Tamilnadu
அந்த 3 கோப்புகளையும் திறந்து பாருங்கள் : பேரவையில் முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் Open Challenge!
இன்று (21.08.2026) சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு :
ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் குறிப்பிட விரும்புகிறேன். ஏற்கனவே, எங்கள் மூத்த சட்டமன்ற உறுப்பினர், உங்களின் கவனத்துக்கு எடுத்து வந்துள்ளார்கள். மீண்டும் அதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
இந்த அவையை நீங்கள் உங்களால் முடிந்தவரைக்கும் நல்லமுறையில் வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறீர்கள். எங்களுக்கும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பையும் கொடுக்கிறீர்கள். எங்களை விட அதிகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
வரலாற்றில் முதல்முறையாக
நான் இங்கே குறிப்பிட விரும்புவதெல்லாம், ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் எங்களுக்குப் பதில் சொல்லும்போது, ஆதாரம் இல்லாமல், பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். அவற்றையெல்லாம் நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறீர்கள்.
இன்னும் சொல்லப்போனால், சட்டமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதைவிட, ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் பேசுவதையெல்லாம் நீங்கள்தான் அவைக்குறிப்பில் இருந்து நிறைய எடுத்திருக்கிறீர்கள். அந்த வரலாற்றை நீங்கள் படைத்திருக்கிறீர்கள். அதற்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்போது இந்த அவை நிகழ்ச்சிகள் எல்லாம் நேரலையில் சென்றுகொண்டு இருக்கின்றன. நாங்கள் கேள்விகள் கேட்டால், நாங்களே அதிசயப்படுகின்ற அளவுக்குப் பதில்களையும் கொடுக்கிறார்கள். கேள்வியைக் கேட்டால் பதில் சொல்லலாம். இப்போது பாடல்கள் எல்லாம் பாட ஆரம்பித்துவிட்டீர்கள்.
அவைக்குறிப்பில் நீக்கம்
நீங்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறீர்கள். ஆனால் நேரலையில் போகும்போது யுடியூப் சேனல்களிலும், சோசியல் மீடியாவிலும் இவற்றையெல்லாம் ரீல்ஸ்களாக கட் செய்யப்பட்டு, அதிகமாக ஷேர் செய்யப்படுகின்றன. அதன்பிறகு, இவற்றை நீங்கள் நீக்குவதில் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
எனவே, மீண்டும் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அதேபோல் இன்னொரு விஷயம்.
நேற்று முன்தினம் இந்த பேரவையில் பேசிய நம் முதலமைச்சர் அவர்கள், தன் டேபிளில் மூன்று கோப்புகள் (பைல்ஸ்) இருப்பதாகவும், அந்த கோப்புகளை என்னைத் திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று அவர் எங்கள் அரசைக் குற்றம் சாட்டுகின்ற வகையில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
நாங்கள் கேட்டுக்கொள்வது, தயவுசெய்து அதை அவர் திறந்து பார்க்க வேண்டும், அதன் மீது அவர் ஆக்சஷன் எடுக்கவேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள், எதற்காக காலம் கடத்துகிறீர்கள்? இதையே மூன்று மாதமாக சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால்தான், அதைத் திறந்து பார்ப்பீர்களா? நல்ல நேரம் ஏதாவது பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களா?
நேரலை என்பது, தி.மு.க ஆட்சியில்தான்
ஜோசியக்காரரை நியமித்துவிட்டு நீக்கியிருக்கிறீர்கள். ஜோசியக்காரர் என்பது ஒரு தவறான வார்த்தை கிடையாது.
நேரலை என்பது தி.மு.க ஆட்சியில்தான் முதன்முறையாக ஒளிபரப்பப்பட்டது. கேள்வி நேரத்தை முழுவதுமாக ஒளிபரப்பு செய்தோம். ஆனால், நீங்கள் கேள்வி நேரத்தையே எடுக்கமுடியாத நிலைமையில்தான் இந்த அரசு நடந்துகொண்டு இருக்கிறது.
நாங்கள் நேரலை செய்யவில்லை என்று சொன்னார்கள். சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக நேரலை செய்தது திராவிட மாடல் அரசின் எங்கள் தலைவர் அவர்கள்தான். ஒவ்வொரு நாளும் 1.30 மணி நேரம் கேள்வி நேரம். 10 கேள்விகள் எடுக்கப்பட்டு, அப்போது இருந்த எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்குப் பேச வாய்ப்பு கொடுத்தது எங்கள் தலைவர்.
பிரச்சினைகள் வருகின்றன
இப்போது எல்லா நிகழ்ச்சிகளையும் நீங்கள் நேரலை செய்கிறீர்கள். இந்த பிரச்சினையைத்தான் உங்களுக்குச் சொல்கிறேன். நேரலை செய்வதால் என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்று சொல்லி நீங்கள் நீக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், அது ரீல்ஸ்களாக கட் செய்யப்பட்டு பகிரப்படுகின்றன.
அதன் பிறகு முதலமைச்சர் சொன்னதுதான். மூன்று கோப்புகள் (பைல்ஸ்) இருக்கின்றன என்று சொன்னார். நான் ஓப்பன் சேலஞ்ச் செய்கிறேன். முதலமைச்சர் அவர்கள் அந்த கோப்புகளைப் பார்க்கட்டும். உண்மையான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் இருந்தால், அவர் நடவடிக்கை எடுக்கட்டும். எனவே, சினிமாவில் பேசுவது போலெல்லாம், சட்டமன்றத்தில் பேசினால் சரிவராது.
பேரவைத் தலைவர் வாயிலாக நாங்கள் கேட்டுக்கொள்வது. தயவுசெய்து அந்த கோப்புகளை (பைல்ஸ்)யெல்லாம் சீக்கிரம் பிரித்துப் பாருங்கள். ஏதாவது, குற்றச்சாட்டு இருந்தால், அதற்கு ஆதாரம் இருந்தால், அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். இந்த உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம், திராவிட முன்னேற்றக் கழகம் பயப்படுவதற்கான தேவை கிடையாது.
பேரவைத் தலைவர் அவர்களே, நான் எங்கள் சார்பாகப் பேசிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் நீக்கிவிட்டீர்கள். ஆனால், இதெல்லாம் இப்போது நேரலையில் போய்விட்டது. இப்போது அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள். `லைவ்’ கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை, பாராட்டுகிறோம். ஆனால், அதில் இருக்கின்ற பிரச்சினைகளைச் சொல்கிறேன். நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன், நீக்குகிறேன் என்று சொல்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு நீக்கினாலும், அது சோசியல் மீடியாவில் வைரலாக போய்க்கொண்டு இருக்கிறது.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எங்களின் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் அவர்கள் மானியக் கோரிக்கைகயைப் பற்றித் தெளிவாக புள்ளிவிவரங்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். தவறான வார்த்தைகளை முதலில் பேசியது யார் என்று உங்களுக்கு தெரியும். அவற்றையெல்லாம் நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
59 சட்டமன்ற உறுப்பினர்கள்
பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் மூலமாக பதியவைக்க விரும்புகிறேன். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த அரசு புதிய வாகனம் வழங்குவதாக நேற்று முன்தினம் அறிவித்திருக்கிறீர்கள்.
இதில் எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைமையை, இந்த சபையில் பதிய வைக்க விரும்புகிறேன். ஏற்கனவே, தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே கூறி வருவதால், எங்கள் கழகத் தலைவர், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்கள் வாகனங்களைப் பெறுவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.
மேலும் அரசுக்கு ஏற்படுகின்ற தேவையற்ற செலவுகளைக் குறைக்கின்ற நோக்கத்தில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே, இந்த அறிவிப்பின் கீழ் வாகனம் வழங்க வேண்டும் என்பதை இந்த அரசின் கவனத்துக்குத் தாங்கள் எடுத்துச்செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கையொப்பமிட்ட கடிதங்களை உங்கள் மூலமாக இந்த அரசுக்கு கொடுக்கிறோம்.
கார் தேவையில்லை
பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து சொல்வது, `கஜானாவைத் துடைத்து வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். கஜானாவில் பணம் இல்லை’ என்பதுதான். தொடர்ந்து அவர்கள் வைத்திருக்கின்ற குற்றச்சாட்டும் அதுதான். அதுமட்டுமல்ல, இவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில், இப்போது இருக்கின்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அவர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலபேர் சொல்லியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்கிறீர்கள் என்று, குற்றம் சாட்டிவிட்டு இன்றைக்கு காரை இலவசமாக கொடுக்கிறீர்கள். அது உங்கள் முதலமைச்சரின் உரிமை. எங்களுக்கு கார் தேவையில்லை. எங்கள் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு கார் தேவையில்லை. யாருக்கு கார் வேண்டுமோ, நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.
எங்களின் வேண்டுகோள் என்னவென்றால், வேட்புமனுத் தாக்கலில் நீங்கள் யார், யாருக்கு கார் இல்லை என்று பதிவு செய்திருப்பீர்கள். எவ்வளவு சொத்து இருக்கிறது என்று சொல்லியிருப்பீர்கள். அதற்கு தகுந்த மாதிரி, அவர்களின் வசதி வாய்ப்புக்குத் தகுந்த மாதிரி கார் வாங்கி கொடுங்கள் என்பதுதான் எங்களின் பரிந்துரை.
தொகுதி மறு வரையறை
பேரவைத் தலைவர் அவர்களே, நம் அமைச்சர் அவர்கள் நேற்று நடந்த தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், தொகுதி மறுவரையறை பற்றி முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை பற்றிப் பேசினார்கள். கடந்த 12-ஆம் தேதி, இதே சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி ஒத்துழைப்புடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அதில் மிகத் தெளிவாக 543 எம்.பி.க்கள் சீட்டை அப்படியே இருக்கச் செய்யவேண்டும் என்றுதான் அந்தத் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளது. அந்தத் தீர்மானத்தைத்தான் நாம் நிறைவேற்றியுள்ளோம். ஆனால், நேற்று நடந்த கூட்டத்தில், முதலமைச்சர் உரையில், இந்த 543 எம்.பி.க்கள் சீட்டை அப்படியே இருக்கும்படி (ப்ரீஸ்) செய்ய வேண்டும் என்று எந்த இடத்திலும் இடம்பெறவில்லை என்பதை இந்த அவையின் கவனத்துக்கு எடுத்து வருகிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தத் தொகுதி மறுவரையறை விஷயத்தில் நாங்கள் தொடர்ந்து எங்களின் நிலைப்பாட்டை, மீண்டும் இங்கே பதிய வைக்க விரும்புகிறேன். எங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே, இந்த அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 543 என்ற எண்ணிக்கை தொடர வேண்டும். அப்படி அதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு இருக்கின்ற 7.18 சதவிகித பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. அது ஏறலாமே தவிர, அது குறையக் கூடாது என்பதுதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு.
இவ்வாறு சட்டப் பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
Also Read
-
சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறது தவெக அரசு : கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் விமர்சனம்!
-
தவெக அரசு அறிவித்த குறுவை சிறப்புத்தொகுப்பு விவசாயிகளை சென்றடையவில்லை! : உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் : சோகத்தில் திரையுலகம்!
-
த.வெ.க அரசை எதிர்க்கும் சி.பி.எம் : நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு - காரணம் என்ன?
-
“முதல்வர் அறை டெண்டரில் முறைகேடு? மோசடித்தனத்தின் உச்சம்” : முரசொலி தலையங்கம் விளாசல்!