Tamilnadu

ஆதாரத்தோடு பேசுங்கள்...! : முதலமைச்சர் பேச்சை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு!

17-வது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 18-ம் தேதி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் மரபுவழி உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, தமிழ்நாட்டில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சிக்கல்கள் மற்றும் மின்வெட்டுப் பிரச்சனைகள் குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பினார்.

மேலும், அவையின் மரபை மீறி `தேசிய கீதம்’ ஏன் இரண்டு முறை (தொடக்கத்திலும் இறுதியிலும்) பாடப்பட்டது என்ற கேள்வியையும் முன்வைத்தார். அதோடு, "உங்களுக்கு ஆளுநர் முக்கியமா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமா?" என்றும்,

கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட `நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றத்திற்குத் தனது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தார். இத்திட்டத்தின் மூலம் 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதையும் பேரவையில் அவர் சுட்டிக்காட்டினார்

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவரைப் பேச விடாமல், த.வெ.க அமைச்சர்களையே தொடர்ந்து பேச அனுமதித்தார்.

பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு அனுமதி கொடுத்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ”Party Fund என்று முதலமைச்சர் பேசுகிறார். அமைச்சர் எந்த கட்சியும் குறிப்பிட்டு பேசவில்லை என தெரிவிக்கிறார். தைரியம் இருந்தால் எந்த கட்சி என்று சொல்லுங்கள். அதைப்பற்றி பேச நாங்கள் தயாரா இருக்கிறோம். முதலமைச்சர் விஜய் ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும். நாங்கள் பதில் அளிக்கத் தயார்.

நேற்று நான் பேசி முடித்தவுடன் அவை முடிந்துவிட்டது எனச் சொல்லிவிட்டீர்கள்.நாங்கள் எல்லாம் வீட்டுக்குப் போய்விட்டோம். வீட்டுக்குப் போய்த் தொலைக்காட்சியில் பார்த்தால்... ஒரு அமைச்சர் பதில் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார். இது என்ன மரபு? நீங்கள் பேசிக்கொண்டே இருப்பீர்களா? நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமா?" எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், மீண்டும் அவதூறாகப் பேசினார். இதையடுத்து தி.மு.க உறுப்பினர்கள் முதலமைச்சரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Also Read: த.வெ.க ஆட்சியில் த.வெ.க.வைச் சேர்ந்த பெண்ணிற்கே பாதுகாப்பு இல்லை! - வெளியான திடுக்கிடும் தகவல்!