Tamilnadu

“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!

காவிரி - மேகதாது விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டெல்டா விவசாயிகள் வறட்சி ஏற்பட்டதனால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் கூட, விஜய் அரசு இதுவரை வாயை திறக்கவில்லை. அதோடு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் பேசாமல் கள்ள மௌனம் காத்து வருகிறார் விஜய்.

இதனை கண்டித்து நேற்று (ஆக.03) தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் வாயை மூடி வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கும், விஜய்க்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். தொடர்ந்து விவசாயிகள் படும் வேதனை குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவதாகவும் உறுதியளித்தார்.

இந்த சூழலில் நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பக்கூடாது என்ற நோக்கத்தில், சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கைது செய்ய முயற்சிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக்கோரி திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 12 மணி வரை உதயநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஆனால் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை மதிக்காமல், அவசர அவசரமாக பகல் சுமார் 11 மணியளவில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளது தவெக போலீஸ். உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு தமிழ்நாடு போராட்டம் வெடித்துள்ளது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கைதுக்கு, திமுக இளைஞரணி கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு :-

கழக இளைஞர் அணிச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் கைது செய்த பாசிச த.வெ.க அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.

காவிரி பிரச்சினைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க அரசு மீது, மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் அவர்கள் முன்வைத்த எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வக்கற்ற த.வெ.க அரசு, பொய்வழக்கு போட்டு தன் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.

எதிர்க்கட்சித்தலைவர் அவர்கள் யார் பெயரையும் குறிப்பிடாமல் காவிரி பிரச்சினை குறித்து பேசியதை, ’ஆபாசமாகப் பேசினார்’, ’இரட்டை அர்த்தத்தில் பேசினார்’ என்று திரிப்பது யார்?

’வாயில நல்லா வந்துடும்’, ‘கவர்ச்சி காட்ட நான் என்ன ….வா?’, ஒரு டேஷும் இல்லை’ என்று ஆபாசமாகப் பேசித்தள்ளும் டேஷ் டேஷ் முதலமைச்சர், தன் சொந்த கட்சிக்காரரையே ‘ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடிப்பேன்’ என்று சொல்லும் அமைச்சர் ஜெகதீஸ்வரி, ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தி மகளையும் ஆபாசமாக சித்திரித்த ‘பலகட்சி மாறி’ சி.டி.நிர்மல்குமார், நாள்தோறும் பாலியல் வழக்குகளில் கைதாகும் குற்றவாளிகளின் கூடாரமான த.வெ.க – இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.

சோபாமாடல் முதலமைச்சர் விஜய்யின் படங்களிலும் பாடல்களிலும் உள்ள இரட்டை அர்த்த வரிகள், ஆபாசக்காட்சிகளைத் தொகுத்தால் அது மாபெரும் ஆபாச குடோனாக இருக்குமே! அரசியலுக்கு வந்து கடைசிப்படம் என்று அறிவித்த திரைப்படத்திலும் வாய் கூசாமல் கெட்டவார்த்தை பேசிய விஜய்தான் ஒழுக்க காவலரா?

இதே விஜய்யை நேரடியாக ஒரு நடிகையுடன் இணைத்துப் பேசிய பா.ஜ.க மாநிலச்செயலாளர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம்கூட தெரிவிக்காத த.வெ.க இப்போது எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.

‘மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை’ என்று சொன்ன பா.ஜ.க அரசின் அமைச்சரைக் கண்டித்து, டெல்லிக்குப் போராடச் சென்ற விவசாயிகளைக் கைது செய்த மகாராஷ்டிரா காவல்துறையைக் கண்டித்து, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி வந்தே மாதரத்தைத் திணிக்கும் ஆளுநர்- ஒன்றிய அரசைக் கண்டித்து எல்லாம் போராடத் துணியாத த.வெ.க, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக மட்டும் போராடுகிறது.

நேற்று புகார், இன்று எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்ய அவசர முயற்சி!

‘குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளைக் காப்பாற்றியவர்’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றம் சாட்டியும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத பாசிச த.வெ.க அரசு, அவசர அவசரமாக எதிர்க்கட்சித் தலைவரைக் கைதுசெய்கிறது.

அரைநூற்றாண்டு உரிமைப்போராட்டத்தை பின்னுக்குத் தள்ளி காவிரி பிரச்சினையில் கையாலாகாத்தனமாக செயல்பட்ட த.வெ.க அரசின் மீது எதிர்க்கட்சித்தலைவர் முன்வைத்த எந்த குற்றச்சாட்டுகளுக்காகவது பதில் சொல்ல திராணி இருக்கிறதா?

நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எழுப்பப்போகும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமுடியாது என்ற அச்சத்தில் கைது செய்திருக்கும் பாசிச த.வெ.க அரசே!

கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது. எத்தனையோ கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள், ஒடுக்குமுறைகளைக் கண்ட இயக்கம் தி.மு.க. பாசிச த.வெ.க அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்!

Also Read: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!