Tamilnadu
ஒவ்வொரு தொண்டரும் ஒரு நிர்வாகி ; உடன்பிறப்புகள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றம் : முரசொலி!
முரசொலி தலையங்கம் (24-08-2026)
ஒவ்வொரு தொண்டரும் ஒரு நிர்வாகி!
திராவிட முன்னேற்றக் கழகத்தை வளப்படுத்தவும், நலப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் உணர்வுப்படுத்தவும் புதிய மறுசீரமைப்பை கழகத் தலைவர் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 22 அன்று நடைபெற்ற கழகத்தின் தலைமைச் செயற்குழுவில் அறிவித்துள்ளார்கள்.
‘நிலைக்கண்ணாடியில் அடிக்கடி பார்ப்பதைப் போல அகக்கண்ணாடியில் அடிக்கடி பாருங்கள்' என்பார் முத்தமிழறிஞர் கலைஞர். அப்படி அகக்கண்ணாடியில் பார்க்கும் படலமாகத்தான் தலைவர் அவர்களின் உரை அமைந்துள்ளது.
“திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த பிறகும், கழகம் வலிமையோடு இருப்பதற்கான காரணம், நம் அமைப்பு முறைதான். தலைவர் கலைஞரின் வரிகளை நீங்க மறந்திருக்க மாட்டீர்கள். ‘இந்த கருணாநிதியின் வாழ்வு முடிந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாழ்வு முடியாது! அதனை, அதன் அமைப்புமுறை காப்பாற்றும்!' என்றார். இதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டது. அப்படிப்பட்ட அந்த அமைப்பு முறையின் வலிமையால்தான், நாம் நிற்கிறோம்”என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த அமைப்பு முறையின் பலத்தில்தான் கழகம் இயங்குகிறது. அதனை மேலும் மேலும் வலிமைப்படுத்தவே தலைவர் நினைக்கிறார்.
கிளைக்கழகச் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள் அதிகபட்ச வயது 45 என்றும், மாநகர-நகர-பேரூர்-வட்டக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என்றும், பேரூர்க் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என - வும், பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 எனவும், நகரக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒன்றியக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 எனவும் நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. இனி 118 மாவட்டங்களாக கழக அமைப்பு இயங்கும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
புதிய புதிய உடன்பிறப்புகள் பொறுப்புகளுக்கு வர வேண்டும், பொறுப்புகளுக்கு வருகிறவர்கள் புத்துணர்வுடன் செயல்பட வேண்டும், 'நமக்கும் ஒரு வாய்ப்பு வரும்' என்று தொண்டர்கள் கருதிச் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த மாறுதல்களை தலைவர் அவர்கள் செய்துள்ளார்கள்.
காலங்கள் தோறும் கழகம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வந்துள்ளது. இத்தகைய புதுப்பிப்பு என்பது ஆட்சியில் இருந்தபோதும் நடந்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் நடந்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.
கழகத்துக்குத் தடை என்கிற அளவுக்கு எல்லாம் பேரறிஞர் அண்ணா காலத்தில் சிக்கல்கள் ஏற்பட்டது. அப்போதும் அண்ணா அவர்கள், கழகத்தைக் கட்டிக்காக்கும், வலிமைப்படுத்தும் முடிவுகளைத்தான் எடுத்தார்கள். அமைப்பு பலமாக இருந்தால் கொள்கையைக் காப்பாற்றலாம் என்பதே அண்ணாவும் கலைஞரும் போட்டுத் தந்த பாதை ஆகும்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஆட்சியைப் பிடிப்பதற்காக உருவான இயக்கம் அல்ல. கழகம் தொடங்கிய போது தேர்தலில் நிற்கும் எண்ணமே இல்லை. தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக உருவான விடுதலை இயக்கம். சமூக சீர்திருத்தக் கோட்பாடுகளை நடைமுறைப் படுத்த அதிகாரம் தேவை என்ற அவசியத்தை உணர்ந்து தேர்தலில் நின்று சட்டமன்றத்தைக் கைப்பற்றிய இயக்கம். எனவே தேர்தல் வெற்றி, தோல்விகளுக்காக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்பட்டது இல்லை. எந்த முடிவும் கொள்கையை வென்றெடுக்க உருவாக்கப்படுமே தவிர, தேர்தலை மனதில் வைத்து அல்ல.
இயக்கம் என்ற ஒன்று இருந்தால் தான் கொள்கையை வெற்றி பெற வைக்க முடியும். அந்த இயக்கத்தை வலிமைப்படுத்த தொண்டர்களின் சிந்தனைக்கு தலைமை முக்கியத்துவம் தரும். அதுவே செயற்குழு, பொதுக்குழு ஆகும். இப்போது தலைவர் உருவாக்கித் தந்திருக்கும் மறுசீரமைப்புத் திட்டமும் தொண்டர்களின் எண்ணத்தில் இருந்தவை தான். 38 குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று உடன்பிறப்புகளின் கருத்துக்களைப் பெற்று கொடுத்த தகவல்களை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு தொகுத்து வழங்கி இருக்கிறது. அவர்கள் கொடுத்த ஆலோசனைகளைத் தான் சீரமைப்புத் திட்டமாக வடித்தெடுத்து வழங்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் சேர்க்கை - கட்சித் தேர்தல்- புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பு ஏற்பது என கழகம் பரபரப்பாக இருக்கிறது. இதுதான் பல ஆண்டுகளாக உடன்பிறப்புகள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றம் ஆகும். அதனைத்- தான் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துள்ளார்கள்.
"ஒரு மலையைப் பிளந்து கற்களாக்குகிறோம். அவற்றில் ஒரு கல்லில் விக்கிரகம் உருவாக்குகிறோம். மற்ற கற்கள் மண்டபங்கள் ஆகின்றன. கோபுரமாகின்றன. மதில் சுவராகின்றது. எல்லாக் கற்களும் விக்கிரகங்கள் ஆகிவிட முடி- யாது. அப்படி ஆகிவிட்டால் பிறகு கோயில் இருக்க முடியாது. விக்கிரகமாயிருக்கிற கல்லும்; தானும் மற்ற கற்களைப் போலத்தான் மலையிலிருந்து வந்தோம் என்பதை மறந்து விடக்கூடாது. கோயில் இருப்பதால்தான் விக்கிரகத்துக்கு அபிஷேகம் - ஆராதனை எல்லாம்! இல்லையேல், அது எந்த மரத்தடியோ? அல்லது படித்துறையோ? ஒரு அமைப்பில் எல்லா பொறுப்பிலும் இருப்போர் உணர்ந்துகொள்ள வேண்டிய உண்மை இது!”என்றார் தலைவர் கலைஞர். அத்தகைய உணர்ச்சியைத் தான் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊட்டி வருகிறார்கள்.
"ஒவ்வொரு தொண்டனும் ஒரு நிர்வாகியாகச் செயல்படும் போதுதான் இயக்கம் வளரும்; இயக்கம் வாழும்!”என்று ஆணையிட்டுள்ளார் தலைவர் மு.க.ஸ்டாலின். அத்தகைய காலம் உருவாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பணி என்றென்றும் தொடரும்!
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!