Tamilnadu
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் உரிமை பிரச்சினையை வலியுறுத்தி, தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் தஞ்சாவூர் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களின் போது விஜயின் உருவப் பொம்மைகளை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில், உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி பின்னர் விடுவிக்கப்படுவார் என்றும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை முடித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சென்னை முதல் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையம் வரை சுமார் 8 மணி நேரம் அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலின், அங்கு சுமார் ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த அவருக்கு அங்கு திரண்டிருந்த 1,000-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பொதுமக்களை நோக்கி கையசைத்து உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார்.
காலை முதல் நீண்ட நேரம் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்ட தகவல், தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!