Tamilnadu

“கோவிட் காலத்தில் கைதட்ட சொன்ன மோடி.. இப்போதும் மோடி அரசு திருந்தியபாடில்லை..” - திமுக இளைஞரணி விமர்சனம்!

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெறும் போர் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதோடு, டீ, இட்லி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு விலைகளும் ஏற்றம் கண்டுள்ளது. இப்படி இருக்க, சில பாஜகவினர், சிலிண்டர் தட்டுப்பாடு என்பது பொய்யாக பரப்பப்படும் செய்தி என்று வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், தற்போது உண்மை நிலையை பிரதிமேற் மோடியே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எரிவாயு சிலிண்டர் நெருக்கடியை சமாளிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மோடி எடுக்கவில்லை என்று திமுக இளைஞர் அணி விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

பொறுப்பில்லாத மோடி அரசு!

’கோவிட் பெருந்தொற்றின்போது தயாரானதைப் போல் மேற்கு ஆசிய போர்ச்சூழலிலும் மக்கள் தயாராக வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய நெருக்கடிகள் தவிர்க்க முடியாதவை. அந்த நெருக்கடியை எதிர்கொள்ள மக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அந்த மக்களால் வாக்களிக்கப்பட்டு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடியின் அரசு தயாராக இருக்கிறதா, என்ன ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்பதுதான் மக்கள் இப்போது மோடியைப் பார்த்து கேட்கும் கேள்வி.

மேற்கு ஆசியப்போர் வலுவடைந்த சில நாட்களிலேயே வணிக சிலிண்டர் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. உணவகங்கள் மூடப்படும் நிலை உருவானது. சில கல்வி நிறுவனங்கள் விடுதிகளில் சமைக்க முடியாது என்பதால் விடுதிகளை மூடிவிட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளித்துவிட்டன. ஆனால் பா.ஜ.க அரசு என்ன செய்தது? ‘சிலிண்டர் தட்டுப்பாடே இல்லை, பொய்ச்செய்திகளைப் பரப்புகிறார்கள்’ என்றது மோடி அரசு. ‘வருமான வரி கட்டாத உணவக உரிமையாளர்கள்தான் பொய்ச்செய்திகளைப் பரப்புகிறார்கள்’ என்று கூசாமல் பொய் சொன்னார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர்.

ஆனால் இப்போது மோடியே நெருக்கடி முற்றிவிட்டது என்பதை நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இதுவரை அந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மோடி எடுக்கவில்லை.

ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசோ பொறுப்புணர்வுடன் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

* உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம்!

* MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்!

* தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை.

* உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி.

- இவையெல்லாம் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள். ஆனால் மோடி அரசோ ஒரு துரும்பைக் கிள்ளிப்போடக்கூட தயாராக இல்லை.

கோவிட் காலத்தில் மட்டும் மோடி என்ன செய்தார்? கைதட்டச் சொன்னார், வீட்டுக்கு வீடு விளக்கேற்றச் சொன்னார், ‘கோ கொரோனா கோ கொரோனா’ என்று கூச்சலிடச் சொன்னார், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடக்கவிட்டு இறக்கச்செய்தார். நெருக்கடிகள் முற்றியபிறகுதான் நடவடிக்கைகளை எடுத்தார். இப்போதும் மோடி அரசு திருந்தியபாடில்லை.

’பணமதிப்பிழப்பு’ என்று அறிவித்து அடித்தட்டு மக்களின் மரணங்களுக்கும் துன்பங்களுக்கும் காரணமான, கோவிட் காலத்தில் மக்களைக் கைவிட்ட பிரதமர் மோடி அவர்களே!

தமிழ்நாட்டு மக்கள் 3 நாடாளுமன்றத் தேர்தல்களில் உங்களை முற்றிலும் புறக்கணித்திருக்கிறார்கள். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் உங்கள் கூட்டணியைத் தோற்கடிக்கத்தான் போகிறார்கள். ஆனால் உங்களை நம்பி வாக்களித்த மற்ற மாநில மக்களுக்காவது, பொறுப்புணர்ந்து செயல்படுங்கள் மோடி அவர்களே!

Also Read: “175 இடங்களில் உதயசூரியன்; 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!