Tamilnadu

கரூர் விவகாரம் - உண்மை வெளிவந்துவிடும் என்பதால் காவல்துறை அதிகாரிகளை மாற்றிய விஜய் : டி.கே.எஸ் இளங்கோவன்!

கரூர் துயரச் சம்பவத்தின்போது பணியாற்றிய காவல்துறையினரை அங்கேயே வைத்திருந்தால், விசாரணையின்போது அவர்கள் உண்மையைச் சொல்லிவிடுவார்கள் என்ற அச்சத்தினால்தான் அவர்களைத் விஜய் மாற்றியுள்ளார்' என தி.மு.க செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.எஸ்.இளங்கோவன் ”த.வெ.க ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை இல்லை என விசிக, இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஏற்கனவே கூறிவிட்டன. இருந்தபோதிலும், தமிழ்நாடு மீண்டும் ஒரு பொதுத்தேர்தலைச் சந்திப்பதைத் தடுப்பதற்காகவே தாங்கள் த.வெ.க-விற்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளன. அதேநேரம், 'நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்; எங்களுடைய கூட்டணி தி.மு.க கூட்டணிதான்' என்பதையும் அக்கட்சிகள் தெளிவுபடுத்திவிட்டன.

ஒருவேளை தமிழகத்தில் ஆட்சி அமையாவிட்டால் ஆளுநர் ஆட்சி அமலாகிவிடும்; ஆளுநர் ஆட்சி அமைந்தால் அது மறைமுகமாகப் பா.ஜ.க ஆட்சியாக மாறிவிடும். எனவே, 'பா.ஜ.க தமிழ்நாட்டை மறைமுகமாக ஆளக்கூடாது' என்ற ஒற்றைச் சிந்தனையின் அடிப்படையில்தான் அவர்கள் த.வெ.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால், இக்கட்சிகள் அரசாங்கத்தில் பங்கெடுப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கவே முடியாது; அவர்கள் ஆட்சியில் சேரவும் மாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கரூர் துயரச் சம்பவம் த.வெ.க தலைவர் விஜய் செய்த தவறால்தான் நடந்தது. 'மதியம் 12 மணிக்கு வருகிறேன்' எனக் கூறிவிட்டு, மாலை 7:30 மணிக்கு வந்தே அவர் உரையாற்றினார். விஜய் சரியான நேரத்திற்கு வந்து உரையாற்றிவிட்டுச் சென்றிருந்தால், மக்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பியிருப்பார்கள்.

மேலும், கரூர் துயரச் சம்பவத்தின்போது பணியாற்றிய அதிகாரிகளை அங்கேயே வைத்திருந்தால், விசாரணையின்போது அவர்கள் உண்மையைச் சொல்லிவிடுவார்கள் என்ற அச்சத்தினால்தான் அவர்களை விஜய் மாற்றியுள்ளார்.

தி.மு.க - அ.தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது ஆதவ் அர்ஜுனாவின் வெறும் கற்பனையே ஆகும். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் இருவேறு எதிர் எதிர் திசைகளில்தான் அரசியல் செய்து வருகின்றன.

அ.தி.மு.கவை எதிர்த்துத்தான் இந்தத் தேர்தலிலும் தி.மு.க போட்டியிட்டது. 'ஓர் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நடக்கிறது என்றால், செய்தி மக்கள் தொடர்புத் துறைதான் புகைப்படங்களை எடுத்து வெளியிடும்; அதுவே இயல்பான நடைமுறை. ஆனால், த.வெ.க இந்த அடிப்படை விதிமுறைகள்கூடத் தெரியவில்லை. இது ஒரு சிறுபிள்ளைத்தனமான நிகழ்வு" என தெரிவித்துள்ளார்.

Also Read: கலைஞரின் 103 ஆம் பிறந்த நாள் - 4 மாநிலங்களில் 103 பரப்புரைக் கூட்டங்கள் : ஆசிரியர் கி.வீரமணி அறிவிப்பு!