Tamilnadu

விஜய் அரசின் முடிவுக்கு நீதிமன்றம் கொடுத்த அடி : கரூர் நெரிசல்... அரசுப் பணி ரத்து!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்குவது எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.

கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கிய அரசின் முடிவு, சட்டப்பூர்வமான பணியாளர் தேர்வு முறையைப் பின்பற்றாமல் செய்யப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடாகும் என்றும், இது தங்களுக்குப் பிடித்தமான அரசுப் பணியைத் தேர்ந்தெடுத்துப் பெறும் தவறான ஒரு வாய்ப்பை உருவாக்கிவிடும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், இதுபோன்ற விபத்து மற்றும் அசம்பாவிதச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக அரசு வேலை வழங்கும் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், போட்டித் தேர்வுகள் மற்றும் சட்டப்பூர்வ விதிமுறைகளின் அடிப்படையிலேயே அரசுப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. சுமார் 39 லட்சம் பேர் வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர், ஒவ்வொரு தேர்விற்கும் 20 லட்சம் பேர் விண்ணப்பம் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருணை அடிப்படையிலான இதுபோன்ற சிறப்புப் பணி நியமனங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை எனத் தேர்வாணையத்தின் சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தோருக்கு திறன் வளர் பயிற்சி வழங்கி உதவலாம் என நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

Also Read: த.வெ.க அரசின் 24 மணி நேர வேலை இதுதான் : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொல்வது என்ன?