைச்சரே அதைதான் சொன்னார்.

‘திங்கட்கிழமை பதில் சொல்கிறேன். யாரும் ஓடாமல் இருங்கள்’ என்று சொல்லிவிட்டு அவர் ஓடிப்போய்விட்டார்.

அவர் சொன்ன வார்த்தையைத்தான் நான் சொன்னேன். பதில் சொல்லட்டும். அதற்காகத்தான் நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம். இந்த அரசு காவல் துறையில் மிகவும் சீர்கெட்டு போயிருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் நாங்கள் பதிய வைக்கிறோம். முடிந்தால், இதற்கு தகுந்த பதில்களை முதலமைச்சராவது திங்கட்கிழமை கொடுப்பார் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.

பட்டிமன்றத்தில் பேசியதை நான் ஏதும் தவறாக சொல்லவில்லை. பட்டிமன்றத்தில் பேசுவதைவிட அதிகமாக, நீளமாக எங்கு நிப்பாட்டுவது என்று தெரியாமலேயே சட்டமன்றத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார் என்றுதான் சொல்கிறேன். அதை இழிவாகச் சொல்லவில்லை. நான் நிறைய பட்டிமன்றங்களை விரும்பிப் பார்ப்பேன். அவர் பங்கேற்றுள்ள நிறைய பட்டிமன்றங்களை விரும்பி பார்த்திருக்கிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில், ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்கிறார். நான் சொல்கிறேன், அந்த கமிட்டி கொடுத்த அறிக்கை உங்கள் கையில் இருக்கிறது. அந்த நடவடிக்கையை இப்போது நீங்கள் எடுங்கள். உண்மையாகவே அரசுக்கு தைரியம் இருந்தால் நாங்கள் எடுக்க தவறிய அந்த நடவடிக்கையை நீங்கள் எடுங்கள் என்று நான் சவால் விடுகிறேன்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேசும்போது சொன்னார், துணை முதலமைச்சராக நான் இருக்கும்போது சட்டமன்றத்துக்கு வரவில்லை. என் சார்பாக, முதலமைச்சர் பதில் சொன்னார் என்று. அது நடந்தது ஒரே ஒரு நாள். எனக்கு உடல்நிலை சரியில்லை. மானியக் கோரிக்கையில் நான் பதில் சொல்ல வேண்டியது. முதலமைச்சர் எழுந்து அவர் நாளை வந்து பதில் சொல்வார் என்று சொன்னார். நான் அன்றைக்கு அவைக்கு வரவில்லை.

ஆனால், இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் அவையிலேயே இருக்கிறார். அப்படி இருக்கும்போது, அவர் பதில் சொல்லாமல், ஏன் நீங்களெல்லாம் பதில் சொல்கிறீர்கள் என்பதுதான் எங்களின் கேள்வி.

பேரவைத் தலைவர் அவர்களே, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தயாராக வந்திருக்கிறோம், 100 நாட்களாக இதைத்தான் தயார் செய்தோம் என்று சொன்னார். நாங்களும் உங்கள் முதலமைச்சரைத் தயார் செய்துவிட்டு வாருங்கள் என்றுதான் சொன்னோமே தவிர, நீங்கள்தான் சொன்னீர்கள், தயாராக இருக்கிறார். தயாராகிவிட்டு வருவார் என்று சொன்னீர்கள். அதைதான் நாங்களும் சொன்னோம்.

நாங்கள் விமர்சனம் செய்யவில்லை

இன்னொன்று, எப்போதாவது ஆபத்து அதிகமாக இருக்கும்போது நாம் கொஞ்சம் ப்ரீப்பேர்டாக இருப்பது நல்லது. எனவே, இந்த அரசில் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. எனவே, நாங்கள் எப்போதும் ப்ரீப்பேர்டாகத்தான் இருக்கிறோம்.

பேரவைத் தலைவர் அவர்களே, நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள், தேர்தலுக்கு முன்பு நாங்கள் அவரைப்பற்றி பேசி பேசித்தான் இந்த நிலைமைக்கு வந்துவிட்டோம் என்று சொன்னார். உண்மையைச் சொல்லட்டுமா, நான், எங்கள் கழகத் தலைவர், எங்கள் முன்னணித் தலைவர்கள் யாரும் அவர்களைப் பற்றி பேசாமல் இருந்ததால்தான் அவர்கள் இந்த பக்கம் வந்துவிட்டார்கள். ஒரு வார்த்தைக்கூட அவர்களைப்பற்றி நாங்கள் பேசவே இல்லை. பேசியதற்கான ஆதாரம் ஏதாவது இருந்தால் காட்டுங்கள். ஏனென்றால், ஒரு பிரச்சாரக் கூட்டத்தில்கூட இவர்களை பற்றி நாங்கள் பேசவும் இல்லை. இவர்களை நாங்கள் விமர்சனமும் செய்யவில்லை. அதேமாதிரி அவர்கள் தலைவர் பேச, நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்கிறார். எங்கெல்லாம் சட்டப்பூர்வமாக அனுமதி கொடுக்க முடியுமோ அங்கெல்லாம் அனுமதி கொடுத்திருக்கிறோம். அனைவருக்கும் என்ன விதிகள் பின்பற்றபட்டதோ அதுதான். தேர்தல் விதிமுறை வந்தவுடன், அவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள்தான் முடிவெடுப்பார்கள். இது அரசு எடுக்கக்கூடிய முடிவு கிடையாது.

சில மாவட்டங்களுக்கு எல்லாம் சென்று, அவர்களின் தலைவர், இப்போது இருக்கின்ற முதலமைச்சர் பிரச்சாரம் செய்தார். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கெல்லாம் சென்றார். அங்கு ஒரு தொகுதிகூட அவர்கள் வெற்றிபெறவில்லை. இன்னும்சொல்லப்போனால் இது மெஜாரிட்டி இல்லாத அரசாகத்தான் நடந்துக்கொண்டு இருக்கிறது. பெரும்பான்மையே அவர்களுக்கு கிடையாது. எங்கள் தயவில் அவர்களின் ஆட்சி இன்று நடந்துகொண்டு இருக்கிறது.

அமைச்சர் சொன்ன எஸ்.ஓ.பிஸ் எல்லாம் எந்த சம்பவத்துக்கு பிறகு போடப்பட்டது என்று அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்பவில்லை. அதைப் பேச ஆரம்பித்தால் மீண்டும் பெரிய விவாதமாகிவிடும். நீங்கள் சரி என்று சொன்னால் நான் பேசுகிறேன். பேரவைத் தலைவர் அனுமதி கொடுத்தீர்கள் என்றால், நான் பேசுகிறேன்.

இவ்வாறு சட்டப் பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை ஆற்றினார்.

Also Read: ஒரு திட்டம் நாட்டிற்காக வரும்போது, அரசியல் செய்யக்கூடாது : விஜய் அறிவிப்புக்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு!