Tamilnadu
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் உரிமை பிரச்சினையை வலியுறுத்தி, தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் தஞ்சாவூர் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களின் போது விஜயின் உருவப் பொம்மைகளை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,000-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில், உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்றும், காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்படுவார் என்றும், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை முடித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கைது செய்யப்படுவதற்கு முன்பாக காவல் துறை வாகனத்தில் இருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றவில்லை. மேகதாது அணை மற்றும் காவிரி நீர் உரிமை பிரச்சினையில் குரல் கொடுக்காத இந்த பயந்தாங்கோலி அரசைக் கண்டித்துத்தான் தஞ்சாவூர் போராட்டத்தில் பேசினேன்.
ரீல்ஸ் வெறி முத்திப்போயுள்ள தவெக அரசின் அமைச்சர்களைக் கண்டித்துப் பேசினேன். அதற்காக நான் பேசாத கருத்துகளை ‘கட், காப்பி, பேஸ்ட்’ செய்து பொய்யான செய்தியை பரப்பி, அதன் அடிப்படையில் என்னைக் கைது செய்துள்ளனர்.
இந்த கைதுக்கு பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. முத்தமிழறிஞர் கலைஞரின் வளர்ப்பு, தலைவர் மு.க. ஸ்டாலினின் வளர்ப்பு. நான் மட்டுமல்ல, திமுகவின் கடைசித் தொண்டர் வரை யாரும் பயப்பட மாட்டார்கள். அவர்களுக்கு அவ்வளவு புத்திசாலித்தனம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் எல்லாம் முட்டாள்கள். எந்தப் பிரச்சினை வந்தாலும், அதை நான் நேருக்கு நேர் சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!