Tamilnadu
“மே 4ஆம் தேதி உழைப்பிற்கான பலன் கிடைக்கும்... நல்லாட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
உலக உழைப்பாளர்களின் திருநாளான மே தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை மே தினப் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு :
உரிமைக்காகவும், உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்த மே முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முதலில் இந்த மே முதல் நாளைச் சென்னையில்தான் நாம் கொண்டாடத் தொடங்கி இருக்கிறோம். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்கள் தலைமையில்தான் முதன்முதலாகச் சென்னை மாநகரத்தில் இந்த மே முதல் நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது.
உழைப்புக்கேற்ற ஊதியம், தொழிலாளர்களின் உரிமை, அதேபோன்று இன்றைக்கு நம்முடைய கழகத் தோழர்கள் உழைத்திருக்கும் உழைப்பிற்கான பலன் வரும் 4-ஆம் தேதி பெற இருக்கிறோம். அதில் துளி அளவுகூட மாற்றமில்லை. இதை ஏதோ கருத்துக் கணிப்பின் அடிப்படையில் நான் சொல்கிறேன் என்று யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை. கழகத் தோழர்களை நான் உணர்ந்து கொண்டிருக்கும் காரணத்தினால் அந்தக் கருத்தை நான் எடுத்து வைத்திருக்கிறேனே தவிர வேறொன்றும் இல்லை.
இன்று மே முதல் நாளை, தொழிலாளர்களுக்குரிய மரியாதையையும், மதிப்பையும், அவர்களது உரிமையையும் போற்றும் வகையில் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
மே முதல் நாள் - பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், உடனடியாக இந்நாளை அரசு விடுமுறையாக அறிவித்துக் கொண்டாடத் தொடங்கினார். ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தது மட்டுமல்லாமல், அந்த விடுமுறை நாளைச் சட்டமாக்கித் தந்தவர் அண்ணாவிற்குப் பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.
அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மே முதல் நாள் அரசு விடுமுறையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இதனை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துச் சொன்னார். நாடாளுமன்றத்தில் நம்முடைய உறுப்பினர்கள் எல்லாம் இதற்காகக் குரல் எழுப்பினார்கள். அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியா முழுமைக்கும் ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறையாக அறிவித்து, அதுவும் இன்றைக்கு கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது, 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற தத்துவத்தின் அடிப்படையிலான கொள்கையோடுதான் நாம் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். அது தொடரும், தொடரும், தொடரும் என்ற உறுதியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மே நாள் நினைவுப் பூங்காவைத் தலைவர் கலைஞர் அவர்கள்தான் உருவாக்கித் தந்தார்கள். இந்தப் பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுச் சின்னமும் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். அது எப்படி அமைய வேண்டும் என்பதற்காகப் பலமுறை இந்த இடத்திற்கு நேரடியாக வந்து, அனைத்தையும் சரிசெய்து உருவாக்கித் தந்தார்.
எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், தொழிலாளர்கள் மீதும், தொழிலாளர்களின் உரிமைகள் மீதும் தலைவர் கலைஞர் அவர்கள் எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தாரோ, அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாக நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம், பணியாற்றுவோம், உழைப்போம் என்று கூறி விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!