Tamilnadu
“மீலாதுன் நபியைக் கொண்டாடிடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
நபிகள் பிறந்தநாளான மீலாதுன் நபியை முன்னிட்டு, தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு,
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மீலாதுன் நபியைக் கொண்டாடிடும் இசுலாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள் என அன்பையும், கல்வி கற்பது ஆண் பெண் இருவரின் கடமை என அறிவையும், ஒருவனுடைய உழைப்புக்கு அவனுடைய உழைப்பின் வியர்வை உலருவதற்குள் ஊதியத்தைக் கொடுத்து விடு எனத் தொழிலாளர்களின் உரிமையையும், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் எனப் பொய்யாமையையும், வறியவருக்கு உதவிடும் இரக்கச் சிந்தனையையும் வலியுறுத்திய பெருமகனார் அண்ணல் முகமது நபி அவர்கள்.
அத்தகைய நபிகள் நாயகம் காட்டிய வழியில் பிறழாது நடக்கும் இசுலாமிய மக்களின் வளர்ச்சிக்காகவும், அவர்தம் உரிமைகளுக்காகவும் தொடக்க காலம் முதலே அரணாகத் திகழும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். பேரறிஞர் அண்ணா அவர்களும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் முதன்முதலாகத் திருவாரூரில் சந்தித்துக் கொண்டதே நபிகள் நாயகம் விழாவில்தான்.
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் காலந்தொட்டே திராவிடப் பெருந்தலைவர்கள் பலர் மீலாதுன் நபி விழாக்களில் தொடர்ந்து பங்கேற்று வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் 1969-ஆம் ஆண்டிலேயே மீலாதுன் நபிக்கு அரசு விடுமுறை அளித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். மேலும், உருது பேசக்கூடிய முஸ்லிம்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது, சிறுபான்மையினர் நல ஆணையம் அமைத்தது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் உருது அகாடமி தொடங்கியது என எல்லா வகையிலும் இசுலாமியப் பெருமக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட இயக்கம் தி.மு.கழகம்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், வக்பு வாரியத் திருத்தச் சட்டம் என இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தபோதெல்லாம் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், சட்டபேரவைத் தீர்மானங்கள் என இசுலாமியரின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது நமது திராவிட மாடல் அரசு. இதனால்தான், எவராலும் அசைத்துப் பார்க்க முடியாத பாச உறவாக தி.மு.கழகத்துக்கும் இசுலாமியர்களுக்குமான உறவு தொடர்கிறது.
இப்படிப்பட்ட நீண்ட நெடிய நட்பின் உணர்வோடும் உரிமையோடும் நபிகள் நாயகம் காட்டிய அன்பு வழியில் பயணித்திடும் என் நெஞ்சுக்கினிய இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மீலாதுன் நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read
-
கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை: தொடர் சித்திரவதை.. முறிந்த விலா எழும்பு.. Post Mortem அறிக்கை சொல்வது?
-
இது சமூக அநீதி இல்லையா? மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்தால் நட்டம் வந்துவிடுமா?: தவெக அரசுக்கு தீபக் கேள்வி
-
“பத்திரிக்கைகளைப் பற்றி இப்படிப் பேசக் கூடாது” : பேரவையில் தவெக அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய தி.மு.க!
-
பரந்தூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டது ஏன்? – பேரவையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
-
“தமிழர்கள் படுகொ* செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது; த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா?” : உதயநிதி கேள்வி!