Tamilnadu
”கலைஞர் குறித்து பழனிசாமியின் அவதூறு பேச்சு.. கல்லினும் கொடிய மனம் கொண்ட பழனிசாமி” : குவியும் கண்டனங்கள்!
எடப்பாடி பழனிசாமி எனும் பாஜகவின் பாதம்தாங்கி, தமிழ்நாட்டிற்கு துரோகத்தை மட்டுமே செய்துகொண்டிருக்கும் பழனிசாமி மறைந்த முன்னாள் முதலமைச்சர், முன்னாள் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் குறித்து தவறான, அவதூறான தகவல்களை கருத்துகளை உண்மைக்கு மாறாக தெரிவித்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சிகள், கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, மறைந்த திமுக தலைவர் கலைஞர் குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவதூறு! சிபிஐ(எம்) தெரிவித்துள்ள கண்டன அறிக்கை பின்வருமாறு:
பொதுவாகவே தேர்தல் களத்தில் விமர்சனங்களை முன்வைக்கும்போது அரசியல் நாகரீகத்தோடும், முதிர்ச்சியோடும் அவை அமைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அண்மையில் தனது தேர்தல் பிரச்சார உரையில், தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவரும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவருமான கலைஞர் அவர்கள் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் மற்றவர்களால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்;
அவர் தலைவராக இருந்தபோதே மு.க. ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கட்சியைக் கைப்பற்றிவிட்டார்கள் என்று அவதூறு செய்திருக்கிறார்.
கருத்துக்களும், கொள்கைகளும் மோத வேண்டிய களத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் குறித்து உண்மைக்குப் புறம்பாக அவதூறு செய்யும் நிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் வந்தது ஏன் ?
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களையும், இந்திய மக்களையும் வஞ்சிக்கும் கூட்டணி கட்சியான பாஜகவைப் புகழ்ந்து பேச எதுவும் இல்லை. அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி குறித்து சொல்வதற்கும் எதுவும் இல்லை. எனவே தான் தரம் தாழ்ந்து அவதூறு பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார். கட்சி அடையாளங்கள், கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றையெல்லாம் கடந்து அரசியலில் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகளின் எல்லை தாண்டப்பட்டதாகவே இந்த உரையைக் கருத வேண்டி உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தேர்தல் பரப்புரை பொருத்தமற்ற வகையிலும், கண்ணியக்குறைவாகவும் தொடர்ச்சியாக அமைந்து வருவது தேர்தல் ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்படுத்துகிறது என்ற முறையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இதற்குக் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது என தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் அவதூறாக விமர்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கண்டன அறிக்கையில்;
அஇஅதிமுக பொதுச் செயலாளரும் ,எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, தேர்தல் தோல்வி பயம் தொற்றிக் கொண்டு விட்டது. விரக்தியின் உச்சக்கட்டத்திற்கு சென்று விட்டார்.
பாஜக வின் மிரட்டல் உருட்டல்களுக்கு அடிபணிந்து சந்தர்பவாதக் கூட்டணியை பாஜக வோடு உருவாக்கினார்.
ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்துறை, மத்திய உளவுத்துறை (சி.பி.ஐ), மற்றும் வருமானவரித்துறை மூலம் கொடுத்த அழுத்தத்தால், அஇஅதிமுக வை ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்பிற்கு பலிக்கடா ஆக்கிவிட்டார்.
எதிர்காலத்தில் அஇஅதிமுக என்ற கட்சியே இருக்குமா? என்ற நிலையை எடப்பாடி உருவாக்கிவிட்டார்.
இந்த அவலத்திலிருந்து, உண்மையான அஇஅதிமுக தொண்டர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தனிப்பட்ட முறையில் இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அவதூறாகப் பேசிவருகிறார்.
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் அவரது வீட்டிலும், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். கலைஞரின் மகனான முதல்வர் ஸ்டாலின் உட்பட ,குடும்பத்தினர் அனைவரும் கலைஞரை அன்போடும்,கனிவோடும், அக்கறையோடும் கவனித்து வத்தனர் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர்.
இந்நிலையில், கலைஞரை கடைசி காலத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் என எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவதூறாக பேசியதை கேட்டு தமிழக மக்களே கடும் எரிச்சலடைந்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன் வைக்கும் அரசியல் கருத்துகளை அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறமையும்,திராணியும், ஜனநாயகப் பண்பும் இல்லாமல், கீழ்த்தரமான அவதூறுகளை பரப்புவது எதிர்கட்சித் தலைவர் பொறுப்பை வகிக்கும், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு அழகல்ல. இது கடும் கண்டனத்திற்குரியது.
கீழ்த்தரமான, அநாகரீகமான அரசியல் செய்வதை கைவிட்டு, ஆரோக்கியமான அரசியலில் ஈடுபடவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எடப்பாடி பழனிசாமி அவர்களை கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள, திராவிடர் கழகத் தலைவர், பேராசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்துள்ள கண்டனத்தில்,
தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அதிமுக பொது பொது செயலாளராகவும் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கலைஞர் குறித்து தரம் தாழ்ந்த ஆதாரமில்லாத உண்மைக்கு மாறான செய்தியை பேசியுள்ளார்.
பண்பாடற்ற பழனிச்சாமிக்கு மனிதநேயத்தை பற்றி ஒன்றும் தெரியாது, கலைஞர் இறந்த பொழுது முதலமைச்சர் அவருடைய இல்லத்திற்கு சென்று நினைவிடம் அமைக்க அனுமதி கேட்டார் ஆனால் அதற்கு ஆர்எஸ்எஸ் உத்தரவுக்கு அடிபணிந்து மறுத்தவர்தான் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனால் அப்பொழுது நீதிமன்றத்தின் வாயிலாக நினைத்ததை சாதித்து காட்டியவர் நம்முடைய முதலமைச்சர்.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நான் முதல்வராக இருந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அனுமதி கேட்டார் அதற்கு அனுமதி கொடுத்தவர் நம்முடைய முதலமைச்சர்.
ஜெயலலிதா அம்மையார் கடைசி நேரத்தில் எப்படி வைத்து இருந்தார்கள் என்று சொன்னால் அது சரியாக இருக்காது.
அனைத்து வகையிலும் கலைஞருக்கு உதவியாக இருந்தவர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அதனை நேரில் பார்த்தவன் நான் என கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் அவதூறு கருத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்,
நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார். இமை கண்ணைக் காப்பதைப் போல கலைஞரை பாதுகாத்த தி.மு. கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் மீது அக்கிரமமான அயோக்கியத்தனமான அபாண்ட'ப் பழியைச் சுமத்தி உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடித்தளத்தில் வட்டச் செயலாளர் முதல் பல்வேறு பொறுப்புக்களில் பணியாற்றி, திருமணமான ஐந்தாவது மாதத்திலேயே மிசா கைதியாக காவல் துறை கொடுஞ் சிறையில் அடைத்தபோது, சகோதரர் ஸ்டாலின் கடும் சித்ரவதைக்கு ஆளானார். தியாக பிம்பமாகவே அவர் பொதுவாழ்வில் இளைஞர் அணியில் பங்கேற்று தன் சீரிய உழைப்பால் அதன் தலைவராகி, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உழைப்பின் சிகரமாக உயர்ந்து சென்னை மாநகராட்சியின் மேயராகவும், அமைச்சராகவும், துணை முதல்வராகவும், கழகத்தின் கோடானு கோடி தோழர்களின் விருப்பத்திற்கு ஏற்ப முதலமைச்சர் பொறுப்பினையும் ஏற்று அந்தப் பதவிக்கு புகழ் மகுடம் சூட்டினார்.
தன்னை ஆளாக்கி வளர்த்து வார்ப்பித்த தன் தந்தையும், கழகத்தின் தலைவருமான முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பிணிவயப்பட்ட காலத்தில் கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார்.
தமிழகத்தின் காவல் தெய்வமாகத் திகழ்ந்த கலைஞர் மறைந்தபோது, அவர் அறிஞர் அண்ணா மறைந்த வேளையில் எழுதிய நெஞ்சு உருக்கும் இரங்கல் பாவில் வேண்டிக் கொண்டபடி அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்திற்கு அருகிலேயே தி.மு.கழகத் தலைவரை நல்லடக்கம் செய்ய துடியாய் துடித்தார் ஸ்டாலின். அதற்காக தன் சுயமரியாதையையும் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கே சென்று உள்ளம் உருகும் விதத்தில் வேண்டுகோள் விடுத்தும் எடப்பாடி பழனிச்சாமி ஈவு இரக்கம், தயவு தாட்சண்யம், மனிதாபிமானம் சற்றும் இன்றி தளபதி ஸ்டாலின் வேண்டுகோளை நிராகரித்து உதாசினப்படுத்தினார்.
எந்த நிலையிலும் விடா முயற்சியைக் கைவிடாத தளபதி ஸ்டாலின் அவர்கள், வழக்கறிஞர்கள் மூலம் உயர்நீதிமன்றத்தை நாடி தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களை அண்ணா கண் உறங்கும் இடத்திற்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யும் தீர்ப்பை நீதியரசர்கள் வழங்கிய செய்தியை செவியுற்ற மாத்திரத்தில் கண்களில் கண்ணீர் மல்க நெஞ்சுருகி கதறினார். உலகெங்கும் உள்ள கோடானு கோடி தமிழர்கள் இதைக் கண்ணுற்று மனம் கலங்கினர்.
கல்லினும் கொடிய மனம் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் சகோதரி ஜெயலலிதாவின் பாத படிகளுக்கு சேவகம் செய்த தன்மானமற்ற ஒரு நபராவார்.
இனிமேல் இதுபோன்ற அவதூறு கருத்துக்களை அவர் கூறுவாரானால் என் தாக்குதல்களுக்கு அவர் பதைபதைத்து பின்னங்கால் பிடரியில் அடிபட அரசியல் களத்தில் ஓட நேரிடும் என எச்சரிக்கை செய்கிறேன்.
Also Read
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!